புதியவை

இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வரும் டென்மார்க் ரதி மோகன் எழுதிவரும் "பனிவிழும் மலர் வனம் தொடர் அத்தியாயங்கள்50 -51-52-53"பனி விழும் மலர் வனம்"🌺🌺🌺அத்தியாயம்-50🌺🌺
அந்த நேரம் பூஜை அறையினுள் தீடீரென சிவபூஜைக்குள் கரடி நுழைந்ததுபோல பிரவேசித்த சங்கர் இதைப்பார்த்து கோபமடைந்தான். அவளின் கைகளில் இருந்த சீட்டை பறித்து தாறுமாறாக கிழித்து வீசினான். " மது உனக்கென்ன பைத்தியமா? முற்போக்குச்சிந்தனை கொண்ட பெண்ணென நினைத்தேனே.. சீ நீயா இப்படி? " என்றவன் மாடிப்படிகளில் இறங்கி வேகமாக நடந்து போவது தெளிவாகக்கேட்டது.. அவனின் நடையில் கோபம் துல்லியமாக தெரிந்தது.. அப்போதுதான் மதுமதி தன்செயலை நினைத்து நினைத்து வருந்தி தலைகுனிந்தாள்.மதுமதிக்கு சங்கர்மேல் பரிதாபம் வந்தது. தனது முட்டாள்த்தனத்தால் கல்யாணம் வரை சங்கரை கொண்டு வந்து நிறுத்தி அவன் மனதில் ஆசைகளை வளர்த்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் அவளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அதைவிட சங்கரை குற்றவாளியாக்கி குடும்பத்தவரிடம் அனுதாபம் பெற்றது அதைவிட மகா பாவம்.. உண்மையில் ஆண் என்பவன் ஒரு பெண்ணின்மேல் மெய்க்காதல் கொண்டால் அவளுக்காக எந்த அவமானத்தையும் ஏன் தன்னுயிரைக்கூட கொடுக்க தயங்க மாட்டான் என்பதற்கு உதாரணமாக சங்கர் தெரிந்தான்.
சங்கீதா எதுவும் சொல்லாது மதுமதியின் தோளை ஆதரவோடு தட்டியபடியே அங்கிருந்து அகன்று போய் அழுது கொண்டிருந்த தன் குழந்தையை தூக்கியபடி " மதுமச்சி ..ஒரே மழை இருட்டாக இருக்கிறது.. நாங்க போகப்போறம்..ஏதோ இனி முடிவு உன் கையில்.. " என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள். அந்தக்கணங்களில் மதுமதி தான் ஒருத்தி மட்டுமே இவ்வுலகிலே தனித்துவிடப்பட்டவளாய் உணர்ந்தாள். அப்போதுதான் அவளுக்குள் உறங்கிங்கொண்டிருந்த புதுமைப்பெண்ணிற்குரிய ஒரு எழுச்சி விழித்துக்கொண்டது.. அவள் இனியும் மௌனமாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் கண்ணீருக்கு தான் தத்துப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதை புரிந்தாள் ..தெளிந்தாள்.
இனி ஒருபோதும் அவள் அழக்கூடாது.. அழுவது கோழைத்தனம் என்பது அவள் மனதின் முடிந்த முடிவானது.. பல மாதங்களாக அனசனுடன் தொடர்பறுந்துபோயிருந்த தொலைபேசியை எடுத்து அவன் பெயரை தேடி அழுத்திய நொடியில் கம்பீரமாக அனசனின் குரல் கேட்டது.. அவளால் உடனே பதிலளிக்க முடியவில்லை..எப்படி ஆரம்பிப்பது? எதை பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள். எதிர் முனையில் அனசன் "" மது பேசு.. ஏனிந்த மௌனம்.. "ஆனந்த பரவசத்தில் அவனின் குரல். திக்கி திக்கி அவள் " அனஸ் நீ நலமா" என தொடங்கி டெனிஸ் மொழியில் அவர்களின் சம்பாசணை தொடர்ந்தது. தன் நிலையை தெளிவாக மதுமதி எடுத்துரைத்தாள். அனசனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டான். இது கனவு என்பதுபோல் ஒரு எண்ணம் அவனிடம் இருந்தது.இந்திரலோகமே தரையிறங்கி வந்ததான ஒரு உணர்விலே அனசன் மிதந்தான். அவள் நல்லாக வாழ வேண்டும் என்பதற்காக தன் காதலை துறக்க நினைத்தவனுக்கு அவளே திரும்ப வந்து காதலோடு இனிமையாக பேசியது வானத்திலே பறப்பதுபோல் இருந்தது. காற்றினிலே கலந்து அவர்களின் காதல் கீதமிசைத்தது. நிமிடங்கள் பல மணிகளாயின.. தொலைபேசி வைக்கப்படவே இல்லை.. பிரிந்தவர் கூடினால் சொல்லவும் வேண்டுமா...
