புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஒகஸ்ட் மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்


முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந்த ..கா.ந.கல்யாணசுந்தரம்

உலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப்
போட்டி ஒகஸ்ட் மாதம் 2017


போட்டி -92வது மாதம்
போட்டிக்கவிதை எண் 14
தலைப்பு :- நன்றியுணர்வு
இறைத்தன்மை ஊனுடலில் இருக்கிறது
நானிலம் போற்றும் நன்றியுணர்வின்
திசுக்கள் மூளைச் செதில்களில் தழைத்திருக்கிறது
பயன்பாட்டில் சிலரே....பாழும் மனிதத்தின்
பகுத்தறிவுத் திறனற்ற செய்கைகளால்
படுகுழுக்குள் புதையுண்டதோ நன்றியுணர்வு ?
ஐந்தறிவு விலங்கினமும் வாலாட்டி நன்றியினை
வகையாய் மானுடர்க்கு எடுத்தியம்பும்
விதம்தான் என்னே !
தெய்வப்புலவன் திருவள்ளுவன் எழுத்தாணி
செய்நன்றி அறிதலுக்கு அதிகாரமே படைத்தது !
சேராத இடம் சேர்ந்தும் செஞ்சோற்றுக் கடனுக்கு
சோர்விலா தோள் கொடுத்தான் வள்ளல் கர்ணன் !
வாழ்நாளை நீடிக்கும் அரியதோர் நெல்லிக்கனியை
வளமிகு நட்பின் நன்றியுணர்வால் அவ்வைக்கு
மனமகிழ்ந்தளித்தான் தகடூர் அதியமான் !
என்புதோல் போர்த்திய உடலுக்குள்
அன்பின் ஊற்று சுரப்பதுபோல்
கைகொடுத்த நல்மனத்தின் மகிழ்வுக்கு நம்மிடத்தில்
நன்றியுணர்வு நதிபோல் பெருக்கெடுத்து ஓட வேண்டும் !
நன்றி மறப்பது நன்றன்று ....நினைவில் கொள்வோம் !
கா.ந.கல்யாணசுந்தரம்


✳ ✳ ✳✳  ✳ ✳ ✳ ✳ ✳ ✳ ✳
ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் இலங்கையைச் சேர்ந்த பூகொடையூர் அஸ்மா பேகம்

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிஒகஸ்ட் மாதம் 2017
போட்டி -92வது மாதம்
போட்டிக்கவிதை எண் 15
தலைப்பு :- நன்றியுணர்வு
மலைகளை மறந்து எந்த
நதியும் பாயவில்லை
அலைகளை மறந்து விட்டு
கரைகள் மாளவில்லை
நொடிக்கொரு உயிர் தரும்
காற்றுக்கு நன்றி
துடிக்கின்ற இதயம் தந்த
இறைவனுக்கு நன்றி
செடிகளை முளைப்பித்த
மழைக்கு நன்றி
சோற்றுக்காய் சேற்றில் காய்ந்த
உழவனுக்கு நன்றி
உற்றவளை பெற்றவளை
உதைப்பதல்ல நன்றி
உலகு தந்த அருள் மறந்து
உளறுவதா நன்றி
மறக்காமல் மனக்கண்ணில்
பிறர் தந்த கரம் பற்றி
வரம் என்று எழுந்து விட்டு
மறந்து விட்டான் நன்றி கெட்டு
இயற்கை அளித்தவையை
இயன்றவரை அழித்து விட்டு
இயற்கையில் வாழ்ந்து ஈற்றில்
இயற்கையை மறந்து விட்டான்
மரத்துக்கும் மலருக்கும்
மற்றெல்லா பொருளுக்கும்
நன்றியுண்டு நன்றியுண்டு
நம்மைவிடவும் நாய்க்கும் உண்டு
புலம்புவதை நிறுத்தி விட்டு
புரிந்து கொண்டேன் இதயம் தொட்டு
எட்டுத்திக்கும் எல்லோருக்கும்
நன்றி சொல்வேன் மனது விட்டு
பார்த்தும், பழகியும், வாழ்த்தியும்
வளர்த்தும், தோள் கொடுத்தும்
அழவைத்தும் ,அரவணைத்தும்
அகிலத்தில் அன்பு செய்தும்
மூச்சிழுக்கும் காற்று முதல்
பேச்சழுத்தும் மானிடமும்
உயர்திணை அஃறிணைகள்
பேதமைகள் மறந்து நின்றும்
அணுவளவும் எனைத்தழுவும்
நினைவுக்குள் நின்றதினால்
அனைத்துக்கும் நன்றி சொல்வேன்
ஆறறிவில் உயர்ந்ததினால்.
பூகொடையூர் அஸ்மா பேகம்

