புதியவை

எம்ஜிஆர் எனும் நாமம் ! ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம் 

                                
           வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்
           எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்
           கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து
           மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !

           ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்
           வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்
           நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து
           ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !

           தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே
           தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே
           வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு
           வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

           எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்
           அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்
            படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு
            பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார்  !

             தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென
             தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்
             பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து
             பாமரரின் தோழமையை பரிசெனவே  பெற்றுநின்றார்  !

            வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்
            உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே
            நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்
            நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

            நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை
            வெறுத்துவிட்ட  நாயகனாய் வெற்றிநடை போட்டாரே
            குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி
            நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே  எம்ஜிஆர் !

            ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்
            அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்
            ஆதாலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு
            ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

              மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்
              மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே
              பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்
              பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே   எம்ஜிஆரை !

             படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்
             எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார் 
             நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்
             ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

            பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்
            பட்டுத் தெறித்தனால் பலருமே பயனடைந்தார் 
            கிட்டவந்து தொட்டுப்பார்க முட்டிமோதி நின்றார்கள்
            அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

          புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்
          புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர் 
          நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக
          உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

          எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது
          எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார் 
          தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்
          தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.