புதியவை

ஜெர்மனி மீரா -எழுதும் வர்ணங்களின் வர்ணஜாலம் தொடர் கதை அத்தியாயங்கள் 23-24
ஒரு பார்வை நெஞ்சை இத்தனை வேதனை படுத்துமா ?. ஒரு கேள்வி இப்படி உயிரை துளைக்குமா ?, அவளின் வெறுப்பு அவனை தீயாய் சுட்டது. இத்தனைக்கும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை தான் . ஆனால் அவன் உணர்வுகள் மட்டும் உருக்குலைந்து போயிருந்ததின் காரணம் அவனுக்கு புரியவில்லை .
ஒவ்வொரு ஆணும் தன் மனையாட்டியாக வருபவள் குடும்பத்தின் குத்துவிளக்காக இருக்க வேண்டும் என்றே மனதினுள் மிக ரகசியமாக விரும்புவான் . கலகலப்பாக பேசும் பெண், வாயாடி பெண், தன் கவர்ச்சிக்கு முக்கியம் கொடுக்கும் பெண் என்று பலதரப்பட்ட பெண்களை பெரும்பாலான ஆண்கள் ரசிப்பார்களே தவிர அப்படிப்பட்ட பெண் ஒருத்தி தான் தன் மனைவியாக வர வேண்டும் என்று ஏனோ நினைப்பதில்லை . தன் மனைவி ஒரு தாய் போல் தன்னை அக்கறையுடன் கவனிப்பதை வெளிப்பட ஒப்புகொள்ளாவிடினும் உள்ளே நினைந்து அக மகிழ்வர் .
மயூரி மாதிரி ஒரு அழகான , அமைதியான , பண்பான பெண்ணை அவனது மனமும் நாடியது . அதனால் தான் என்னவோ அவனுடன் வேலை செய்யும் பல ஜேர்மன் மாதுமைகள் அவனை கவர அதீத பிரயத்தனம் செய்வது தெரிந்தும் அவன் விலகியே இருந்தான் போலும்.
ஆனால் ஒரு தேவதையை மனைவியாக கொண்டவன் அவள் அருமை புரியாது குரங்கின் கை பூமாலையாகிறாளே என்பதை அவனால் பொறுக்க முடியவில்லை .அவன் அவளுக்காக மனம் நோகிறான். அவள் அவனை கண்டால் வெறுப்பில் ஒதுக்குகிறாள். பாவம் அவளுக்கு எங்கே தெரிய போகுது அவள் உயிராக மனதில் தாங்கும் துணையவன் இன்னமும் தனது மாயையிலிருந்து வெளிவராமல் கட்டுண்டு கிடக்கிறான் என்பது .
ரமேஷ் துவண்டு போய் கிடந்த மயூரியிடம் வந்தான் . „சாப்பிடுகிறீர்களா மயூரி ?. பாண் இருப்பதை கண்டேன்“ . மெதுவாக எழ முயலும் மயூரியை பார்த்து „கட்டுபோட்டு இருக்கிற கையுடன் ஒன்றுமே செய்ய ஏலாது . அதனால் இன்று நான் சமாளித்து கொள்கிறேன் . உங்களுக்கும் கொண்டு வரவா என்று கேட்கவே வந்தேன் ?“ .
