புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2017நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந்த பாவலர் கருமலைத்தமிழாழன்வர்கள்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி ஜூன் 2017
போட்டிக்கவிதை எண் -03
போட்டி -90 வது மாதம்
தலைப்பு- முட்டுக்கட்டை

உறையணிந்த பூனையதா எலிபி டிக்கும்
-- -- -உடல்வளையா முதுகதுவா பொதிசு மக்கும்
திரைதொங்கும் சாளரமா வெளிச்சம் காட்டும்
-- -- -திசைதெரியா கப்பலதா கரையைச் சேர்க்கும்
குரைக்கின்ற நாயதுவா வேட்டைக் காகும்
-- -- -குரல்கொடுக்கா குழந்தையதா பால்கு டிக்கும்
அறையிருளில் இருப்பவனா சாதனை செய்வான்
-- -- -அடிப்பட்டும் முயல்பவனே வெற்றி காண்பான் !
உருகுகின்ற மெழுகுவர்த்தி வெளிச்சம் தன்னை
-- -- உலகத்தின் இருளெல்லாம் ஒன்று சேர்ந்து
பருகிடுவோம் எனஆர்த்தே வந்த போதும்
-- -- பக்கத்தில் நெருங்குதற்கும் முடிந்தி டாது !
பெருகுகின்ற வியர்வையிலே நணைந்த தோளின்
-- -- பெருவுழைப்பின் முன்எந்தத் தடைவந் தாலும்
நெருப்பின்முன் பொசுங்குகின்ற சருகைப் போல
-- -- நேர்நிற்க முடியாமல் சாம்ப லாகும் !
பிறக்கின்ற குழந்தையது கற்கும் போதே
-- -- -பிறர்போற்றும் ஞானியாக வளர்ந்து நிற்கும்
சிறப்பான செயல்களெல்லாம் தோல்வி கண்டும்
-- -- சிந்தித்துச் செயும்போதே சிறந்து நிற்கும்
கறந்தால்தான் பசுமடியும் பால்கொ டுக்கும்
-- -- கண்திறந்து பார்த்தால்தான் காட்சி காணும்
இறக்கைகளால் மேலுயரும் பறவை போல
-- -- இருகரத்தால் தடையுடைப்போம் உயர்வோம் நன்றே

பாவலர் கருமலைத்தமிழாழன்
........................................................................................


ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார்இலங்கையை சேர்ந்த கலா வர்ணன் எஸ்.எஸ்.எம்.றபீக்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி ஜூன் 2017
போட்டி -90 வது மாதம்
போட்டிக்கவிதை எண் -05
தலைப்பு- முட்டுக்கட்டை
வளைந்தே வளரும் மரங்களுக்கு
நிமிர்ந்தே வளர்ந்திட வைத்திடுவார்
பலமான தடிகளால் முட்டுக்கட்டை ....
இடிந்திடும் சுவர்களைத் தாங்கியே
வீழ்ந்திடா வண்ணம் வைத்திடுவார்
உரமான கம்புகளால் முட்டுக்கட்டை ....
நல்லவைகள் பலதும் நடந்திடவே
வீழ்ந்திடாமல் நன்றாய்த் தாங்கிடவே
கருவிகளாய் வைக்கின்றார் முட்டுக்கட்டை....
செய்கின்ற காரியங்கள் இடையினிலே
நகர்ந்திடவே முடியாமல் தடைகளாய்
வருகிறதே இயல்பான முட்டுக்கட்டை ....
சிந்தித்தே செய்திடா காரியங்கள்
முடித்திடவே இயலாத வகைதனிலே
வந்திடுதே எதிர்பாரா முட்டுக்கட்டை ....
நற்கருமம் செய்திட முற்பட்டால்
நயவஞ்சக மனங்களின் உள்ளிருந்து
தடுப்பதற்கே வருகிறது முட்டுக்கட்டை ....
தன்பெயரை நிலைநாட்டிட நினைத்தவர்
வேறொருவர் பெயர்தானும் முன்னின்றால்போ
ட்டிடுவார்
அவருக்கு முட்டுக்கட்டை ....
கல்வியிலே ,காதலிலே , உழைப்பினிலே
முன்னிற்போர் மீதினிலே பொறாமையினால்
சூழ்ச்சியதால் போடுகிறார் முட்டுக்கட்டை ....
முன்னேற்றப் பாதைகள் தடுத்திடவே
போட்டிடாதீர் என்றைக்கும் முட்டுக்கட்டை ...
வீழ்ந்திருக்கும் மாந்தரின் உயர்ச்சிக்காய்
அருமையாய் அமைத்திடுவீர் முட்டுக்கட்டை ....
அடுத்தவர் உயர்வினைத் தடுத்திடுமொருவர்
தனக்கே போடுகிறார் முட்டுக்கட்டை ..
..