இவற்றை எல்லாம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்த சங்கரின் மாமாவும் மாமியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.. " பாவம் மது ... அவள் மகிழ்ச்சியாக இருக்க வேணும் .. சங்கர் இப்படி திடீரென மாறுவான் என நான் நினைக்கலைப்பா." என மாமி மாமாவின் காதுகளில் கிசுகிசுக்க அனுதாப அடிப்படையில் அவளின் காதலுக்கு அங்கு பச்சைக்கொடி காட்டப்பட்டாயிற்று..
சங்கர் வீடு வந்தபோது சாமம் 12 ஐ தாண்டி இருந்தது. நீண்ட காலத்தின் பின் குடித்து இருந்தான். எல்லோரும் நித்திரையில் இருந்தார்கள்.. தட்டித்தடுமாறி படிகளில் ஏறினவன் . தன் அறையினுள் நுழைந்தான். அவனுக்கு வீடு சுற்றுவது போல் இருந்தது. உடுப்பை மாற்றாமலேயே கட்டிலில் சாய்ந்தான்..
"பனிவிழும் மலர்வனம்"🌺🌺🌺அத்தியாயம்-51🌺🌺🌺
சங்கரின் மனமும் உடலும் சோர்வுற்றிருந்தது உண்மைதான். ஒரு கிழமைக்கு மேலாக அவன் வைத்தியசாலைக்கு போகாமல் வீட்டில் நின்றமைக்கும் காரணமே குறித்த திகதியில் அவனின் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்ற மனத்தாக்கமே, இல்லாவிட்டால் அவனின் நண்பர்கள் மத்தியில் கேலிக்குரிய பேசுபொருளாக்கப்படுவான் என்ற வேதனையும் அவனிடம் மிகுந்து இருந்தது. அவனின் தொழிலும், அசத்தலான அழகும் டெனிஷ் , தமிழ் யுவதிகளின் காதல்வலை விரிப்புக்குள் சிக்காமல் இருந்தமைக்கும் காரணமாகிப்போனவள் இந்த முறைப்பொண்ணு மதுமதி என்றால் தப்பே இல்லை. அவள் மேல் கொண்ட கண்மூடித்தனமான ஒருதலைக்காதல் இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப்பார்க்க முடியாத அளவு தடுத்து இருந்தது என்பது மறுக்க முடியாத நிஜமே.
எப்போதும் அவனோடு ஒன்றாக வேலைசெய்யும் தாதி சந்தியா என்ற பொண்ணு இவன்மேல் அளவுகடந்த நேசம் கொண்டவள். ஒருநாள் அவளே அவனிடம் நேரடியாகவே தன்காதலை தெரிவித்திருந்தாள். அதற்கு பதிலாய் ஒரு மென்புன்னகையுடன் நழுவியிருந்தான் சங்கர். ஆனால் இன்று அவளைத்தேடிப்போய் தன் சங்கடநிலைமையை எடுத்து விளக்கி கூறியபோது எதுவித ஆட்சேபமும் இன்றி அவள் சம்மதித்தது அவனுக்கு எல்லையற்ற சந்தோசத்தை அள்ளித்தெளித்தது. இந்த சிக்கலான பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்ற சந்தோசத்தில் நண்பர்களுடன் கூடி ஒரு கேளிக்கை விருந்தொன்றில்தான் அதிகப்படியாக குடித்திருந்தான் சங்கர். சந்தியா மதுமதியைவிட நிறத்திலும் அழகிலும் சற்று கம்மியாக இருந்தபோதும் உள்ளத்தினால் உயர்ந்தவள், அழகானவள்.. கண்களில் தெரியும் கருணையும் ,அன்பும் , மென்சிரிப்பும் அவளிடம் பேசுவோரை திரும்பபேச தூண்டும். சங்கரின் வலதுகையைப்போல வைத்தியசாலையில் உலா வருபவள். இறுதிப்போரில் தனது பெற்றோரை இழந்து சொல்லெணாத்துன்பங்களைத்தாண்டி டென்மார்க் வந்து இன்று ஏதோ ஒரு மனதிற்கு பிடித்தமான வேலையோடு தானுண்டு தன்வேலையுண்டு என்று சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருப்பவள்.மழை விட்டாலும் தூறல் போகாதமாதிரி போர்விட்டுச்சென்ற ரணங்கள் இன்றும் அவள் நெஞ்சோரம் மாறாமலே ஆழப்பதிந்து போனதொன்று. இதற்கு நிவாரணம் பெற்றுத்தர எவராலும் முடியாது. இந்த வைகாசி மாதம் என்றாலே அவளின் வாழ்க்கை இரத்தக்கண்ணீரில் எழுதப்பட்ட காலமது. இந்த மாதத்தில் தன் கல்யாணம் என்றதும் அவளுக்கு துளிகூட விருப்பம் இல்லாதுஇருந்தபோதும் அவள் நேசிக்கும் சங்கருக்காக தலையசைத்தாள் சந்தியா.
