புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி,மார்ச் மாதம் 2017ல் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றோர்


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் 2017நடத்திய 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள் 
போட்டி -88 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-05
தலைப்பு- கலிகாலம்
அணுகுண்டு வெடிகளினால்
அண்டங்கள் குலுங்குவதும்..
ஏவுகணை மத்தாப்பால் ஆகாயம் வெடிக்கிறதும்..
வேற்றுமை மனதாலே ஒற்றுமை சில்லுசில்லாய்ச் சிதறியதும்..
பூமியைத் தோண்டியே ஆய்வுக்கூடம் ஆக்குதலும்..
அணுச்சிதற வைத்துப் புவியைப் பதறச் செய்குதலும்..
கரிம வளங்கள் உறிஞ்சியெடுத்து, நச்சுக்கழிவுகள் பரத்தி உருக்குலைப்பதிலும்..
தரைகீழ் புகைவண்டித் தடம் அமைத்து புவியோட்டை உடைத்து ஓட்டைகளாக்குவதிலும்..
பாறைகள் அறுத்துக் கரைப்பதும் , மலைகளை வெட்டியே மறைப்பதும்..
ஆகாயக் கப்பல்கள் மிதப்பதும், சர்சரென செயற்கைக் கோள்கள் பறப்பதும்..
அணுக்களைப் பிளப்பதால் பலகோடி உயிர் அணுக்களை சிதைப்பதும்..
மரபணு மாற்றிய பயிர்களும், மாறிய தோற்றமாய் உருக் கொளும் உயிர்களும்..
மாறாத பிணிகளாய்ப் பெருகுதலும், உறவுகள் மீளாது பிரிந்துச் சிதைவதும்..
வாலிபம் சுருங்கியே மறைவதும், வயோதிகப் பாடுகள் குறைவிலாது நீள்வதும்..
வாழ்விடம் மறுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, மனு வேறிடம் ஓடுதலும்..
தாய்மைக் கரிசனம் வீழ்ந்து போனதும், ஆழ்மனத் தரிசனம் தாழ்ந்து போனதும்..
இறைவனே நீ எமை மறந்து போனாயோ? நீ இலவேயிலையோ என அலைவதும்..
தேவையில் தேய்ந்து, தேவையில்லாத இடந்தன்னை மழை மாய்த்து விடுவதும்..
காடுகள் அழிப்பதும், காலநிலைகள் மாறுவதும்.. காற்று தகிப்பதும், நீர்நிலைகள் கொதிப்பதும்,
துருவங்கள் உருகுதலும், புவி அதிர்வுகளால் உருட்டுதலும், எரிமலைகள் புரட்டுவதும்..
அறன் அழிவுற்று வரும் கோலத்தின் சாட்சியோ..?
ஆளும் தகவிலா அரசுகள் வருவததன் ஆட்சியாம்..
சூழ்ச்சிகள் களி கூர்வதேயதன் மாட்சியாம்..
வருவதாக கிறிஸ்து ஏசு, கண்ணன் மொழிந்த காட்சியாம்..
நியாயந்தீர்ப்பு வருதலுக்கான காலத்தின் நீட்சியாம்..
கலியை வெல்லத் தேவையது.. எல்லோரும் போதிப்பது .. மனங்களின் மீட்சியே..
 முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்  சேர்ந்த கவிதாயினி  செந்தாமரைக்கொடிஅவர்கள் 


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் 2017நடத்திய 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள் 

