புதியவை

அறை எண் பதிமூன்று (மீ.விசுவநாதன்)
     திருவல்லிக்கேணி. ஐஸ்ஹவுஸ் பக்கம் உள்ள ஒடுங்கிய விடுதி. விடுதியின் வாசலின் இருபக்கமும் அப்படி ஒன்றும் சுத்தமாக இருக்காது. ஆனால் அதைக் கடந்து கொஞ்சம் உள்ளே சென்றால் அது ஒரு நல்ல விடுதிதான். அங்கே ஆண்களுக்கு மட்டும்தான்அதிலும் பிரும்மச்சாரி ஆண்களுக்குத்தான் விடுதியின் அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். விடுதியின் மேனேஜர் கந்தசாமிப்பிள்ளை எப்படியோ அங்கு வாடகைக்கு அறையைத் தேடிவரும் இளசுகளைப் பார்த்தவுடன் அவர்களது "ப்ரும்மச்சர்யக்" கண்களைப் பார்த்தேஇவன் பிரும்மசாரியா இல்லையா என்று எளிதில் எடைபோட்டுவிடுவார். அதற்கு ஒரு முக்கியப் பட்டறை போலவே விடுதியின் முன்பக்கத்து இடது புறத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில்வீட்டின் முன்பு திறந்த வெளியில் குறைந்த ஆடையுடன் ஒரு பெண் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து தண்ணீரைக் கோரிக் கோரித்தன் தலையின்  மீது விட்டுக் கொண்டிருப்பதும்அந்தத் தண்ணீர் அவளது தலை முடிதனை நனைத்துஅவளது நெற்றியின் வழியாக முகத்தில் இறங்கி அவளது கழுத்துக்குக் கீழே உள்ள இடங்களை நனைத்துக் கொண்டேகால்களின் வழியாகத் தரையில் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இளசுகளிடம் ," போப்பா... ஒங்களுக்கு இங்க அறை காலி இல்லை...வேற எடம் பாருங்க" என்று கந்தசாமிப் பிள்ளை விரட்டுவதும் வாடிக்கைதான். இப்போதெல்லாம் அதுவும் அவருக்கு அலுத்து விட்டது.

          "சார்.. ரூம் வாடகைக்குக் கிடைக்குமா?"