சங்கருக்கு தன் தாய்க்கு அவளை என்ன மதம் ,ஜாதி என சொல்லி அறிமுகப்படுத்துவதென்பதில் பெரியதொரு உறுத்தல் இருந்தது. அவளைப்பற்றி எந்த விபரமும் அவன் அறிந்திருக்கவில்லை..ஆசாரமான குடும்பத்திற்குள் வரும் புதியஉறவு இது. குலம் கோத்திரம் பார்ப்பதில் தப்பேதும் இல்லை என்பதும் அவன் பக்க நியாயமாகவும் இருந்தது. எது எப்படி இருந்தாலும் அவசரத்தில் சங்கர் கூறிய ஒரு பொய்யை உண்மையாக்கும் சமயத்தில், தன் மனதிற்கு பிடித்தவள் சந்தோசமாக வாழவேண்டும் என்ற உயரிய நோக்கம் ஒன்றே டாக்டர் சங்கர் மனதில் இருந்தது.
எப்போதும் அதிகாலையில் கண்விழிக்கும் சங்கர் எழுந்து வராததை பார்த்த சங்கரின் தாயார் அறைக்கதவை மெல்லமாக தட்டினார்.. தாயின் குரல் கேட்டதும் அவசரஅவசரமாக உடையை கலைந்து லுங்கிக்குள் தன்னை நுழைத்தவன் ஓடிப்போய் கதவைத்திறந்தான். "" குட் மோனிங் மை மம்மி" என சிரித்தபடியே கதவைத்திறந்தான். " சரி சரி மோனிங் .. என்ன ஐயா ஹாஸ்பிட்டல் போகலை" என்றபடி குளித்திட்டு வா கண்ணா.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். என்றபடி அங்கிருந்து சமையற்கட்டிற்குள் நுழைந்தார்.
தாயகத்தில் முற்பகலைத்தாண்டி இருந்தது.. மதுவின் அம்மா மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்., அந்த நேரம்தான் மதுவின் அக்கா தோளில் பிள்ளையை சுமந்துகொண்டு வேகாத வெயிலில் பொடிநடையாக வேர்த்து விறுவிறுக்க வந்திருந்த கோலத்தைப் பார்த்து தங்கை கொல்லென சிரித்தாள்.. " உனக்கு எனைப்பார்க்க சிரிப்பாக கிடக்கு.. என்ன? " செல்லமாக தன் தங்கையை கோபித்து்கொண்டு தாயிடம் சென்று குழந்தையை கொடுத்தாள்.. "" ஏண்டா இந்த வெயிலுக்கை நடந்து வந்தாய்.. ஒரு ஓட்டோவை பிடித்துக்கொண்டு வாறதை விட்டிட்டு... சாயந்தரமாக அவர் வேலையாலை வந்தாப்பிறகு வந்திருக்கலாமே"" என மகளை அன்பாக கடிந்தபடி தன் பேரப்பிள்ளையை தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டார்.
மதுமதியின் அக்காள் தாயிடம் சொல்லவந்த விடயத்தை எப்படி அதை ஆரம்பிப்பது என குழம்பி தவிப்பது முகத்திலே தெட்டத்தெளிவாகத் தெரிந்தது.. அக்காளை உன்னிப்பாக அவதானித்த தங்கை " என்ன ஆச்சு அக்கா? உன் முகமே சரியில்லையே., அத்தாரோடை சண்டையோ"" காதோரம் கிட்ட வந்து கிசுகிசுத்தாள். " ஏய் பேசாமல் இருடி.. எனக்கொன்றும் இல்லைடி.. மதுவை கட்ட சங்கர் மாட்டன் என்றிட்டானாம்.. அனசனை கட்டி வைப்பம் என மாமி சொன்னா.. அதை அம்மாக்கு விபரமாக எடுத்துச்சொல்லத்தான் ஓடி வந்தனான்..."" என்றதும் தமக்கையை கட்டியணைத்த தங்காள்"" நான் சொன்னேனே உண்மைக்காதல் ஒருபோதும் அழிவதில்லை.. கடவுளே உனக்கு நன்றி... "" என அக்காளை பிடித்து ஒரு சுற்று சுற்றினாள்.. " அடச்சீ விடு கையை.. இப்ப அம்மா அழப்போறா என்ற டென்சனிலை நான் கிடக்கேன்.. இப்ப இது வேறை.. எப்படியடி.. நம்ம குலத்திற்கை வேதக்காரனை அதுவும் வெள்ளைக்காரனை சேர்ப்பதோ??சங்கர் செய்த வேலையை பார்த்தியா? மது பாவம்""" என்றபடி சாப்பாட்டு மேசையில் பரிமாறுவதற்கு தயாராக சப்பாட்டை எடுத்து வைத்தாள்.