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி,ஏப்ரல் 2017
போட்டி -88 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-09
தலைப்பு- கலிகாலம்
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா,
கடவுளைவிட்டா உனக்கு
வேறு துணையாருமில்லடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
சட்டப்பையில் உள்ளவரைதான்
நட்புக்கள் கூடுமடா,
சட்டியை சுரண்டும் காலம் வந்தால்
உறவுகள் ஓடுமடா-சொந்த
உறவுகள் ஓடுமடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
பெற்ற தாயையே விடுதியில் சேர்க்கும்
பிள்ளைகள் கொடுமையடா,
பெற்ற பிள்ளையை உற்றுப் பார்க்கும்
அறிவியல் உலகமடா-நவீன
அறிவியல் உலகமடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
உழைப்பால் யாரும் உயரமுடிவதில்லை,
உண்மைக்கு தெரியுமடா.,
ஊரைக் கொள்ளையடித்து நாட்டை ஆள்வான்
ஊருக்கே தெரியுமடா-நம்ம
ஊருக்கே தெரியுமடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
பார்க்கும் பார்வையும்,பேசும் வார்த்தையும்
விஷமாய் மாறுமடா,
அனைத்த கைகளும் அரிவாள் தூக்கும்
அறிந்து கொள்ளடா-நீயும்
அறிந்து கொள்ளடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
கறந்த பாலையும் விஷமாக்கும்
கயவர்கள் உலகமடா,
கண்ணால் பார்க்கும் காட்சிகள்
கலவரம் ஊட்டுமடா-மனதில்
கலவரம் ஊட்டுமடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
குருவி கூட்டினுள் கொடிய நாகம்
வாழும் காலமடா..,
கொள்ளையடித்தவன் சுகமாய் வாழ்வான்
புரிந்து கொள்ளடா- நீயும்
புரிந்து கொள்ளடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
பணம் பணமென்று பாசங்கள் மறந்து
நேசங்கள் இருக்குமடா,
பாவம் செய்யாதமனுசனை
காணமுடியாதடா-பூமியிலகாணமுடியாதடா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..!
உன்னில் இருக்கும் உண்மைகள் யாவும்
அழிந்து போகுமடா..,
வின்னில் இருக்கும் தேவதூதனும்
விலகிப் போவன்டா-உலகிலிருந்து
மறைந்து போவன்டா..!
கலிகாலமடா..மகனே
கவனம் கொள்ளடா..,
கடவுளை விட்ட உனக்கு
துணை யாருமில்லடா-வேறு
யாருமில்லடா..!

இரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்  சேர்ந்த கவிஞர்  பட்டுக்கோட்டை பாலு.அவர்கள்

 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் 2017நடத்திய 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள் 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிஏப்ரல், 2017
போட்டி -88 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-02
தலைப்பு- கலிகாலம்
சிரியா யுத்தமும்
சீரிப்பாய்ந்த குண்டுகளும்
சிதறுண்ட உடல்களும்
கட்டிட இடுக்குகளில்
சிக்குண்ட மழலைகளும்
சீரழியும் கன்னியறும்
கண்ணீரில் மிதந்து
கதறியழும் தாய்க்குலமும்.
நமக்கு கற்றுத்தந்த பாடமென்ன?
கலிகாலம் இதுதானோ?
நம் கவலைகள் தீராதோ.?
வட்டமான மேசைபோட்டு
வலச்சிவர அமர்ந்திருந்து
மனம் நிறய வஞ்சகமும்
தலை நிறய தந்திரமும்
நாவிநாலே நாடகமும்
ஆடிவிட்டுக் கலைகிறார்கள்
சமாதானம் என்று சொல்லி
உலக வல்லரசின் தலை சிறந்த தலைவர்கள்.
கலிகாலம் இதுவென்று - நாம்
கண்முன்னே கண்டோமே.
அலப்போ நகரும்
அமிலத்தாக்குதளும்
அறக்கனான அரசும்
அழிகிறது மனிதஇனம்
கவலைதரும் காணோலியை
கடைசிவர நான் பார்க்கவில்லை
கண்ணிரண்டும் குளமாகி
பாதியிலே முடித்துவிட்டேன்.
கலிகாலக்காட்சியையும் - என்
கவிதையையும்.
மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இலங்கையை சேர்ந்த  பொத்துவில் றஷீத்

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் 2017நடத்திய 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள் 

