புதியவை

விடியலும் வந்தே சேரும் ! ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
   
கண்ணபிரான் அவதரித்த பூமியிலே
      காந்திமகான் தடம்பதித்த பூமியிலே
  சொல்லவொணா துயரமெலாம் பெருக்கெடுத்து
       சுயமிழக்கச் செய்வதினைக் காணுகையில்
   மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் மரமாச்சா
         மனதிலுறை கருணையெலாம் மடிந்தாச்சா
   என்னுகின்ற எண்ணமதே எழுகிறதே
        எவர்வருவார் இந்தநிலை போக்குதற்கு

 காடுமேடு என்றலைந்த மனிதவினம்
      கட்டம்பல கடந்துவந்து நாளாச்சு
 நாடுநகர் என்றெல்லாம் ஆக்கிவைத்து
     நாகரிகம் என்றுசொல்லித் திரிகின்றார்
தேடிநாடி ஓடுகிறார் திசையெல்லாம்
     திரட்டுகின்றார் மூட்டையிலே செல்வமதை
கூடுவிட்டுக் கூடுபாயும் மனத்தைமட்டும்
   குணம்மாறா வைத்துவிட்டார் குவலயத்தில்

ஆடுமாடு கோழியெல்லாம் வளர்க்கின்றார்
     அவைபற்றி இலக்கியமும் ஆக்குகின்றார்
மேடையேறி அவைபற்றி முழக்குகின்றார்
   விருந்துவைத்தும் அவற்றையவர் சுவைக்கின்றார்
சாதிசாதி என்றுசொல்லி மோதுகின்றார்
    சமயம் எனப்பலசொல்லி காட்டுகின்றார்
நீதிநெறி பற்றியெல்லாம் பேசுகின்றார்
     நெஞ்சமதை மாற்றமட்டும் நினைக்கமாட்டார்

கடவுள் எனும் பரம்பொருளை
   கண்டு கொள்ள வேண்டுமெனில்
காட்டுத்தனம் எம்மை விட்டே
   களைந்தெறியப் படல் வேண்டும்
மதம் கொண்ட மனத்துடனே
    மற்றவரை வதைத்து நின்றால்
சினம் பெருகி யாவரையும்
     சீரழித்து விடும் அன்றோ

ஆதலால் காதல் செய்வோம்
      அனைவரும் ஒன்று என்றே
மோதலை தவிர்த்துக் கொண்டு
    முறுவலை ஈந்தே  நிற்போம்
பேதமை உள்ளந் தன்னை
    பிரியமாய் மாற்றிக் கொண்டால்
வேதனை விரைந்தே போகும்
     விடியலும் வந்தே சேரும் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.