புதியவை

தொழுது நிற்போம் ! ( எம் .ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )
          பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
               பருகத் தருவார் அம்மா
          பாடசாலை கூட்டிச் சென்று
                  படிக்க விடுவார் அப்பா
           வேலை செய்து வேலைசெய்து
                    காசு சேர்த்து அப்பா
             விருப்பம் உள்ள பொருளையெல்லாம்
                      விரும்பிக் கொடுப்பார் நாளும் !

              அம்மா எம்மை அடித்திட்டாலும்
                       அணைத்து நிற்பார் அப்பா
              சும்மா கூட திட்டுதற்கும்
                         துணிய மாட்டார் அப்பா
              இந்தமண்ணில் எம்மைக் காக்க
                     ஏற்ற  தெய்வம் அப்பா
              இன்ப துன்பம் எதுவந்தாலும்
                        ஏற்று நிற்பார் அப்பா !

               படிக்க வேண்டும் என்றுசொல்லி
                         பாடாய்ப் படுவார் அப்பா
                படிப்பதற்கு உரிய தெல்லாம்
                          கொடுத்து நிற்பார் அப்பா
                உடுப்பு என்று கேட்டுவிட்டால்
                            குவித்து நிற்பார் அப்பா
                 ஓடி ஓடி எந்தநாளும்
                          உழைத்து நிற்பார் அப்பா !

                 அடுத்தவர்கள் எம்மைத் திட்ட
                          பொறுத்திடார் நம் அப்பா
                 அசிங்கம் உள்ள காரியத்தை
                            அழித்திடுவார் நம் அப்பா
                  பொறுமை காத்து பொறுமைகாத்து
                            பொறுத்து நிற்பார் அப்பா
                   பொல்லாத செயலைக் காணின்
                            பொங்கி நிற்பார் நம்மப்பா !

                பண்டிகைகள் என்று வந்தால்
                     பல உடுப்புத் தருவார் 
               உண்டு மகிழ பட்சணங்கள்
                       ஒழுங்காய் வாங்கித் தருவார் 
               தின்று நிற்கும் அழகைப்பார்த்து
                         சிரித்து நின்று மகிழ்வார்
                பொங்கி வரும் பூரிப்பாலே
                       பொலிந்து நிற்பார் அப்பா !

              அப்பா வரத் தாமதிதால்
                  அம்மா ஏங்கித் தவித்திடுவார்
              அங்கு மிங்கும் ஓடியோடி 
                    அவரைக் காணத் துடித்திடுவார் 
              அப்பா வீட்டில் இல்லயென்றால்
                      அமைதி அங்கே அமைந்துநிற்கும்
                அப்பா வந்து சேர்ந்தவுடன்
                        அகமும் முகமும் மலர்ந்தேவிடும் !

         அப்பாவும் அம்மாவும் அனைவருக்கும் துணையாவர்
         அவரில்லா உலகமது ஆருக்கும் துணையாகா
         ஒப்பாரும் மிக்காரும் உலகத்தில் அன்னைதந்தை
         உளமிருத்தி உயர்த்திவைத்து உன்னதமாய் வாழ்ந்திடுவோம் !

         தந்தையில்லா வாழ்வெமக்குத் தளர்வினையே தந்துவிடும்
         நொந்துவிடும் போதெல்லாம் பந்தமுடன் வந்துநிற்பார் 
         இந்தப்புவி மீதினிலே ஏந்திநிற்கும் தந்தையினை 
         எல்லோரும் வாழ்வினிலே ஏற்றிநின்று போற்றிடுவோம் !

         வலுவிழந்து போனாலும் வயதுசென்று போனாலும்
         கிழடென்று மனமெண்ணி கீழாக எண்ணாமல்
         நமதுடலை வளர்த்தெடுத்து நாமாக வாழுதற்கு 
         தமதுழைப்பை ஈந்தளித்த தந்தையினை தொழுதுநிற்போம் !

       அப்பாவை அரவனைத்து அவர்பாதம் தொழுதெழுந்து
       நித்தமுமே செய்வதுதான் சத்தியமாய் வாழ்வாகும் 
       கொண்டாட்டம் செய்துநின்று குவலயத்தில் இத்தினத்தை
       குறைவாக்க நினையாமல் கும்பிடுவோம் அப்பாவை !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.