       

மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் 
பெறுகின்றார்இலங்கையைச் சேர்ந்  .கவித்தூறல் கிருஷ்ணா.
உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிஒகஸ்ட் மாதம் 2017
போட்டி -92வது மாதம்
போட்டிக்கவிதை எண் 11
தலைப்பு :- நன்றியுணர்வு
தமிழோடு தொட்டுத் தழுவும்
தமிழர் பண்பாடு கலாசாரம்
சமய வழிபாடு என அனைத்தும்
உணர்த்தும் நன்றியுணர்வை...
நன்றி கொன்று வாழ்பவர்
வாழ்வு உய்வின்றி மாழும்
நிலையறியா மானுடம்
வாயிற் காவல் நாயுரைக்கும்
அரை வயிற்று உணவிற்காய்...
கருவறையில் சுமந்தவள் மனம்
கல்லாக கண்ணீர் மாலைகள்
கறை படி ஆடை சுமந்தபடி
உதிரம் சிந்தி காத்தவனின்
தெருவோர அவல நிலை...
நன்றி மறந்தது சேய் உள்ளம்
வான் பொழிந்து குளிர்ந்த மண்ணும்
பசுமை சுமக்க மலர்ந்த வானும்-இன்று
ஓசோனில் துவாரம் குடிநீருக்கும் தட்டுப்பாடு
நவநாகரீக மோகத்தில் தமிழர் நாவும்
நன்றி கூற மறக்குது கூறும் தருணம்
ஆங்கிலத்தையே நாடுது...
தாய் மனம் கருக குளிர்காயும் நிலையென்ன
நன்றி உணர்வின்றி வாழும் வாழ்வென்ன
மண்டியிடாத வீரம் தலைகுனிந்ததும்
தமிழன்னை மடிதனில் பிணக்குவியல்களும்
ஊண் உண்டு உதிரம் குடித்து
தாயவள் மௌனித்ததும்
நன்றி மறப்பின் வஞ்சக வரவாலேயே
வந்தாரை வாழ வைத்த எம் பூமி
வாழையடி வாழை குலம் வாழ வைத்த
தமிழ் தழைத்தோங்க
நன்றியுணர்வோடு தமிழர் பண்பாடு
காத்து நிற்போம்
பிணமலை நடுவே இரத்த ஆற்றில்
மரணத்தை வென்ற தமிழர் நாம்- தினம்
தமிழனென்றே தலை நிமிர்வோம்
.
..
.....கவித்தூறல் கிருஷ்ணா.





இம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்தஷேக் அப்துல்லாஹ் அதிராம்பட்டினம்.