மயூரி தேவையில்லை என்றவாறு மெல்ல தலையை ஆட்டினாள். ரமேஷ் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை . மயூரியின் கண்கள் அவனிடம் எதையோ எதிர்பார்த்தது . „மயூரி இத்தனை இரத்தம் வீணாகி போயிருக்கு . சாப்பிடாமல் இருக்கிறது கூடாது மா . பாணுக்கு ஏதாவது பூசி கொண்டு வாறன் . சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுங்கள் „. ஆனால் அவன் வாயிலிருந்து வரவேயில்லையே .
„ஆ!!“ மயூரி போனவன் திரும்பி வந்தான் . மயூரியின் கண்கள் ஒளி பெற்றன. அவள் பார்வை „சொlல்லுங்கள்“ என்றது . „மயூரி அனோஜா நாளை உங்களை வந்து பார்ப்பதாக சொல்ல சொன்னாள். வேலை முடிந்த பிறகு அவளை நானே கூட்டி வருகிறேன் . காலையில் உங்களுக்கு முடிந்தால் கொஞ்சம் வீட்டை ஒதுக்கி விடுங்கள் . கஷ்டமாக இருந்தால் வேண்டாம் . நான் அனோஜாவிடம் வரத்தேவையில்லை என்று தான் கூறினேன் . ஆனால் அவள் நல்ல மனது எப்படியும் உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று ஒற்றைகாலில் நிற்கிறாள் . அனோஜா ஒரு அற்புத பெண் . அவள் வகிக்கும் உயர் பதவிக்கும் அவளின் அறிவுக்கும் அவளது அந்தஸ்துக்கும் உங்களை வந்து பார்க்க கேட்கிறாளே . அவளை என்னவென்று மெச்சுவது என்று எனக்கு விளங்குது இல்லை“ . ரமேஷின் கண்களில் ஏதோ ஒரு மயக்கம் தெரிந்தது .
மயூரிக்கு சுள்ளென்று இதயத்தில் முள்ளொன்று தைத்தது . அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . „ரமேஷ் ஒரு நிமிடம் நில்லுங்கோ . நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் . நேற்று நீங்கள் முக்கிய மீட்டிங்கில் இருந்தாலும் அவசரத்துக்கு அனோஜா என் விபத்தை உங்களுக்கு அறிவித்திருக்கலாமே . ஒரு நிமிடம் போதுமே கதவை தட்டி சொல்வதற்கு . அதை விட்டு எதற்காக அந்த அர்ஜுனை வைத்தியசாலை கொண்டு செல்ல இங்கே அனுப்ப வேண்டும் . ரமேஷ் எனக்கென்றால் அந்த அர்ஜுனை, அனோஜா வேண்டுமென்று தான் அனுப்பியிருக்க வேண்டும் . எனக்கு அப்படி தான் தோன்றுகிறது“ .
ரமேஷின் கண்கள் கோபத்தில் சிவந்தது . „மயூரி நிறுத்துங்கள் . போதும் . அனோஜா மீது அபாண்டமாக பழி போடுகிறீர்களே . நீங்கள் படுத்து ரெஸ்ட் எடுங்கள் . அதுதான் இப்பொழுது உங்களுக்கு தேவைபடுது போல“ .