எல்லோரும் ஒன்றுகூடி உணவு அருந்தும் சமயம் பார்த்து மெல்ல மதுமதி பற்றிய தகவலை தாயின் காதில் போட்டாள் மதுவின் அக்காள். தாயின் முகத்தில் கோபமும், கவலையும் ஒரே நேரத்தில் பிரதிபலித்தபோதும் பொறுமையோடு கூறினார்" எல்லாம் விதிப்படியே நடக்கும். படைத்தவன் எழுதிவைத்ததை மாற்றவா முடியும்? எல்லாம் நன்மைக்குத்தான்.., இரு மனங்கள் ஒத்துப்போனால்தானே இல்லறம் சிறக்கும்..நல்லது கல்யாணத்திற்கு முன் சங்கரின் குணம் தெரிந்தது நல்லதாகப் போச்சு.." இதைக்கேட்ட அக்காளும் தங்கையும் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன்பிறகு டென்மார்க்கில் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒன்றும் விடாமல் மதுவின் அக்காள் கூறிமுடித்ததும் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதேசமயம் மதுவிற்கும் அனசனுக்கும் கல்யாணம் இந்து முறைப்படி நடக்கும் என்பதில் மனதில் ஒரு திருப்தி அந்த தாய்க்கு இருந்தது. " எப்படித்தான் இந்த என்ன காதலும் கத்தரிக்காயும் என்றாலும் வெள்ளைக்கார குடும்ப மருமகளாக எப்படித்தான் சமாளிப்பாளோ?? " என்ற ஏக்கத்தோடு கூறியதும் , அதற்கு மதுமதியின் சுட்டித்தங்கை " அம்மோய்..., உங்களுக்கு ஒன்னுமே தெரியாது.. அங்கையெல்லாம் உந்த மாமி மருமகள் சண்டை இல்லைம்மா.. அவங்க அவங்க தங்க வாழ்க்கையை பார்த்துப்பாங்க.. அவங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்லீங்க.. எந்தப்பொறுப்பும் இல்லைமா.. உங்க மகள் ராணியாட்டம் இருப்பாக.. நம்புங்க.. அம்மா.."" என நையாண்டிப் பேச்சும் சிரிப்புமாய் தங்கை சொல்லி முடித்தாள்.
எட்டி தலையில் ஒரு குட்டு போட்டு " ஏய் வாலு ஏதோ டென்மார்க் போய் பார்த்த மாதிரி கதை அளக்கிறாய்" என அக்காள் சொல்ல, அக்காளின் கைகளை பிடித்தபடி"" ஐயோ அம்மா வலிக்குது" என மதுவின் தங்கை அலறினாள்.
..


"பனிவிழும் மலர் வனம்"🌺🌺அத்தியாயம்-52🌺🌺🌺🌺
மதுமதியின் தங்கையின் துடுக்குத்தனமான பேச்சைக்கேட்டு தாயார் மனம்விட்டு சிரித்துக்கொண்டார். உணவு அருந்திய கையோடு அக்காள் தன் குழந்தையோடு புறப்பட ,சொன்ன நேரத்திற்கு ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றது. அவசரஅவசரமாக சாப்பாட்டை அத்தானுக்கு கொடுப்பதற்காக எடுக்க அடுக்களைப் பக்கம் ஓடியவள் பாத்திரங்களை கீழே உருண்டு விழுந்த சத்தத்தில் தாயார்"" எல்லாத்திலையும் நிதானம் வேணும் .. சாப்பாடு கட்டி மேசையிலை வைத்துக்கிடக்கு.. அதற்கேன் இந்த பாத்திரங்களை போட்டு உடைக்கிறாய்.. எடுத்திட்டு கெதியாக வா.."" தாயாரின் அதட்டலில் பதறியபடி அக்காளிடம் உணவுப்பொட்டலத்தை அவசரஅவசரமாக கொடுத்து அனுப்பியபடி""" அம்மோய் அதம்மா அக்காளின்ரெலிபோன் வந்த அவசரம் மா.. " என்றபடி கைத்தொலைபேசியை தாயிடம் நீட்டினாள். மதுமதிதான் பேசினாள்.. அவளின் கணீரென்ற குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.. தாயாருக்கோ மகளின் மேல் ஒரு வித பரிதாபமும் மகிழ்ச்சியும் கலந்த தொனியில் ""மதும்மா எதற்கும் யோசிக்காதே.., கல்யாணம் வரை வந்த சங்கர் இப்படி மனம் மாறிப்போவான் என நான் நினைக்கவில்லையே..எல்லாம் நன்மைக்கே...