     அப்பொழுதுதான் அங்கு வந்த கண்ணன் அவரிடம் தயங்கிக் கேட்ட பொழுது," நீங்க எத்தனை பேரு... தண்ணி யடிப்பீங்களா...சிகரட் பிடிப்பீங்களா...எந்த ஊரு?" என்று தன்னுடைய  வலது கையை ஆட்டிக்கொண்டும் இடது கையால் தன்னுடைய  வேட்டியின் ஒரு நுனியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டும் மேனேஜர் கேட்க," நான் ஒருத்தன்தான் ..இங்க அண்ணாசாலைல ஒரு கம்பெனியில வேல பாக்கறேன்..எனக்கு ஊரு கோவில்பட்டி.." என்ற கண்ணனிடம்,"மொதல்ல இப்படித்தான் சொல்லிக்கிட்டு வருவீங்க....சாதுவா வெரலக் கூட சப்பத்தெரியாத மாதிரி....அப்பறமா ரெண்டு மாசம் போனா ...ராத்திரி கம்பளியப் போத்தி பொம்பளைங்கள ரூமுக்குக் கூட்டியாருவீங்க.... போலீஸ் வந்து என்னக் கூட்டிக்கிட்டுப் போயிடும்...போயா போயி யாரவது பெரியமனுசனக் கூட்டிவா பார்க்கலாம்." என்று மேனேஜர் கந்தசாமி பேசிக் கொண்டே வாசலை எட்டிப் பார்த்தார்.  அப்பொழுதுதான் அந்த முதல் வீட்டுப் பெண் தன்னுடைய காலில் பெரிய கொலுசுடனும்கண்களில் 'கரு கருவென மைதீட்டியும்தலையில் பூக்கூடையையே சுமத்திக்கொண்டது போல மல்லிப்பூவுமாகஉடம்பு தெரியும் ஒரு மெல்லிய ஆடையை  உடுத்திதன்னுடைய வலது கையில் உள்ள "ஹேர்பின்னைத் தலையில் சொருகிக் கொண்டே," மேனேஜர் ஐயா... நான் பீச்சுக்குப் போய்ட்டு வரேன் " என்று சொல்லிப் போனாள். மேனேஜர் வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார். "சார்.." என்ற கண்ணனின் குரல்தான் அவரைத் திரும்பவும் தனது நிலைக்குத் திருப்பியது. அவர் சுதாரித்துக்கொண்டு,"இத பாருங்க தம்பி...இங்க ரூம் காலி இல்லை..ஆனா ஒரே ஒரு ரூம் இருக்கு..அதுக்கு நீங்கள்லாம்  வரமாடீங்க" என்ற னேஜரிடம்,"பரவாயில்லே நான் வரேன்சார்..எனக்கு இங்க இருந்து என்னோட ஆபீசும் பக்கம்..சாப்பாடுக் கடைகள் எல்லாம் கூட பக்கம்தான்.." என்று கண்ணன் சொன்னான். அந்த அறைக்கும் ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்,"இதோ பாருங்க இந்த முதல் மாடில மூணாவது அறைதான் அது...நாலு கட்டில்கள் இருக்கும். ஒரு கட்டிலுக்கு மாத வாடகை ரூபாய் முப்பது. தெரிந்தவர்கள் வந்து தங்கினால் ஒரு நாளுக்கு ரெண்டு ரூபாய்.. தினமும் குடிக்கத் தண்ணீய ஒரு ஆயா கொண்டுவந்து கொடுக்கும். அதுக்கு மாசம் அஞ்சு ரூபாய் தரணும்..கொழாய்ல எப்பவும் தண்ணி வரும்..அத வீணாக்கக் கூடாது...அதவிட முக்கியமா ரூம்கதவத் தொறந்து இங்க வெளியில குளிக்கிற பொண்ணுங்களப் பாக்கக் கூடாது...அவங்க அங்க அந்த வெட்ட வெளியிலதான் குளிப்பாங்க...அத நீங்க பாத்துஅதுக்கு அவங்க கத்திக்கித்தி ரகளை பண்ணினாங்கன்னாநீங்கதான் அறையக் காலி பண்ண வேண்டி வரும்....இங்க மொத்தம் முப்பத்தைந்து ரூம்கள் இருக்கு. எல்லாத்திலையும் ஆட்கள் இருக்காங்க.. ஒரே ஒரு அறைதான் ஆளில்லாமா இருக்கு.. அந்த அறையின் எண் பதிமூன்று. ஒங்களுக்கு பதிமூன்றாம் எண் பாதகம் இல்லேன்னா வாங்க..மூணு மாச அட்வான்ஸ் ரூபாய் தொண்ணூறு கொடுத்தா நாளைக்குக் காலைல நீங்க ஒங்க சாமானக் கொண்டு வரலாம்" என்று மூச்சு விடாமல் மேனேஜர் சொன்ன சமயம் அந்த விடுதியில் மின்சாரம் போனது. மீண்டும் ஐந்து நிமிடங்களில் ஒளி வந்துவிட்டது. கண்ணன் அட்வான்ஸ் பணம் தந்த பொழுது," காலேல ரசீது வாங்கிக்குங்க ...அப்புறம் தம்பி நான் சொன்னது நினைவு  இருக்கட்டும்..தப்பு தண்டா எதுவும் இல்லாம இருங்க..பாத்தா அப்ராணியா இருக்கே..." என்று புலம்பியபடி பணத்தை மேஜையின் முதல் அறைக்குள் வைத்துப் பூட்டிச் சாவியை இடது பக்கச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.

    பதிமூன்றாம் அறையைச் சுத்தம் செய்துஒரு பானையில் தண்ணீர்  நிரப்பிஅறையின் சாவியை மேனேஜர் கந்தசாமிப் பிள்ளை கண்ணனிடம் தந்த நேரத்தில்அந்த அறையைத் தாண்டி ஆறேழு பேர்கள் பக்கத்து அறைக்குப் போய்க் கொண்டிருப்பதை மேனேஜர் எரிப்பது போலப் பார்த்து விட்டுதனது அறையை நோக்கி நடக்கத் துவங்கினார்.