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி,ஏப்ரல் 2017
போட்டி -88 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-03
தலைப்பு- கலிகாலம்
எச்செயலு மெப்பொழுது மினிப்பதில்லை !
...யிவ்வுலகி லிருப்பவைகள் நிலைப்பதில்லை !
இச்சைகளும் வரம்புகளில் நிற்பதில்லை
...யெவரையுமே நம்பவுமே முடிவதில்லை !
துச்சமாகப் பார்த்திடவே யச்சமில்லை !
...துரோகங்கள் தலைநீட்ட மறுப்பதில்லை !
பச்சையாகப் பேசுதலை விடவில்லை
...பாவங்க ளதுவென்றே வுணர்வதில்லை !
கேட்டாலே சொல்லுகிறார் கலிகாலம் !
...கீழெண்ணம் கொண்டேதான் வாழ்கின்றார் !
ஆட்டங்க ளாடுகிறா ராணவத்தி
...லசிங்கங்க ளழகாகப் பார்க்கின்றார்
நாட்டத்தில் மாற்றங்கள் திகழ்ந்திட்டால்
...நன்மைகளும் நிலைத்திடுமே நிலத்தினிலே !
வாட்டங்கள் தொடராதே வாழ்வினிலே
...வல்லவனி லிருக்கிறதே யானந்தம் !
காலங்கள் தன்நிலையில் மாறவில்லை !
...கற்பிதத்தால் கட்டிவிட்டார் பிரிவுகளாய் !
ஞாலமுமும் நிம்மதியில் மூழ்கிடவே
...நம்எண்ணம் நல்லவையா யமைந்திடனும்
கோலத்தா லொன்றிணைந்து கூடுகிறோம்
...கொள்கையாலே குழப்பத்தால் பிரிகின்றோம்
சாலச்சி றந்தவழி பற்றிவிட்டால்
...சத்தியத்தில் நிலைத்திடலாம் நற்காலம் !
இல்லையென்று மல்லவென்று மென்றதிலே !
...யிருப்பவைக ளெதனாலே யென்றுணர
நல்லறிவி லுன்பிறப்பில் தொடர்ந்திடவே
...நம்மோடு காண்பவைகள் தொடர்புகளே !
எல்லாமே வொன்றினது மூலத்தி
...லியங்கின்ற வுண்மையிலே வுள்ளதுவே !
சொல்லாலே சொல்லுவதி லிலகாகும்
...சுத்தசித்திக் கொண்டுபார்க்க சுகமாகும் !
இல்லாதே யிருப்பதுவே யியற்கையா !
...மெவ்வாறு யென்றுணர வறிந்திடனும்
கல்வியாலே கற்றுணர முடியாதாம்
...கற்பிக்கும் நற்குருவா லறிந்திடலாம்
பொல்லாத பிரிவினைக ளெவ்வாறு ?
...பொதிந்துதானே வொன்றாக யிருகிறதே !
இல்லாதே யிருப்பில்தா னொன்றாகு !
...மெல்லாமும் நிறைந்திட்டே நின்றாகும் !
இருப்பதெல்லா மில்லையாகு மொன்றாகி !
...னிதயத்தில் நினையிருத்திக் காண்பாயின்
பருப்பொருளே பலவாக விரிகின்ற
...பாதைதானே வித்திலிருந் தேவிருட்சம்
உருகொண்ட நீரதுவு மோர்ந்துணர
...வுயரறிவி லுண்டுமையி லில்லைதானே !
கருக்கொண்டே வரும்மூலம் புரியாதே
...கற்றகல்வி காட்டிடவும் இயலாதே !
உணர்ந்தறியத் துணையாகும் நம்பிக்கை !
...வுள்ளேதான் கடந்துவிட்டால் காட்டிவிடும் !
குணங்களெல்லா முண்டாகும் அவ்விடத்தில்
...குருதுணையில் செல்வதுதான் சிறப்பாகும்
மணத்திடுமே மான்புகளும் புவியினிலே !
...மனமதுவி லாகிடவே தெரிந்திடுவாய் !
பணத்தாலே வென்றிடவும் முடியாதே !
...பக்குவத்தால் பற்றிடவே காணலாமே !
ஆயுதமு மிலகுவாக வொன்றுன்று !
...யந்தநிலை யடைந்தோரே தந்ததுண்டு
பாயும்தன் மனதினிலே யாகிவிடு
...படைப்புகளே யவனன்றி யில்லையேதான் !
நீயுமென்ப திலும்நின்று யறிந்திடவே !
...நிம்மதிதான் நிலைத்திடுமே நின்மனத்தில் !
மாயுமேகாண் கலிகால முன்வாழ்வில் !
...மாயைதானே கலிகால மென்பதெல்லாம் !

இம்மாதத்தின்  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -
பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் அதிராம்பட்டினம்.ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் 

 கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.