புதியவை

இயங்கிநிற்கும் பிரம்மா ! ( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா )
   படைக்கின்ற பிரம்மாவை நாம்பார்த்த  தில்லை
   படைப்பதனை பார்த்துவிட்டு வியப்படைந்து நிற்போம்
   படைக்கின்ற பிரம்மாவும் அவர்படைப்பும் கண்முன்
   பார்க்கின்ற பாக்கியத்தைப் பார்மீது காண்போம் !

  எழுத்தாளர் இவ்வுலகின் இயங்கிநிற்கும் பிரம்மா
  எழுத்தாலே இவ்வுலகை அவர் ஆளுகின்றார்
  எழுத்தாலே எத்தனையோ எமக்களித்து நிற்கும்
  எழுத்தாளர் எல்லாமே இறைவனது வரமே !

  கல்லுக்குள் கலைநயத்தைக் காட்டுகிறான் சிற்பி
  சொல்லுக்குள் ஆயிரத்தைத் தீட்டுகிறான் எழுத்தன்
  நல்லவற்றைத் தீயவற்றை நாட்டுக்கு உரைக்கும்
  வல்லமையை எழுத்தாளன் வாங்கிவந்து உள்ளான் !

 வாழ்க்கையினை மாற்றுகின்ற எழுத்தாளர் தம்மை
 வானவரும் போற்றிடுவார் மனமார நாளும்
 வாழ்வினுக்கு ஏற்காமால் எழுதிநிற்பார் ஆகின்
 வாழ்க்கையிலே நரகமதை அடைந்திடுவார் விரைவில் !

   கம்பனெனும் எழுத்தாளன் கைபட்ட தமிழும்
   கவிகாள மேகமது கைபட்ட தமிழும்
   நம்ஐயன் வள்ளுவனார் நமக்களித்த தமிழும்
   நாளுமே எம்வாழ்வில் நல்லதுணை அன்றோ !

   சங்கத்தமிழ் எழுத்தாளர் சபையேறி நின்று
   இங்கிதமாய் எமக்களித்த இலக்கியதைப் பார்க்கின்
   எங்களது எழுத்தாளர் இவ்வுலகில் என்றும்
   இறவாத வரம்பெற்று வாழ்கிறார்  என்போம் !

    வாழுகின்ற வாழ்நாளை வசந்தமுள தாக்கி 
    வருங்காலம் எம்வாழ்வில் விடிவு வருமென்று 
    கூறுகின்ற துணிவுதரும் எழுத்தாலே எம்மை
    குதூகலத்தில் குளிக்கவைப்பர் எழுத்தாளர் அன்றோ !
    
    வறுமைதனில் இருந்தாலும் பொறுமையுடன் எழுதி
    வையகத்தார் மனங்களிலே மலர்ச்சிவர உதவி 
    தலைநிமிர்ந்து நிற்கின்ற தன்மையினை உடைய
    தகவுடைய  எழுத்தாளர் தமைப்போற்றி நிற்போம் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.