„மனதை வேண்டப்படாத இடம் தேடி, ஈடு வைத்து விட்டு திண்டாடும் அவஸ்தை விதியின் விளையாட்டு தானோ ?“

வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 24
விடியலின் மௌனத்தில்
பல விடுகதைகள் பொதிந்திருந்தன
 விடாது துரத்திய
கண்ணில்லா காற்றுக்கு மட்டும்
அறிந்த விடைகள் அவை
விடாது சுள் சுள்ளென்று கையில் வலி தர இடையிடையே அசந்த கண்கள் மயூரியின் மனதையும் சேர்த்து சோர்வை கொடுத்தது . ஆனாலும் அவள் கண்களை மூட விடாமல் கேட்கும் அந்நிய சத்தங்கள் என்னவாக இருக்கும் என அவளை வலுக்கட்டாயமாக மிக உன்னிப்பாக கேட்க வைத்தது .
அவள் கண்கள் இயல்பாக நேரத்தை கணக்கிட்டது . இன்னமும் நேரம் காலை எட்டை தாண்டவில்லை . விடுமுறை நாட்களில் ரமேஷ் மிக தாமதமாகவே விழிப்பான் . வரவேற்பறையிலிருந்து தான் சத்தம் வருகிறது . மெதுவாக எழும்பி சென்று பார்த்தவள் அப்படியே மலைத்து நின்றாள்.
அவள் ஆருயிர் கணவன் அதிகாலையில் எழும்பி வரவேற்பறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தான் . „என்ன ரமேஷ் செய்றீங்க ? . கை நோ கொஞ்சம் குறைந்தவுடன் நானே செய்வேன் . விடுங்கோ இவற்றை ஆறுதலாக செய்யலாம் . உங்களுக்கு கோப்பி கொண்டு வாறதா . கோப்பி இருக்கிற அந்த டப்பாவை மட்டும் எடுத்து தருவீங்க என்றா கொஞ்சம் உதவியாக இருக்கும் . இந்த கையில இன்னமும் சுள்ளென்று வலி எடுக்கிறது“ என்று மயூரி சமையலறை நோக்கி எட்டு எடுத்து வைத்தாள்.
„நானே கோப்பி போட்டு குடிச்சிட்டன் மயூரி . வீட்டை கொஞ்சம் துப்பரவாக்க வேண்டும் . அனோஜா காலையிலேயே உங்களை பார்க்க வாறதா போன்ல சொன்னா . நேரம் சொல்லவில்லை . அவ உங்களை பார்க்க வரும் போது இப்படி அலங்கோலமாக வீட்டை வைத்து வரவேற்பது அநாகரீகம்“ .
„ஓஹோ அனோஜாவின் வருகைக்காக தான் என் கணவன் இத்தனை ஆர்ப்பரிப்போ . நான் இங்கு இயலாமையில் இருப்பது கூட அவர் கண்களுக்கு தெரியவில்லை . ஆனால் அவள் வருகிறாள் என்றதும் என்றும் இல்லாத மாதிரி வீட்டு வேலை செய்கிறாரே“ . மயூரிக்கு அனோஜா மேல் தான் ஆத்திரம் வந்தது . ரமேஷிடம் வரவேண்டிய கோபத்தை ஏன் அனோஜாவிடம் கொள்ள வேண்டும் என்று ஏனோ அந்த பேதைக்கு புரியவில்லை .
அனோஜா வந்து சேர எப்படியோ மதியம் ஆகி விட்டது . அழகான பூச்செண்டுடன், கொஞ்சம் அதிகமாக ஒப்பனையுடன் வந்து சேர்ந்தாள். வந்தவள் ஒரு நெருங்கிய தோழி போன்று கரிசனையாகவும் அக்கறையுடனும் நலன் விசாரித்தாள். தித்திக்க பேசினாள். இவள் பேச்சு மயூரிக்கு சினத்தை மேலும் உண்டு பண்ணினாலும் ரமேஷ் மட்டும் மகுடிக்கு மயங்கிய பாம்பை போல் ரசித்து கொண்டு இருந்தான் .
„என்னைவிட இந்த அனோஜா அழகில் சிறப்பாகவா இருக்கிறாள். அவளிடம் படிப்பும் பட்டமும் இருக்கிறது . ஆனாலும் நானும் அழகிலும் அறிவிலும் அவளுக்கு சளைத்தவள் இல்லையே“ . மயூரி அவளை அறியாமலேயே தன்னை அனோஜாவுடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டாள். „என்ன மயூரி நான் சொல்வது சரிதானே . இப்படி ரமேஷ் அன்பாக பார்த்துக்கொண்டாள் நீங்கள் குணமானாலும் இன்னமும் கை சரிவரவில்லை என்று காரணம் கூறி நன்றாக அவரிடம் வேலை வாங்கலாம்“ . மயூரி ஒன்றும் புரியாது விழித்துக் கொண்டு இருந்தாள்.
ஒருவாறு தான் கிளம்ப வேண்டும் என்று அனோஜா ஆயத்தமானாள் . மயூரிக்கு அப்பாடா என்று இருந்தது ஆனால் அவள் தொடர்ந்து இந்த அர்ஜுனை என்னை இங்கே கூட்டி வர கேட்டேன் . ஆனால் அவன் மறுத்து விட்டான் . அதனால் டாக்ஸியில் வந்தேன் ரமேஷ் ஆனால் இங்கேயிருந்து கூட்டி செல்ல எப்படியும் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சொல்லிவிட்டேன். கடைக்கண் பார்வையை மயூரியிடம் வீசியப்படியே , பாருங்களேன் மயூரி இன்னமும் அவன் வருவதாகவில்லை குறைப்பட்டாள் .

மயூரியின் மனதில் அதிர்ச்சியும் , ரமேஷின் முகத்தில் கோபமும் வெடித்தது . மயூரி அனோஜா வேண்டுமென்றே இப்படி நாடகமாடுகிறாள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டாள் . ஆனால் அவளுக்கு அதற்கான காரணம் தான் இன்னமும் புரிபடவில்லை
.

தொடரும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.