மறப்போம் மன்னிப்போம் என இருக்கணும்.. எப்படிம்மா அனசனுக்கு இப்ப?? நான் கேட்டதாக சொல்லம்மா.. நீ மட்டும் மதம் மாறிடாதை.. அவனை சைவக்காரனாக மாற்றிப்போடு... "" தாயின் குரலில் ஏக்கத்தோடு வந்த அந்த எதிர்பார்ப்பு நெஞ்சை மெல்ல தாக்கிச்செல்ல"" அம்மா எனக்கு தெரியாதா என்ன.. கோயிலோடு வாழ்ந்த நான் மாறிடுவேன் என நினைக்கிறீங்களா அம்மா... யோசிக்காதைங்க .. அனசு இப்ப நல்லா இருக்கான்."" என்றாள்.. தன் அக்காளுடன் பேச வேண்டும் என்ற ஆசையில் தாயிடம் தொலைபேசியை பறித்தெடுத்த செல்லத்தங்கையவள் கொல்லைப்புறத்திற்கு ஓடினாள்"" அடியே மது நீ பெரிய ரவுடிதானே.. உன் காதலுக்கு பச்சைக்கொடி பிடிக்க சங்கரை இப்படி எல்லார்முன்னிலையிலும் தலைகுனிய வைத்திட்டியே பாவி"" என சொல்லி கோபித்துக்கொண்டாள். அவள் தன் அக்காளுடன் எப்போதும் தோழி போலவே பழகுவாள்.. தன் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை என்றாலும் அம்மாவுடன் கூட பகிர தயங்கும் தங்கை அக்காளுடன் மனம் விட்டு பேசுவதிலும் அவள் ஆலோசனையை கேட்டு நடப்பதிலும் தயங்குவதில்லை.. அந்தளவு அன்புப்பிணைப்பு அவர்களிடம் இருந்தது. "" ஏய் வாலு.. சும்மா தொண தொண என பேசாதே.. நானா அவனை தலைகுனிய வைச்சேன். அவன் தன் மேல் தானே பழியை போட்டுக்கொண்டான் " மதுமதியின் பேச்சிலே நிதானம் இருந்தது. தன் தங்கையிடம் மணிக்கணக்கில் தன் காதலன் அனசனைப்பற்றி ஆசையோடும்,பெருமையோடும் பேசிப்பேசி சிரித்தாள். அவனுக்கும் அவளுக்கும் இடையில் வந்த சிறு ஊடலே இந்த நிமிடம்வரை பூதாகார வடிவில் இடையில் குறுக்கிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணமாகி முகம் கொடுக்க வேண்டிய நிலையின் கதையை சொன்னபோது அவள் குரலில் தழுதழுப்புத்தெரிந்தது.. இல்லையேல் பேசும் அந்தக்கணங்கள் ஒவ்வொன்றிலும் அவள் மனதில் ஆயிரம் மொட்டுக்கள் விரிந்து மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்..
அனசன் வீட்டிலோ மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது. இந்து முறைப்படியான கல்யாணம் என்பதில் அனசனின் தங்கை அனெற்றாவுக்குகொள்ளைப்பிரியம்.,அவளுக்கு தமிழ் சேலை உடுத்திக்கொள்வதில் அதிகளவு நாட்டம் இருந்தது. அவள் அதிகம் Bolly Wood படங்கள் விரும்பிப்பார்ப்பதால் அந்த நடிகைகள் போல உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற கனவும் இருந்தது.. அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தாள் அனெற்றா.. . மதுமதி வீட்டாரின் சம்மதம் கேட்ட நேரத்தில் இருந்து அனசன் கனவு வானிலே மிதந்து கொண்டிருந்தான்.. காதலியாக கனவிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டிருந்தவள் இன்னும் சில நாட்களில் திருமதி அனசனாக தன்னை மாற்றப்போகிறாள். தன்னோடு ஆயுள்வரை ஒன்றாக வாழப்போகிறாள் என்ற நினைப்பில் திளைத்துப்போயிருந்தான். அவனுக்கு தன் கால் ஒரு ஊனமானது கூட பெரிதாகத் தெரியவில்லை..அந்த சந்தோசத்தை அனுபவிக்க எழும்பி நின்று நடனம் ஆட வேண்டும்போல் இருந்தது..தன் இயலாமையை நினைத்த அந்தகணம் மனம் சோர்வுற்றான்.. உடனேயே மதுமதியை பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனை உறுத்தியது.. " மது உனை இப்பவே பார்க்கணும்.. பிளீஸ் வருவாயா? "கெஞ்சினான்.. "" அனஸ் என்ன விளையாடுறியா..கல்யாணவேலை இங்கு எக்கசக்கம்.. நகரக்கூட முடியலைடா.. இந்த நேரம் அந்த தமிழ் புத்தகத்தை வாசி.. அப்பத்தான் நம்ம சனத்தோடை பேசலாம் .. புரியுதா" அதட்டலோடு சொன்னாள்.. அவளின் இந்த பதில் அனசனை சோர்வுற வைத்தது. மௌனமானான்.. "" அனஸ் என்னடா பேசடா.. பிளீஸ்.. " அவளின் கெஞ்சலுக்குப்பிறகு "" சரி மது இப்பவே இந்த அதட்டல்.. கல்யாணத்தின் பின் எந்நிலை என்னவாகுமோ.. யேசுவே எனைக் காப்பாற்றும்..."" இதைக்கேட்டு இருவரும் மனம்விட்டு சிரித்தனர்.