# கலா வர்ணன் #எஸ்.எஸ்.எம்.றபீக் .
................................................................................மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்த பழனி குமார் 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி ஜூன் 2017
போட்டி -90 வது மாதம்
போட்டிக்கவிதை எண் -02
.
தலைப்பு- முட்டுக்கட்டை
முந்திட நினைத்தாலும்
முன்னேற்றம் கண்டிட
முட்டுக்கட்டை ஆகுவர்
முகமறியா பலரிங்கு
முள்ளாகக் குத்திடுவர்
முன்பகையும் இல்லாத
முள்வேலி நெஞ்சுள்ள
முகங்கள் நமக்கெதிராய் !
​முக்காடு அணிந்திட்டால்
முகமதை மறைத்திட்டால்
முகச்சாயல் தெரிந்தாலும்
முழுமனதை அறியாவிடின்
முகத்துதி பாடுவோரின்
முழுநிலையும் புரியாது
முட்டுக்கட்டையும் நீங்காது
முனகல்களும் நிற்காது !
முகமயக்கம் அறிந்தோர்
முடிந்தவரை முயற்சிப்பார்
முன்னேறி உயர்ந்திட
முட்டாக உதவிடாமல்
முட்டுக்கட்டை போடுவார்
முகாமிட்டு யோசிப்பார்
முடக்கிட நினைத்திடுவார்
முகமறிந்த நெஞ்சங்களை !
முழுமையாக வெற்றிகாணாது
முடிவாக முணுமுணுப்பதும்
முனைந்திட திறனற்றும்
முற்றிலும் செயலிழந்து
முந்துதலும் தடைபடும்
முட்டுக்கட்டை ஒன்றாலே !

பழனி குமார்
-------------------------------------------------------------

இம்மாதத்தின்  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -
பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்த பட்டுக்கோட்டை பாலு,

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி ஜூன் 2017
போட்டி -90 வது மாதம்
போட்டிக்கவிதை எண் -11
தலைப்பு- முட்டுக்கட்டை
அ ஆ கற்கவே
ஐம்பதினாயிரம் வாங்கி,
கல்வியை வியாபாரமாக்கி
விலைபேசும் கயவர்க்களுக்கு
போடவேண்டும் முட்டுக்கட்டை!
தாய்மொழியின் தரம் அறியாமல்
அன்னிய மொழி மோகம் கொண்டு,
அம்மாவை மம்மி எனப்பேசும்
அடிமைத்தனத்திற்குப் போடவேண்டும் முட்டுக்கட்டை!
ஒரு நாள் வாழ்வுக்கு,
ஓட்டுக்கு துட்டு வாங்கி
வாழ் நாள் உரிமைகளை இழந்து
மண்டியிடும் மடமைக்கு
போட வேண்டும் முட்டுக்கட்டை!
உற்றவளும் ஒரு தாயே,
உடன் பிறந்தவளும் ஒரு தாயே
என்பதை உணராமல்,
காம வேட்கை கொண்டு
கன்னியரின் வாழ்வைப் பறிக்கும்
காளையர்க்கு போடவேண்டும் முட்டுக்கட்டை!
காதல் காதலென்று,
உண்மைக் காதலெது எனப் புரியாமல்,
காமத்தின் வழியே சென்று
பறிகொடுத்து பதறியழும்
பாவையர்க்கு போடவேண்டும் முட்டுக்கட்டை!
பெற்றெடுத்த பெற்றோர்களை,
இரவு பகல் பாராமல்
உச்சி முகர்ந்து வளர்த்தவர்களை,
தனக்கும் முதுமை வரும் என உணராமல்,
முதியோர் இல்லத்தில் சேர்க்க்கும்
கொடுமைக்குப் போட வேண்டும்
முட்டுக்கட்டை!
இருப்பது போதும் என நினையாமல்,
இயற்கையை அழித்து
செயற்கையாக வாழும் மக்களின்
அறியாமைக்குப் போட வேண்டும்
முட்டுக்கட்டை!
மதம் இனம் என மதம் பிடித்து
ஒற்றுமையில் வேற்றுமை தூவி,
வாழும் வாழ்வின் மாண்புகளை சிதைத்து,
தீக்கிரையாக்கும் ஜாதி வெறியர்களுக்கு
போடவேண்டும் முட்டுக்கட்டை!
***************************************"

 பட்டுக்கோட்டை பாலு,


கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.