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிஒகஸ்ட் மாதம் 2017
போட்டி -92வது மாதம்
போட்டிக்கவிதை எண் 10
தலைப்பு :- நன்றியுணர்வு
சுற்றுகின்ற கம்பிகளுள் சுள்ளென்ற மின்னோட்டம்
பற்றிவரும் பலன்தருமே பார்க்கவிய லாதவொன்றே !
தொற்றிநிற்கும் யாவருக்கும் துணையாகி வுதவிடவும்
சுற்றிசூழ்ந்தே காத்திடுமே சுயமாக யூறியதும் !
தாலாட்டி வளர்க்கவில்லை தானுண்ட தின்மீதம் !
வாலாட்டி வரவேற்கும் வந்துவந்து வட்டமிடும்
தோலான்து ருத்தியாகின் தோன்றிடுமே பாசமதும்
ஆலாய்ப்ப றந்துசேர்த்து மளிப்பதில்தான் கண்டிடலாம் !
கற்றகல்வி புண்ணியமாம் காட்டிவிட்டால் சுயநிலையை
பெற்றிடுவார் பேரின்பம் பிரியாதப் பார்வையிலே !
நற்றவத்தில் மேன்மையாகும் நன்றியுணர் வின்னன்பால்
பெற்றபிள்ளை தேனாவார் பெற்றவர்க்கு மானந்தம் !
பலவானத் தோற்றங்கள் பார்வைக்கு வேறாகின்
சிலவதிலே சிதைந்திடவும் சித்தமதில் வலிப்பதுவும்
குலவிடவும் இனிப்பதுவும் கொடூரமதும் கசப்பதுமே
இலகுவாகும் சூட்சுமமு மிதயத்தால் தெளிந்திடவே !
ஒன்றதனில் வேறுயில்லை வொன்றாக வுள்ளதினால்
ஒன்றதுவி லசைந்திடவே வுண்டாகும் பலமாற்றம் !
தன்னாதி மறந்திடுமே தன்னிலேயே வேறாகி !
முன்நிலையை வுணர்த்திடத்தான் முகிழ்ந்திடுதே விசுவாசம் !
தான்னிடும்தன் மிச்சமதும் தன்வாலாட் டிதூண்டுவதும்
வான்னதுவில் மின்னசைவாய் வகைவகையாய் மாறியதும்
தான்மறைந்தக் கருவூலம் தன்னையறி யவென்றேதான்
மான்பாளன் தூண்டுதலாம் மதிவூன்றி னுணர்ந்திடலாம் !
ஒன்றிவுண ரதோற்றங்க ளிலுண்டாக்கிக் காட்டியதே
இன்றியிவ்வுண் மையறியாத யெப்பிறப்பும் வீணாகும் !
நன்றியென்றே சுட்டினோமே நம்மில்ம லர்ந்ததுவை !
அன்றியது மில்லையாகி னானந்த மகப்படாதே !
ஷேக் அப்துல்லாஹ் அதிராம்பட்டினம்.


கவிதைகளை  தெரிவு செய்த(அன்பான (பாவலர்களுக்கு)   நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள்  

 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 


போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளை விடாது எழுதி  
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

போட்டியாளர்களை தடாகத்தின் தாமரைகளாக மதிக்கின்றோம்
தொடர்ந்து  எழுதிவரும் நல்ல சிறந்த கவிஞர்ககளை   கௌரவிக்கவும்  உள்ளோம் 
மாறாக போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு தடாகம் ஒரு போதும் விருதுகள் வழங்காது  பட்டமும் சான்றிதழ் மட்டுமே தான் வழங்கும் 
 தற்போது போட்டியில்  பங்குபற்றும் சிலர் தமது திறமையான  நட்புக்களின் கவிதைகளை பெற்று தமது சொந்த பெயரில் போட்டியில் பங்குபெறுவதை அறிகின்றோம்  இந்த நிலையில் எப்படி விருதுகள் வழங்குவது ?

நல்லதிறமையான ஆற்றல் உள்ளவர்கள்  கௌரவிக்கப்படாமல் இருக்கின்றார்கள் 

ந்த சாதனைகளும் ஆற்றலும் திறமைகளும் இல்லாதவர்கள் இன்று பல உயர் விருதுகளை தமக்கு தெரிந்த தமக்கு விருப்பமான உறவுகளுக்கு வழங்கி  விருதுகளின் தரத்தைக்கூட குறைத்து விடுகின்றார்கள் 
அப்படியான செயல்களை தடாகம் ஒருபோதும் செய்யாது
தரமானவர்களை மட்டுமே நாம் கௌரவிக்க உள்ளோம் 

எங்களது முயற்ச்சி வெற்றி பெற
எமது தடாகம் குடும்ப உறவுகள்  ஒன்று சேர்வோம் 
கவினுறு கலைகள் வளர்ப்போம் 


நாம் கொடுக்கின்ற பட்டம் பற்றி கேட்ட பலரது   கேள்விகளுக்கான பதில் 

இங்கு தருகின்றோம் 


கவின் = எழில்/ அழகு/ நயம்/ கவர்ச்சி
கவின் கலை என்றால் அழகான கலை. 

கவின் எழில் என்றால், நயமான எழில் அல்லது கவர்கின்ற எழில் என்ற பொருள்


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.