புதியவை

மறைந்தும் மக்கள் மனங்களில் நினைவாக திகழும் மர்ஹும் அஷ்ரஃப்!எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி(கல்குடா)உலகில் பல்வேறுபட்ட மனிதர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்பில் எல்லோரும் அறிந்திருப்பதுமில்லை. அறிந்திருந்தவர்களின் நினைவுகளும் சில நாட்களில் மறைந்து விடும். ஆனால், ஒரு சிலர் அவ்வாறு மறக்கடிக்கப்படுவதில்லை. மறைந்தாலும் மக்களின் மனங்களில் வாழவே செய்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள் அதனால் மக்கள் அவர்களை மறப்பதில்லை. 

இந்த அடிப்படையில் நாதியற்று, அரசியல் முகவரி இல்லாது உரிமைகளை இழந்த ஒரு சமூகத்திற்கு அதன் முகவரியைப் பெற்றுக் கொடுத்து தன் வாழ்வை அம்மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தும் மக்கள் மனங்களில் இன்றும் நினைவாக வாழும் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களை நாம் கூறலாம். 

யார் இந்த அஷ்ரஃப்? 
காலணித்துவ ஆட்சிக்குள் உட்பட்டிருந்த இலங்கை தேசம் சுதந்திரம் பெற்ற ஆண்டில் முஸ்லிம்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காய் இம்மண்ணில் பிறந்தவர் தான் அஷ்ரஃப். 1948ம் ஆண்டு 10 மாதம் 23 ம் திகதி சம்மாந்துறை மண்ணிலே முஹம்மட் ஹுசையின் விதானையார் மதினா உம்மா தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். இவரை குழந்தையாகப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்காது இவர் முஸ்லிம் சமூகத்தின் விடிவெள்ளியென்று. 

இளமைப்பருவமும் கல்வியும் .
ஆரம்பக்கல்வியை கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலையில் 1955ல் கற்றார். 1960ல் கல்முனை பாத்திமா கல்லூரியிலும், கல்முனை வெஸ்லி உயர் பாடசாலையில் 1961லும் கற்றார். 1967ல் கொழும்பு அலெக்சான்றியா கல்லூரியில் ஆங்கில மொழிக்கல்வியைக்கற்றார். 

ஆங்கில மொழி! 
சர்வதேச ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமான சர்வதேச மொழியாக ஆங்கில்ம் விளங்குகிறது. அஷ்ரஃப் அவர்களைப் பொருத்தளவில் அவர் ஆங்கிலம் பேசுவதைப்பார்க்கும் போது அது அவரின் தாய்மொழியாக இருக்குமோ என்று ஆச்சரியப்படுமளவிற்கு சரளமாகப்பேசுவார். 

ஆனால், ஆரம்ப காலத்தில் அவரின் ஆங்கில அறிவைப் பொறுத்த வகையில் "ஜக்ஃபுருட்" என்றால் என்னவென்று அறியதவராக இருந்தார். இவ்வாறு இருந்தவரை ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுமளவிற்கு மாற்றியதில் மைத்துனர் உசன் நீதிவானுக்கு பெரும் பங்குண்டு. எவ்வாறெனின், உசன் நீதிவானில் இல்லத்தில் வசித்த போது, இவரின் ஆங்கிலத்தைப் பார்த்து விட்டு ஊக்கமளித்தார். இதன் காரணமாக அஷ்ஃப் அவர்கள் ஆரம்ப வகுப்பு ஆங்கிலப்புத்தகம் தொடக்கம் ஒவ்வொரு மாதமாக ஒவ்வொரு வகுப்பு புத்தகமாகப் படித்து முடித்தார். தேவையும் ஆர்வமும் அதிகரித்து விட்டதால், மிகக்குறுகிய காலத்தில் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றார்.  இதனைப் பற்றிப் பிடித்ததன் விளைவாகவே சட்டத்துறையை நோக்கிப்பயணித்தார். 

சட்டத்தரணி. 
1970ம் ஆண்டு சட்டக்கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டார். சட்டக்கல்வியைத் தொடர்வதில் பொருளாதாரம் அவருக்கு ஒரு சவாலாக மாறவே, தனது இலட்சியத்தை இடைநடுவில் கைவிடாது, சிறிய தொழிலொன்றை மேற்கொண்டு தன்னுடைய கல்விக்குத் தேவையான பணத்தைச் சேகரித்து கல்வியைத்தொடர்ந்தார். 

சட்டக்கல்லூரியில் கற்கும் போது சட்ட மாணவர் தமிழ் மன்றத்தைப் பயன்படுத்தி தனது வாதத்திறமைகளை விருத்தி செய்து கொண்டார். விவாத அணித்தலைவராக 1970ம் ஆண்டு செயற்பட்டார். அதே போல் எம்.சுவாமிநாதன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்திற்கான எழுந்தமான பேச்சுப்போட்டியில் 1973ல் இரண்டாமிடத்தைப் பெற்றார். அதே ஆண்டில் நடைபெற்ற சேர் பொன்.இராமநாதன் ஞாபகர்த்த தங்கப்பதக்கத்திற்கான அறங்கூறும் அவையத்துறைப் போட்டியிலும் இரண்டாமிடத்தை பெற்றார். 

இவ்வாறு தனது சட்டக்கல்வியை நிறைவு செய்த அஷ்ரஃப் அவர்கள், அரச சட்டத்தரணியாக 1975ல் தனது தொழிலைத் தொடங்கினார். சட்டத்தரணியாக நீதிமன்றங்களுக்குச் செல்லும் காலத்தில் சமூக நோக்கிலும் மனிதாபிமான அடிப்படையிலும் வழக்குகளுக்கு ஆஜரான சந்தர்ப்பங்களுமுண்டு. சட்டத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி, 1994ல் சட்டமுதுமானிப் பட்டத்தையும் பெற்றார். இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் தெரிவு செய்யப்பட்டார். 