மெல்ல எட்டி கூடத்தைப்பார்த்தாள். மாமி கல்யாணச்சமையலுக்குத் தேவையான சாமான்களை பட்டியலாக எழுதிக்கொண்டிருந்தார்.
மாமா ஞாயிறுவாரப்பத்திரிகையில் மூழ்கிப்போயிருந்தார். சங்கர் தொலைபேசியில் சிரித்து பேசுவது கேட்டது.. நிச்சயம் அது சந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் . அனுமானித்துக்கொண்டாள். அனசனை பார்க்கவேண்டும் போல மதுவிற்கும் இருந்தது.. எப்படி இங்கிருந்து போவது?? இத்தனை வேலைகளுக்கு இடையில் என்ற கேள்வியோடு நேரத்தைப்பார்த்தாள். நேரம் முற்பகல்10.00 மணியை காட்டியது. அவள் வீட்டை அழகாக ஒழுங்குபடுத்தி இருந்தாள். உடுப்புக்கள் தோய்க்கும் வேலை பாக்கி இருந்தது.. இன்று நல்ல வெயிலாகவும் இருந்தது.. பறவைகள் பாடும் ஓசை மனதிற்கு இதமாக இருந்தது.. கோடைக்காலத்தின் அழகே தனி.. எங்கும் மலர்களின் வர்ணஜாலங்கள்.. டென்மார்க் அழகுமயமாக காட்சியளித்தது.. கண்களை பறித்தது. ஜன்னலினூடு வீதியை நோக்கினாள்.. கைகோர்த்தபடி ஜோடி ஜோடியாக சிரித்து பேசிச்செல்லும் காதலர்கள்.. கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை ரசித்தபடி காலாற நடக்கும் பல மனிதர்கள். ஞாயிற்றுக்கிழமை உல்லாசமான ஓய்வுநாள்..
இன்று சந்தியாவை தன் தாய்க்கு அறிமுகப்படுத்துவதாக சங்கர் சொல்லியிருந்தது மதுவின் நினைவுக்கு வந்தது. மாமி கேட்கும் கேள்விகளுக்கு அவளை தயார்படுத்தும் பொறுப்பை சங்கர் மதுவிடம் விட்டிருந்தான்..
சங்கர் அருகே சென்றவள் " சங்கர் இங்கு பாரு... நான் சந்தியாவிடம் போயிற்று அவளை கூட்டி வரட்டுமா? வாற வழியில் அனசையும் பார்த்திட்டு வாறன்.. சரியா"" சங்கர் சிரித்தபடி"" ஆகா அடிப்பாவி... அனசை பார்க்கப்போறாய் என முடிவாக்கிட்டு...இதுக்கை சும்மா எனக்கு உதவி செய்யுற மாதிரி.. நடிக்காதை.." "" வ்வ்வ்" என நெளித்தபடி "" மாமி நான் ஒருக்கா கடைக்குப்போட்டு உங்க வருங்கால மருமகளோடு வாறன்.. "" என்றாள்.. " சரி மது கவனம் காரிலை போறது... நான் சமைக்கப்போறன்" என்றபடி சமையற்கட்டுக்குள் நுழைந்தார் மதுவின் மாமி .
மதுவை நேரில் கண்டபோது அனசன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இடையோடு அணைத்து உதடுகளில் முத்தம் ஒன்றை கொடுத்தான்.. அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். திராட்சைத்துளிகள் பருகிய மயக்கத்தில் அவள் திண்டாடினாள்., அவனை தள்ளவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல்...அப்பப்பா சில நிமிடங்கள் அவள் பட்ட இன்ப அவஸ்தை வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனின் நெருங்கிய அருகாமையும் அந்த முதல் முத்தமும் தந்த தித்திப்பில் கண்களை மெல்ல மெல்ல மூடினாள்.. அவள் காதுகளில் " மது மது என்னுலகமே நீதானடி.." அனசன் முணுமுணுப்பது மட்டும் கேட்டது.. அந்த மயக்கத்தில் இருந்து விழித்தவளாய் அவனை விலத்தியபடி தன் உதடுகளையும் கன்னங்களையும் தடவி பார்த்து வெட்கத்தால் முகம் சிவந்தாள்.. பெண்மைக்கான நாணம் அவளுக்கு போர்வை போர்த்தியிருந்தது.
..