    பதிமூன்றாம் எண் அறை அழகாகத்தான் இருந்தது. கண்ணனுக்கு அது பிடித்திருந்தது. அலமாரி போன்ற இடத்தல் ஒரு சாமி படம் வைத்துஅருகிலேயே பாரதியார் புத்தகங்களும்இன்னும் சில இலக்கியபக்திப் புத்தகங்களையும் அடுக்கி வைத்துக்கொண்டான். ஒரு சின்ன கோத்ரேஜ் பீரோவில் அவனது துணிகளையும் கொஞ்சம் பணத்தையும் வைத்துக் கொண்டான். அறையின் கட்டில் நன்றாகத்தான் இருந்தது. பல நாட்களாக அவனது அறைக்கு யாருமே வரவில்லை. இவனைத் தவிர மற்ற மூன்று பேருக்கான கட்டில்கள் காலியாகவே இருந்தன. சில நாட்களில் இரவு வேளைகளில் தனியாக இருக்கும் நேரம்அவனது அறையின் கதவில் யாராவது மற்ற அறையில் இருப்பவர்கள் குடித்து விட்டு விழும் சத்தங் கேட்டுதலை நிமிர்த்து பார்த்துவிட்டுஅந்த இருட்டில் யாரெனத் தெரியாததால் மீண்டும் படுத்துக்கொண்டு விடுவான். ஆனால் இதிலெல்லாம் கண்ணனுக்குக் கொஞ்சமும் பயம் கிடையாது. எப்போதும் படித்துக் கொண்டும்எழுதிக் கொண்டும் அவன் இருப்பதால்அவனது மௌனம் மற்றவர்களுக்கு அவன் மீது ஒரு மரியாதையைத் தோற்று வித்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ரகுகல்யாணசுந்தரம்சுரேஷ்ஜெமினி என்று அவனுடன் அவனது நண்பர்கள் அந்த அறையில் வாடகைக்குச் சேர்ந்து கொண்டனர். அந்த அறை நண்பர்கள் சரியான நேரத்தில் புறப்பட்டு சரியான நேரத்தில் அறைக்குத் திரும்பு வதாலும்வாடகையை முதல் தேதியிலேயே கொடுத்து விடுவதாலும் விடுதியின் மேனேஜருக்கு அவர்களை  மிகவும் பிடித்திருந்தது.

        ஒருநாள் மலை நான்கு மணி இருக்கும். கண்ணனுக்கு அன்று அலுவலகம் விடுமுறை யானதால் அறையினிலேயே நண்பர்களுடன் பாடிக்கொண்டும்நகைச் சுவையாகப் பேசிக்கொண்டும் இருந்தான். பக்கத்து அறையில் உள்ள வக்கீல் நண்பன் மணிகண்ணனை அழைத்து," கண்ணா...இன்னிக்கு ஆறு மணிக்கு என்னோட அறைக்கு வா... ஒனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு" என்று சொன்னான் . கண்ணன் போகவில்லை. கண்ணனின் அறையைத் தாண்டி ஐந்து மணிக்கு இருபது வயது மதிக்கத் தக்க ஒரு கல்லூரிப் பெண்கையில் ஒரு சிறிய பையுடன் தலையைக் குனிந்தபடி வேகமாக "மணி"யின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக்  கண்ணனும் அவனது நண்பர்களும் பார்த்தனர்.

     அவளின் பின்னாலேயே வந்த மேனேஜர்," அந்தப் பொண்ணு வக்கீலுக்குத் தெரிஞ்சவங்களாம்" என்று தலையைக் குனிந்தபடிக் கண்ணனிடம் மெல்லிய குரலில் சொல்லிச் சென்றார்.

     இரவில் "சைடோஜி மெஸ்ஸில்" சாப்பிட்டுவரும் வழியில் "நாயர்" கடையில் பாலும் குடித்து விட்டு நண்பர்களுடன் அறைக்குள் நுழையும் வேளைவக்கீல் மணி அவன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து, "கண்ணா ..நீ ஒரு நல்ல சந்தர்பத்தக் கோட்டை விட்டுட்டாய்...இங்கவா சொல்லறேன்" என்று அழைத்தபோது கண்ணனின் நண்பர்கள் அறைக்குள் சென்று விட்டனர். வக்கீல்கண்ணனின் அருகில் வந்து," அந்தப் பொண்ணு ரொம்ப நேரம் காத்துக் கிட்டிருந்தா...ஒனக்காகவும் தான்..நீ வரலேன்னு தெரிஞ்சதும்சார் ..அவங்கள்லாம் பயந்தாங் கொள்ளிகள் என்று கேலியாகச் சிரிச்சிக்கிட்டே போய்ட்டா " என்று சொன்னான். கண்ணன் எதையோ கிடைக்காத பெரும் செல்வத்தை இழந்து விட்டதைப் போலச் சொன்ன வக்கீல் மணியைப் பார்த்து, " மணி ..... நம்மகிட்ட சிரிச்சிக் கிட்டேதான் வரும் பாவம். அது பணமா வரும்பொண்ணுங்களா வரும்இன்னும் எத்தனையோ வடிவத்துல வரும். நாமதான்  கவனமா இருக்கணும். நீ என்னைவிட ஒண்ணு ரெண்டு வயசு மூத்தவன்..படிச்சவன்..பாவ புண்ணியம் பாக்கலைன்னாலும் மனச்சாட்சிக்குப் பயப்பட வேண்டாமா.. அது உலகம் புரியாத சின்னப் பொண்ணு....கல்லூரியில படிக்கற பொண்ணு...அதுக்கு நல்லது சொல்லி அனுப்பாம இப்படிப் பாவத்தச் சம்பாதிக்கற...அவ உணர்ச்சிக்கு அடிமையாகர வயசுப் பொண்ணு ..தாசி இல்லை.. நமக்கும் சகோதரிகள் உண்டு..அதுவே இல்லைனாலும் அம்மா நிச்சயமாக உண்டே. இனிமே இந்தக் காரியம் வேண்டாம்...நீ எனக்கு நண்பன்..அதுதான்...." என்று கண்ணன் சொன்னது மணிக்குச் செவிடன் காதில் ஊதிய சங்கொலிதான். கண்ணன் அறைக்குள் வந்த நேரம் எல்லோரும் தூங்கி விட்டனர். கண்ணனுக்கு அன்று தூக்கமே வரவில்லை.

