புதியவை

அப்பாவும் மகளும் ! ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )       ஈன்றெடுத்த அம்மாவை என்னாளும் நான்மறவேன்
             என்றாலும் அப்பாதான் என்னருகில் நிற்கின்றார்
       என்தோழன் என்பாடம் என்னுணர்வும் அப்பாதான்
               நான்பசித்து உண்ணும்வரை தானுண்ண வரமாட்டார்
        நான்விழிக்கும் போதெல்லாம் என்னருகில் அவரிருப்பார்
                நான்தூங்கி விட்டதன்பின் தான்தூங்க அவர்செல்வார்
        என்கண்ணுள் ஒளியாக இருக்கின்ற அப்பாவை
               இவ்வுலகில் தெய்வமாய் ஏற்றிநான் போற்றுகின்றேன் !

       அம்மாவின் அரவணைப்பு அனைவருக்கும் அவசியமே
                ஆனாலும் அப்பாதான் அரணாக அமைகின்றார்
       பெண்பிள்ளை அத்தனைக்கும் பெரியதுணை அப்பாதான்
               மண்மீது அப்பாதான் மாமலையாய் விளங்குகிறார்
        பாலகராய் இருந்தாலும் பருவத்தை அடைந்தாலும்
               வேலிபோல நிற்பவர்தான் மேதினியில் அப்பாவே
       நாலுபேரைக் காட்டிநின்று நல்லவழி கூட்டிச்சென்று
              நமையென்றும் காத்துநிற்பார் நம்முடைய அப்பாதான் !

       அண்ணா அழுதபடி அம்மாவை அணைத்திடுவார்
                அவ்வேளை நானழுதால் அப்பாதான் தூக்கிநிற்பார்
       ஆண்பிள்ளை எல்லோரும் அம்மாவின் அருகணைவார்
                  இயல்பாக பெண்பிள்ளை அப்பாவை நெருங்கிடுவார்
        இந்தவிதி இவ்வுலகில் இறுக்கமாய் இருக்கிறது
                  எக்கணமும் பெண்பிள்ளை அப்பாவை இணைக்கிறது
        சொந்தம்பல இருந்தாலும் தோழ்மீது சாய்வதற்கு
                பந்தமுடன் பெண்பிள்ளை அப்பாவை அழைக்கிறது !

       பட்டம்பல பெற்றாலும் பதவிகளில் இருந்தாலும்
           இட்டமுடன் அப்பாவை இறுகணைத்தே நிற்கின்றார்
       கெட்டகுணம் வாராமல் துட்டரெலாம் சேராமால்
             கஷ்டப்பட்டு வளர்த்தஅப்பா காலமெலாம் துணையவர்க்கு
       கோட்டுவாசல் ஏறாமல் குறையெதுவும்  வாராமல்
               நாட்டினிலே நல்லபெயர் மகள்பெறவே வேண்டுமென்று
        நாட்டமுடன் செயல்பட்டு நாளும்நிற்பார் அப்பாவே !

       மணம்புரிந்து மகள்சென்று மறுவீட்டில் வாழ்ந்தாலும்
             உடன்போயி உதவிநிற்பார் உணர்விறை அப்பாவே
      மாப்பிள்ளை வெளிசென்றால் மகளுக்குக் காப்பாக
             அப்பாதான் அங்கிருந்து அனைத்தையுமே பார்த்துநிற்பார்
       குழந்தை பிறந்தாலும் கூடவே அவரிருப்பார்
               கொண்டாட்டம் என்றாலும் குறைவராமல் பார்த்திடுவார்
       பேரர்களைத் தூக்கிவைத்துப் பெருங்கனவு கண்டுநிற்பார்
                ஓர்நாளும் ஓய்வின்றி உழைத்துநிற்பார் மகளுக்காய் !

      பிரசவத்தில் மகளழுதால் பித்தாகிப் போயிடுவார் 
            அவள்சுகமாய் குழந்தைபெற ஆண்டவனை வேண்டிநிற்பார்
      மகள்பெற்ற குழந்தையினை மடிமீது தூக்கிவைத்து
              தனதுமகள் நினைப்புடனே தான்கொஞ்சி மகிழ்ந்திடுவார்
     மகளுக்குத் துணையாக மாமருந்தாய் இருந்திடுவார்
             மகள்வேலை எனச்சென்றால் மகளுக்கே துணையாவார்
    எப்போதும் மகள்தன்னை எண்ணிநிற்கும் அப்பாவை
            இவ்வுலகில் பெண்மக்கள் இருத்திடுவார் உள்ளமதில் !

       பாடம் நடத்துவார் பலகதைகள் சொல்லிநிற்பார் 
             கூடத்திலே இருத்திவைத்து கொடுத்திடுவார் உணவுதனை
      ஆடி மகிழ்ந்திடுவார் அணைத்துவைத்துக் கொஞ்சிடுவார்
            தோடுபோட்ட காதைத்தொட்டு துள்ளிதுள்ளி மகிழ்ந்திடுவார்
       நாடிதனை வருடி   நல்ல    பலகாரமெலாம் 
               ஊட்டியூட்டி தன்மகளின்  உச்சினை மோந்திடுவார் 
       அப்பாவும் மகளுமாய் ஆடிநிற்கும் கூத்தையெல்லாம்
                அடுக்களையில் நின்றபடி அம்மாவும் ரசித்துநிற்பார் !


        அன்புநிறை நண்பனாய் அறிவுநிறை ஆசானாய் 
             பண்புநிறை பெரியோனாய் பார்வையிலே சேவகனாய்
       உண்மையிலே உழைத்துநிற்கும் உயர்வுநிறை உத்தமனாய்
             மண்மீது தந்தையினை மகளிடத்துப் பார்த்திடலாம் 
       இப்புவியில் தந்தைமகள் இணைந்துநிற்கும் எழிலுறவை
             எல்லோரும் பார்த்துநிற்பின் இன்புலகைக் கண்டிடலாம் 
       கைப்பிடித்துக் கருணையொடு காதலித்து நிற்குமவர்
            எப்போதும் மகள்களுக்கு  இருந்திடுவார் நற்றுணையாய் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.