திருமணம்! 
இன்று பலரிடம் காணப்படுவது கொடுத்த வாக்கை மறந்து வாழும் பழக்கம். ஒரு சிலரே தனது வாக்கை அமானிதமாக பேணுகிறார்கள். அஷ்ரஃப் அவர்களும் ஒரு முறை 1994 ல் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அம்பாறையில் ஆறு சபைகளில் ஒன்றைக் கைப்பற்றது தனது கட்சி விட்டால், தனது பாராளுமன்றப் பதவியைத் துறப்பதாக கூறி, இறுதியில் இரு சபைகளில் தோற்கவே தனது பதவியைத் துறந்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் என்பது எல்லோரும் அறிவோம். அதே போல தான் ஒரு பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியையும் பல எதிர்ப்புக்கு மத்தியிலும் குடும்பமே எதிர்த்த வேளையிலும் அஷ்ரஃப் நிறைவேற்றினார். அது தான் அவரின் திருமணம். அவரின் மனைவி தான் பேரியல் அஷ்ரஃப். இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை தான் அமான். 

தலைமைத்துவம்! 
முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சி இல்லாததன் விளைவாக அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளையும், நடக்கும் அநிதிகளுக்கு முடிவு கட்டவும் தனது போராட்டத்தை பல வழிகளிலும் முன்னெடுத்தார். அவரிடம் இளம் வயது முதல் இருந்த சமூகப்பற்றும் ஆன்மீகத்தாகமும் இவைகளை முன்னெடுப்பதில் தாக்கஞ்செலுத்திய காரணிகளாகும். இந்தப்போராட்டத்தில் தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டு அகதியாக கொழும்பு சென்ற வரலாறுமுண்டு. 

இவ்வாறு பல இழப்புகள், சோதனைகளுக்கு மத்தியில் தான் முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வந்தார். பலரும் இது சாத்தியமில்லையென்று விவாதிக்கவே அவர் இதனைச்சாதித்துக் காட்டினார். 1981ல் முஸ்லிம் காங்கிரஸைப் உருவாக்கினார். அதனை 1986ல் அரசியல் கட்சியாக பாஸாவிலாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரகடணப்படுத்தினார். 

இந்தக்கட்சியினூடாக அரசியலில் ஈடுபட்டார். வடகிழக்கு வெளியில் முதன் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையில் 12 ஆசனங்களைப் பெற்று தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது. அதே போல், 1988ம் ஆண்டில் நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அஷ்ரஃப் சிறப்பாக வியூகம் வகுத்து போட்டியிட்டு 15 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 

இவ்வாறு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட அஷ்ரஃப் அவர்கள் ஜனாதிபதித்தேர்தல் காலத்தில் ஜனாதிபதி பிரமதாசாவுடன் பேசி தேர்தல் வெட்டுப்புள்ளியைக் குறைத்து சிறு கட்சிகளும் பிரதிநிதித்தும் பெற வழிவகுத்தார். 

1989ல் 9வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 40 வருடங்களின் பின் முஸ்லிம் கட்சிப் பிரதிநிதியாக  பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்தார். 

அதே போல் 1994ல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கப்பல், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வும, புனரமைப்பு அமைச்சராகவும் திகழ்ந்தார். 

இவ்வாறான அரசியல் அதிகாரங்களைப் பெற்ற காலத்தில் சமூகப்பணியைத் துணிச்சலாக மேற்கொண்டு பல சாதனைகளைச் சாதித்தும் காட்டினார். அவைகளுள் தென் கிழக்குப்பல்கலைக்கழகம் )23-10-1995), ஒலுவில் துறைமுகத்திட்டம், வேலைவாய்ப்புகள் எனப்பல விடயங்களை இவரது காலத்தின் அபிவிருத்தியுடன் கூடிய உரிமைகளாகக் குறிப்பிடலாம். 

அவரின் திறமைகளைக் குறிப்பிடும் போது, ஒரு கவிஞராகவும் திகழ்ந்தார், அதற்குச்சான்றாக "நான் எனும் நீ" என்ற பெருங்கவிதைத் தொகுதியோன்றை 26-09-1999ல் வெளியிட்டார். 

இவ்வாறான சமூகம் சார்ந்த பணியில் பல உயிரச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தயங்காமல் தமது சமூகத்தின் குரலை ஓங்கி ஒலித்தார். இனப்பிரச்சனைக்குத்தீர்வு வழங்கும் போது நிலத்தொடர்பற்ற தென் கிழக்கு அலகு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். 

இவ்வாறு தான் செயற்படுவதாலும், தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாலும் தனக்கு சாதாரண மரணம் நிகழ வாய்ப்பில்லையென்பதை நன்குணர்ந்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே " போராளிகளே! போரப்படுங்கள்." என்ற கவிதையைப் பாடியிருந்தார். 

மரணம்! 
16-09-2000 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தனது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவிருந்த இறக்காமக் கூட்டத்திற்கு கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணமாகும் போது, அரணாயக்க மலைத்தொடரில் மோதி வெடித்துச்சிதறி அவர் மரணத்தைத் தழுவினார். 

அல்லாஹ் அன்னாருடைய பணியைப் பொருந்திக் கொள்வானாக! உயர்வான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை வழங்குவானாக! 

எனவே, மர்ஹும் அஷ்ரஃப் இவ்வாறான தியாகங்களாலும் அர்ப்பணிப்புகளாலுமே இன்றும் மக்கள் மனங்களில் திகழ்கிறார்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.