           கண்ணனுக்குக் கல்யாணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகுஒருநாள் அவன் முன்பு தான் தங்கி இருந்த விடுதியைப் பார்க்கத் தன்னுடைய மனைவியுடனும்மூன்று வயது மகனுடனும் சென்றிருந்தான். "கந்தசாமிப் பிள்ளை இறந்து விட்டதாகவும்இப்பொழுது நான்தான் மேனேஜர்" என்றும் ஒருவர் சொன்னார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே,"ஐயா...நல்லா  இருக்கீங்களா...இது யாரு.. ஒங்க வீட்டம்மாவா  ..இது மவனா" என்று அறைக்குத் தண்ணீர்தரும்இப்போது சுமார் எழுபத்தைந்து வயதாவது இருக்கும் "ஆயா" அன்போடு விசாரித்தாள்.

     கண்ணனும்அவனுடைய  மனைவியும் அவளை வணங்கினர்.. அவள் மகிழ்ச்சியில் தன் உடைந்த சில காவிப்பற்கள் தெரியச் சிரித்தாள். விடுதியை விட்டு வாசலை நோக்கி வரும் வேளை," அண்ணே..நல்லா  இருக்கீங்களா" என்று விசாரித்தாள்முன்பு வாசலிலேயே குளிக்கும் அந்தப் பெண். அப்போது அவளருகில் அவளுடைய கணவனும்ஒரு சின்னக் குழந்தையும் இருந்தனர். அந்தக் குழந்தை அழகாக இருந்தது. எப்போதும் போல அவளது கண்கள் வெகுளியாகச் சிரித்தன.

      கண்ணன் தன்னுடைய மனைவியையும்மகனையும் கூட்டிக்கொண்டு பக்கத்தில் உள்ள குளிர் பானக் கடைக்குச் சென்றான். வக்கீல் மணியும் அவனுடன் ஒரு பெண்ணும் அந்தக் கடையில் இருந்து வெளியில் வருவதைத் தற்ச்செயலாகப் பார்த்த கண்ணன் அவர்களின் முன்பாக ஆச்சர்யத்துடன் நின்றான்.
      ஏய்...கண்ணா ...நீ எங்க இப்படி" என்று கண்ணனைக் கட்டிக் கொண்டு," இவதான் என் மனைவி தெய்வநாயகி...இவளும் வக்கீல்..எனக்குத் தூரத்து உறவு." என வக்கீல் மணி அறிமுகப் படுத்தினான்.  பரஸ்பர அறிமுகம் முடிந்து புறப்படும் வேளை,'' கண்ணா ..நீ நம்ம விடுதிக்குப் போறதுண்டா...நான் போவதே இல்லை" என்ற மணியிடம் "இபோ நாங்கள் அங்கிருந்துதான் வருகிறோம்" என்று கண்ணன் சொன்னதும்மணி மௌனமானான்.

      "இது உங்க குழந்தையா" என்று கேட்ட மணியிடம், "ஆமாம்..உங்களுக்கு" என கண்ணன் கேட்டதும் "எனக்கு இந்த ஜன்மாவில் அந்த பாக்கியம் இல்லை என்று மருத்துவம் உறுதியாகக் கூறி விட்டது" என்ற மணியின் வார்த்தைகளில் ஒரு சோகமும் உறுத்தலும் இருந்தது.

     வக்கீல் மணியும் அவனுடைய மனைவியும் ஒரு காரில் ஏறிப் போனபின்கண்ணன் அவனுடைய குடும்பத்துடன் கடைக்குள் சென்றான். குளிர்ந்த பானத்தைக் கண்ணன் குடிக்கத் துவங்கியதும்அவனது மனக் கண்ணாடியில் முன்பு ஒரு மாலை வேளையில் பதிமூன்றாம் அறையைத் தாண்டி மணியின் அறையை  நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் உருவம் சற்று வந்து மறைந்தது. 
                                                 -----௦௦௦--------

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.