புதியவை

மாற்றுவோம் ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா )
              வரம்தரும் மரங்களை நிரந்தரம் அழித்துமே
                     தரங்கெட நடந்திடும் மனிதரை ஒதுக்குவோம்
              கரந்திடும் மனத்துடன் கானகம் அழித்திடும்
                       விரிந்திடா மனமுடை மனிதரை விரட்டுவோம் !

              வீடுகட்டி மனிதர்வாழ உதவிநிற்கும் மரமதை
                     வீட்டைவிட்டு காடுசென்று விரயமாக்கும் மனிதரே 
             காசுதேடும் ஆசைகொண்டு கானகத்தை அழிப்பதை
                     கடவுள்கூட பொறுக்கமாட்டார் கருணையற்ற மனிதரே !

            உணர்ச்சியில்லா மரங்களென்று உரத்தகுரல் எழுப்பிடும்
                     உணர்ச்சியுள்ள உங்களுக்கு உணர்ச்சி மழுங்கிபோச்சுதே 
           தளர்ச்சி வந்தபோதுநாம் தடுக்கிவிழா நின்றிட
                      உதவிநிற்க  தடிதரும்  மரத்தைவெட்டல் ஒழுங்கன்றோ !

           நாட்டின்வளம் மரங்களென்று நாளும்பேசி வருகிறோம் 
                   நாளும்மரம் வெட்டிவெட்டி நாட்டை வெளியாக்கிறோம் 
           காட்டுமரம் அத்தனையும் காசாய்நாட்டில் நிற்குது 
                   வெட்டிவிட்ட மனிதரெல்லாம் விருந்தையுண்டு மகிழ்கிறார் !

           காட்டில் விறகுபொறுக்குவார் கள்ளரென்று கூறியே
                    காவல்துறை கைதுசெய்து கசையடிகள் கொடுக்குது
           காட்டுமரத்தை வெட்டுவாரை காவல்துறை கண்டுமே
                    காசைவாங்கி பையில்போட்டு காலம்கழித்து நிற்குதே !

          நிழல்கொடுக்கும் மரங்களும் கனிகொடுக்கும் மரங்களும் 
                 நீண்டபயன் மனிதருக்குக் கொடுத்துக்கொண்டே இருக்குது 
          பயனடைந்து பயனடைந்து பணத்தை எண்ணும்மனிதனோ
                 பண்புநிலை தனைமறந்து மரத்தை வெட்டியழிக்கிறான் !

        வெட்டிநிற்கும் மனிதரின் கொட்டமதை ஒழித்திட
                வெட்டிவீழும் மரங்களோ விரும்பி நிற்பதில்லையே 
        கெட்டகுணம் கொண்டுமே வெட்டிநாளும் நின்றிடும் 
                மட்டகுண மனிதருக்கு மாண்டும் விறகாகிடும் !

      மரத்தைவெட்டி வரட்சியாக்கும் மனநிலையை மாற்றுவோம்
             மரத்தைநட்டு வளத்தைச் சேர்க்கும் வழியினைத்தொடக்குவோம் 
     மரங்கள் எங்கள்வாழ்விலென்றும் வசந்தமென்று எண்ணுவோம் 
             மரங்கள்வெட்டி அழிக்கின்றாரின் மனத்தை வெல்லமுயலுவோம் !
              


             image1.JPG

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.