புதியவை

காதல் இனிது !( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ) அவுஸ்திரேலியா
மண்ணிலே நல்லவண்ணம்
வாழவே வேண்டுமாயின்
உண்மையில் காதல்தானே
உயிராக இருக்குதன்றோ

எண்ணிடும் போதேநெஞ்சில்
இன்பமே ஊற்றெடுக்க
பண்ணிடும் பாங்கை
காதல் பண்புடன்தருகுதன்றோ

உண்ணிடும் சோறுகூட
உடலுடன் சேரவேண்டில்
கண்ணிலே காதல்வந்தால்
கஷ்டமே கழன்றேபோகும்

பழம் இனிது பாலினிது
பசித்தவர்க்கு உணவினிது
உளமினிக்க செய்வதற்கு
ஊக்கமது காதலன்றோ

குழல் இனிது யாழினிது
குழந்தைமொழி அதனினுது
எனும்வரிசை வரும்போதில்
காதலது இனிதன்றோ

தொட்டவுடன் முகம்சிவக்கும்
தூங்காது மனமிருக்கும்
வட்டநிலா ஓடிவரும்
வகைவகையாய் கனவுவரும்

கஷ்டமெலாம் போனதுபோல்
கனமின்றி உணர்விருக்கும்
காதலது இனிதென்று
கருத்தெல்லாம் நிறைந்திருக்கும்

மத்தாலே கடைந்தெடுத்த
வாசமொடு மோரிருக்கும்
வாசலிலே பழம்பழுத்து
வாழைமரம் நின்றிருக்கும்

அம்மாவின் கைபட்ட
அருஞ்சமையல் அருகிருக்கும்
ஆனாலும் மனமெல்லாம்
அவைநினைவில் நிற்காது

காதலே இனிதென்று
கற்பனையாய் சொல்லவில்லை
காதலே இனிதென்று
கதைகூறி நிற்கவில்லை

மக்களது வாழ்க்கையிலே
மலர்ச்சிநிலை வருவதற்கு
காதலைப்போல் மருந்ததனை
கண்டுகொள்ள முடியவில்லை

சாதிபேதம் பார்க்காது
சமயமுமே நோக்காது
சோதனைகள் வந்திடினும்
சுகமுடனே ஏற்றுநிற்கும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.