"பனிவிழும் மலர் வனம்"🌺🌺🌺அத்தியாயம்- 53❤️❤️❤️
அனசனை விட்டு நீங்க மனமின்றியே அங்கிருந்து சந்தியாவிடம் வந்தாள் மதுமதி.இருவரும் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை செய்வதால் ஏற்கெனவே சந்தியாவை தெரிந்திருந்த போதும் இதுவரை ஒருவரோடு ஒருவர் பேசியது கிடையாது . மதுமதியை கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றாள் சந்தியா. சந்தியா சிரித்தபடியே " சங்கர் உங்களைப்பற்றி நிறைய சொன்னாரு...,உங்க காதலைப்பற்றி கதைகதையாக சொன்னாரு..நீங்க ரொம்ப அதிஸ்டசாலி காதலித்தவனையே கட்டிக்கப்போறீங்க.. நானும் சங்கரை ரொம்ப விரும்புறன்.. ஆனால் எப்படி உங்க மாமியின் சமய ,சாதி சம்பிரதாயத்திற்கு முகம் கொடுக்கப்போறேனோ தெரியலை.. நான் மாமிசம் விரும்பி சாப்பிடுவேன்.. இனி அதையெல்லாம் ஒதுக்கி மாமிக்கு ஏற்ற மருமகளாக சைவப்பெண்ணாக மாறிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.உண்மையை சொல்லப்போனால் தாயகப் போருக்கு பின் நான் திருநீறு பூசியது கிடையாது... கோயிலுக்குப் போகிறதேயில்லை.. என் அம்மா அப்பா துடிதுடித்து சாகும்போது கும்பிட்ட தெய்வங்கள் எங்கே போனவை?? என மனதிற்குள் திட்டுவேன்..தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன் தெரியுமா?? என் இருண்ட வாழ்வில் நான் தேடிய ஒரு மின்மினிதான் சங்கர்..அவரு எனக்கு கிடைப்பார் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நீங்களே எனக்கு விட்டு தந்து இருக்கிறீங்க.." என படபடவென சந்தியா சொல்லும்போதே கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்திருந்தது. சந்தியாவை தோளோடு அணைத்து ஆதரவாய்"" சந்தியா இனி நீங்க அழக்கூடாது.. சங்கர் உங்களை பூப்போல பார்த்துக்குவான்.. மாமி ரொம்ப நல்லவா.. கொஞ்சம் விரதங்கள் கோயில் என வீட்டில் சில கட்டுப்பாடுகள் அதிகம்தான்.. கடல் கடந்தாலும் கடந்து போகாத அவரின் சாதி ,சமயம் என ஒரு வட்டத்திற்குள் வாழ்கிறாங்க..அதுக்கு நீங்க அவாவோடு ஒத்துழைத்தால் நல்லது...., மாமியார் மெச்சும் மருமகளாக மாறுங்க..," என கூறியதும், மெல்ல சிரித்த சந்தியா"" நிச்சயமாக மது" என்றபடி இருவரும் வந்து காரில் ஏறினர்.
இவர்களை சுமந்துவந்த கார் வீட்டை அடைந்தபோது வெளியில் தோட்டத்தில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். உச்ச வெப்பநிலை 26 பாகையாக இருந்தது.
தோட்டத்தில் பூத்துக்குலுங்கின எழிலான பலவர்ணரோஜாக்கள்.. அந்த அழகை இரசித்தபடி மாமியும், மாமாவும்.. அருகே கணணியில் மூழ்கியபடி சங்கரும்... கூட்டிக்குள்ளே கீச் கீச் என்று மகிழ்ச்சியுடன் காதல் மொழி பேசும் காதற்பறவைகள்( love birds)..
சங்கர் ஆசைப்பட்டு இவற்றை வாங்கிவந்திருந்தான்.. அருகே வெள்ளை வெளீர் நிறத்தில் இரு அழகிய முயல்கள் .. சங்கர் இவற்றுடன் பேசுவதோடு சரி.. மற்றும்படி அவற்றை பராமரிக்கும் பொறுப்பு எல்லாம் தாயாரிடமே ஒப்படைத்திருந்தான்..
அன்பாக இருகரம் நீட்டி வருங்கால மருமகளை வரவேற்று தன்னருகில் சந்தியாவை அமர்த்திய மாமியார் சந்தியாவை ஏற இறங்க பார்த்தவிதம் சந்ந்தியாவுக்கு கூச்சத்தை வரவழைத்தது.. சங்கரோ கண்களை சிமிட்டியபடி மெல்ல சிரித்தான்.
