புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மே மாதம் 2017நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்

முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்( எம். ஜெயராமசர்மா ...மெல்பேண் ..அவுஸ்திரேலியா ) அவர்கள் 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி மே-2017
போட்டி -89* வது மாதம்
போட்டிக்கவிதை எண்-01
தலைப்பு -உள்ளொன்று புறமொன்று !
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவினை ஒதுக்க வேண்டும்
கள்ளமனம் கொண்டோரை காணுகின்ற வேளையிலே
கவனமுடன் இருக்க வேண்டும்
நல்லமனம் கள்ளமனம் நாடியே நின்றுநாம்
நட்புதனைப் பேணல் வேண்டும்
நாளுமே புறம்பேசும் நாவினை உடையாரை
வாழ்விலே ஒதுக்கல் வேண்டும் !
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
வெள்ளையாய் சிரிக்க மாட்டார்
உருக்கமாய் பேசியே உயிரையே வாங்குவார்
உள்ளத்தால் உரைக்க மாட்டார்
நெருப்பென வார்த்தையைப் பகர்ந்துமே நின்றாலும்
நெஞ்சினால் பேசி நிற்பார்
அடுத்தவர் மனத்தினை அறிந்துமே நிற்பவர்
அமுதமாய் அமைந்தே நிற்பார் !
பகட்டினைக் காட்டியே பகல்வேஷம் போடுவார்
பாரினில் நிறைந்தே விட்டார்
அதட்டியே மிரட்டியே அநியாயம் செய்பவர்
அகிலத்தில் நிறைந்தே விட்டார்
அறிவினை அழித்துமே அசிங்கத்தை ஆற்றுவார்
அளவிலே மிகுந்தே விட்டார்
ஆதலால் அகிலத்தில் வாழ்கின்ற வாழ்க்கையை
அதிகம்பேர் குலைத்தே விட்டார் !
நெஞ்சிலே நஞ்சைவைப்பார்
நித்தமும் சிரித்தேநிற்பார்
அஞ்சிடா தனைத்தும்செய்வார்
அனைத்திலும் நுழைந்தேநிற்பார்
பஞ்சிலே நெருப்பையிட்டு
பற்றவே செய்வதைப்போல்
தஞ்செயல் ஆற்றிவிட்டு
தலையாட்டிச் சிரித்தேநிற்பார் !
வீட்டிலே ஒன்றுசொல்வார்
வெளியிலே ஒன்றுசொல்வார்
காட்டிடா வண்ணமாக
கச்சிதம் பேணிநிற்பார்
மாட்டியே விட்டிட்டாலும்
மெளனமாய் சிரித்தேநிற்பார்
வையத்தில் நிறைந்ததாலே
மனமெல்லாம் கொதிக்குதையோ !
உள்ளத்தில் ஒன்றுவைத்து உதட்டினில் ஒன்றுவைத்து
வெள்ளைமனம் கொண்டோராய் வெளிக்காட்டல் முறையாமோ
நல்லவுள்ளம் பெறவேண்டும் நயவுரைகள் தரவேண்டும்
புல்லெனவே நினைக்கின்ற புறங்கூறல் அறவேண்டும் !
ஒளவையொடு வள்ளுவரும்
அறம்பகர்ந்த பலபேரும்
உள்ளொன்றுவைத்துப் புறமொன்றுபேசுவதை
ஒதுக்கியேவிட ஓதினார்
நல்லமனம் கொண்டவரை
நாளுமே ஏமாற்றும்
நஞ்சினை போக்குவென்றார்
எத்தனை கதைகளும்
எத்தனை கவிதைகளும்
உபதேசம் செய்துநின்றும்
நஞ்சுடை நெஞ்சினார்
அஞ்சாமல் நாளுமே
உலவுறார் நாடெங்குமே !
( எம். ஜெயராமசர்மா ...மெல்பேண் ..அவுஸ்திரேலியா ) .
......................................................................................................................


 இரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்  சேர்ந்த கவிஞர்  சா.சையத் முகமது கிருஷ்ணகிரி தமிழ்நாடுஅவர்கள்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி மே-2017
போட்டி -89* வது மாதம்
போட்டிக்கவிதை எண்-05
தலைப்பு -உள்ளொன்று புறமொன்று !
உள்ளொன் று வைத்து புறமொன் றுசெய்யும்
பாதகர் நிறையவே யுள்ளோ ருலகில்......?
கள்ளென் றே பாலு மானதோ ,கூறினால்
ஆமென் றேயதை யேற்கிறார் கலகமாய்....?
வெள்ளமெ னவே யடித் திடுமே செயலால்
வழக்கம் மாறுத லவதி
யதிகம்....?
கள்ளத் தனமோ மிகுதல் காணீர் ...
முகமதில் மறைத்தே தினமும் செய்தலோ.....?
உள்ளத் தெளிவின் றி பிதற்றி யலைதலோ...
ஊருக்கு உலையும் வைத்தலோ தேவையா...?
அள்ள அள்ளக் குறையா அமுதம்
கயமைத் தனத்தால் குறைத்த லாச்சே..
எள்ளின ளவுமே பயனிலாச் செய்கை
செய்தலால், மிகையாம்; அலைகிறா ரதற்கே....?
முள்ளாய்க் குத்திக் கிழித்தே மனத்தை
இரணமாய்ச் செய்வதில் கண்ட பயனென்...?
எட்டிக் காயாய் முகங்காட் டுகின்றார்
மனதில னைத்தும் அடக்கி
பலனென்.....?
வெட்டி வீழ்த்தத் துடிக்கிறார் ,வாழையா..?
வாழ்க்கை வீணில் கழிக்கப் பிறப்போ....?
தட்டிக் கேட்க நாதியின் றி யனாதை
பிழைப்போ யானதிங் கே நாளும் காண்க....?
ஏட்டிக் கு போட்டி போகுமி டமெங்கோ
வாட்டி வதைக்கு முறவு மிதுவோ...?
சட்டியாய் தெரியும், அறுத்தா லினிக்கும்
பலாப்பழம் பலனாய், இருப்பர் ;அறியோம்...!
கெட்டியாய்ப் பிடித்து நடந்தால் நலமே
அறிதல் குணமாய்; ஏற்போம் தினமும்..!
சட்டெனத் தெரியார் சமயத் திலுதவி
அருமை யவரே; பெருமை நிலைக்கும் ...!
வடமாய்த் தேரை யிழுத்தலாய் நல்லன
வல்லவர் துணையால் நடக்க நலமே.....!
ஆட்ட ம் பாட்டம் நிலைக்கா யென்றும்
அல்லன அழியும்; நாளை நிலைக்கா....!
கெட்டன யொழித்தே, திறனதைக் கொண்டே ,
சட்டெனக் கொள்வோம்;
நட்டதை வளர்ப்போம்...!
சுட்டதும் மாறாச் சங்கின் செயலாய்
நல்லோ ருறவே நம்மில் தொடர. ...
பட்டம் பதவி பயணம் செய்தே
நல்லதை நமதாய் நாளும் ஆக்கலே...!
சா.சையத் முகமது கிருஷ்ணகிரி
தமிழ்நாடு
..................................................................................................
மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இந்தியாவைச் சேர்ந்த  கவிஞர். கோவிந்தராஜன் பாலுஅவர்கள்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி மே-2017
போட்டி -89* வது மாதம்
போட்டிக்கவிதை எண்-07
தலைப்பு -உள்ளொன்று புறமொன்று !
வேதனைகள் வாழ்க்கையிலே வெள்ளம்போல் வந்தே.
வெட்டித்தான் சாய்த்திடுமே வெற்றிகளைக் கொன்றே.
சோதனைகள் வந்தாலும் சோர்வில்லை வாழ்வில்.
சொந்தங்கள் தள்ளிடுமே சுழல்களிலே தாழ்வில்.
போதனைகள் சொல்லிடுவார் புறந்தள்ளிப் பின்னே.
பொன்னான சொற்களிலே போற்றிடுவார் முன்னே.
சாதனைகள் செய்திட்டால் சபைதனிலே போற்றி.
சரவெடியாய்ப் பழிகளையே சாதனைகள் தூற்றி.
உள்ளத்தில் பகையாக உதட்டினிலே
சாயம்.
உலவுகின்றார் வேடமிட்டு உயர்ந்தவர்போல் நேயம்.
துள்ளித்தான் பேசிடுவார் தூணென்பார் என்றும்
துன்பங்கள் வந்துவிட்டால் தொலைதூரம் சென்றும்.
அள்ளித்தான் தெளித்திடுவார் அருகினிலே வந்தே.
அரவமாக மாறிடுவார் அல்லல்கள்
தந்தே.
பள்ளத்தைப் பறிக்கின்ற பாவிகளைக் கண்டு
பாடங்கள் புகட்டிடுவோம் பண்புடைமைக் கொண்டே.
கவிஞர். கோவிந்தராஜன் பாலு
.....................................................................................


இம்மாதத்தின்  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -
பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் லங்கையை சேர்ந்தஎம்.ஐ.எம்.அஷ்ரப்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி மே-2017
போட்டி -89* வது மாதம்
போட்டிக்கவிதை எண்-10
தலைப்பு -உள்ளொன்று புறமொன்று
கண்டால் சிரிப்பார் கட்டியணைப்பார்
கண் மறைந்தால் எள்ளி நகைப்பார்
காணாதபோது கதை கட்டி விடுவார்
கயவரேயிவர் கெட்ட மனமுடையவர்
வார்த்தையிலே நல்லியதயம் காண்பித்து
வாக்களித்தால் மறுதலித்துச் செல்வார்
நெஞ்செல்லாம் வஞ்சகம் நிறைந்திருக்கும்
நேர்த்தியற்ற மாந்தரிவர் நம்ப முடியாதவர்
முன்னின்று முயற்சியிலே கைகொடுத்து
பின் முதுகு காட்டி மறைந்திடுவார்
பால் வார்த்தபோதும் நஞ்சு கலக்கும்
நாகத்தின் தோழமைக்கு ஒப்பாவர்
தன் திட்டம் நிறைவேற சேர்ந்திருப்பார்
ஏற்றமில்லை என்றறிந்தால் விட்டகல்வார்
நம்பியிறங்க ஆபத்தான நபரே இவர்
குணமறிந்து விலக்குதலே சிறப்பாகும்
உள்ளொன்று புறமொன்று கண்டால்
உருப்படாமல் போகும் நற் குடும்பமும்
சொல்லொன்று செயலொன்று மாறுபட்டால்
சதி பதி உறவுகளும் சின்னாபின்னமாகும்
நட்பைப் பகைக்கும் மாறுபடும் குணமிது
நீதமிருக்காது அவதந்திரம் நிறைந்திருக்கும்
ஒழுக்கமும் பக்தியும் உயர் பண்பும்
ஒன்றியிருக்காது இத் தீய குணமுடையோரில்
எம்.ஐ.எம்.அஷ்ரப்

 கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 


போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.