" அழகாய்த்தான் இருக்காள்., ஆனால் கொஞ்சம் நிறம் குறைவாக இருக்காளே.. " என மனதில் நினைத்தபடி சந்தியாவைப்பற்றி எல்லாம் விசாரித்துக்கொண்டார் சங்கரின் தாயார். தன் மகனைப்பற்றி பேசும்போது மட்டும் ஆயிரம் மின்விளக்குகளின் வெளிச்சம் அந்தத்தாயின் முகத்திலே தெரிந்தது.. பொதுவாக தாய்மாருக்கு பெண்பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளிடம் பாசம் அதிகம் ஜாஸ்தி.மகன் ஆசைப்பட்டு எது கேட்டாலும் இதுவரை மறுப்பு தெரிவித்ததே கிடையாது .. தாயார் ஆசைப்பட்ட மதுமதி மட்டும் கைமாறிப்போவது கவலைதந்தபோதும் குலமறியாத சந்தியாவை தன் மகனுக்காக ஏற்றிருக்கும் அந்த நற்பண்பை எண்ணி மாமா கூட உள்ளூர மகிழ்ந்து தன் மனைவியின் பெருந்தன்மையை பார்த்து வியந்தார்.. அந்த சமயத்திலே பொன்னுருக்கு வைப்பதற்கான திகதியும் தெரிவிக்கப்பட்டு அதன் பின் இருவரும் கல்யாணம்வரை ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது என்றும் அறிவுரை கூறினார்.
இவ்வாறாக எல்லோரும் கலகலப்பாக பேசியபடி பரிமாறப்பட்ட வனிலா ஜஸ்கிறீமை சுவைத்தபடி இருந்தனர். இவர்கள் கதைக்கும் சத்தத்தைக்கேட்டு பக்கத்து மாமியும் தான் செய்த அல்வாத்துண்டுகளோடு வந்ததும் வராத துமாய் "" என்ன ஒரே அமர்க்களமாக இருக்கு.. அடி ஆத்தி யாரிந்த பொண்ணு... புதுசாக இருக்கே.." என்றபடி.. " மதும்மா இந்தாம்மா ஆத்திலை இன்னைக்கு கொஞ்ச அல்வா செய்தேன்.. எனக்கு ஒரு காப்பி எடுத்து வாம்மா.. என்றபடி அமர்ந்தார்.. சங்கரின் தாயார் சந்தியாவை வருங்கால மருமகள் என அறிமுகப்படுத்த"" இதென்ன குத்தாட்டமாய் கையிற்குள் மருமகளை வைத்திட்டு ஏனிங்கு புதுசா?என்ன கலிகாலம்... இளசுகள் ஆளை அடிக்கடி மாத்துற காலமாச்சே.. எங்களுக்கு கல்யாணசாப்பாடு வந்தாப்போதும்.." என அங்கலாய்ப்புடன் பேசிமுடித்தார் தன் பாணியில்.
வீட்டில் கல்யாணம் களைகட்டத்தொடங்கியது.
மண்டபம் , மணவறை, அலங்காரம் தொடக்கம் சாப்பாடுவரை எல்லாம் ஓடர் கொடுத்தாகி விட்டது. மாமியின் மனதில் ஒரு திருப்தி.. மகனின் கல்யாணம் நின்று விடுமோ என்ற பயம் அகன்று இருந்தது.. இன்னும் ஒரேயொரு வாரத்தில் கல்யாணம் ..
அந்திவானம் மெல்ல சிவக்கத்தொடங்கியது.. கதிரவனும் மேகத்தினிடை மறைந்துகொண்டிருந்தான். சந்தியாவை கூட்டிக்கொண்டு மதுமதியும் போயிருந்தாள்..பக்கத்து வீட்டு மாமியும் கிளம்பி போயிருந்தார்.. சங்கர் தாயிடம் வந்து மெல்லக்கேட்டான் "" என்ன அம்மா....மருமகள் எப்படி இருக்காள்? புடிச்சுதா? " என்றபடி புத்தகங்கள் அடங்கிய பொதியை கொண்டுவந்து மேசைமீது வைத்தான்.. ஆவலோடு தாயார்"" மருமகள் நல்ல குணமுள்ள பிள்ளைபோல இருக்கு.. அதுசரி என்ன பெரிய பார்சல்?? என்றதும் " அம்மா இது இரகசியமாகவே இருக்கட்டும் ., மதுவிற்கு தெரிய வேணாம் .. கல்யாணம் நடக்கும் நாளன்று வரவேற்புபசாரத்தில் மதுவின் கவிதைகளின் தொகுப்பை நூலாக வெளியிடப்போகிறேன்...இது நான் அவளுக்காக கொடுக்கும் பெறுமதியான பரிசு...இதைப்பற்றி இப்போ எதுவும் சொல்லமாட்டேன்.. பொறுத்திருங்க அம்மா..""என சிரித்தபடி கூறினான்.. தாயாருக்கோ தன் கண்களையோ காதுகளையோ நம்ப முடியவில்லை.. தன் மகனா இப்படி பேசுவது?? அவனுக்குள்ளே எத்தனை மாற்றங்கள்..கவிதைகள், கதைகள் என ஆர்வமும்... தமிழ்பற்றும் எப்படி வந்தது??
கேள்விக்கு விடை சொல்வதுபோல் அந்த மரக்கிளையில் இருந்த குருவி கத்தியபடி பறந்து சென்றது..
..

( தொடரும்) 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.