புதியவை

இறைஞ்சுகிறேன் இறைவனிடம் ! ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா )


 

தலைவைத்து மடிமீது
      நானுந்தன் முகம்பார்த்து
நிலைதளரும் வேளைதனில்
       நீயென்னை தலைதடவி
உளம்நிறைய ஆவலுடன்
        உணர்வுகொண்டு உருக்கமுடன்
இருக்கின்ற நிலைகாண
          ஏங்கிநான் இருக்கின்றேன் !

ஓடிநீ   விழுந்துவிட்டால்
      என்னுதிரம் கொட்டிவிடும்
உன்கண்ணில் நீர்வழிந்தால்
       என்னுள்ளம் பதறிவிடும்
வாடிவிடும் முகம்காணின்
       வந்துவிடும் பெருங்கவலை
வையகத்தில் என்னுயிரே
        வடிவழகே நீதானே    !

நடுச்சாமம் முழித்துவிட்டால்
      நடுக்கமுடன் எனையணைப்பாய்
படுக்கையிலே என்னருகே
      படுத்துவிட அடம்பிடிப்பாய்
பிடித்தபடி படுத்திடுவாய்
       பெருவிருப்போ டிருப்பாய்
உடுத்திருக்கும் உடுப்பையெல்லாம்
       உதறிநீ எறிந்திடுவாய் !

என்மார்பில் முகம்புதைத்து
      என்கழுத்தை இறுக்கிடவே
உன்கைகள் தனைக்கொண்டு
        உணர்வுடனே பற்றிடுவாய்
எப்போதும் அதைநினைத்து
         இன்றுமே பார்க்கின்றேன்
எனையிறுக அணைப்பதற்கு
         எவருமின்றித் தவிக்கின்றேன் !

இல்லத்தில் விட்டுவிட்டு
       ஏன்மகளே சென்றுவிட்டாய்
நல்லபடி உனைவளர்த்து
       நான்மகிழ்ந்து இருந்தேனே 
 
தொல்லையென நீநினைத்து
        என்னையிங்கு விட்டுவிட்டாய்
 நல்லபடி நீவாழ
          நானிறையை வேண்டுகிறேன் !

 உன்கையின் அணைப்பாலே
     உலகினையே மறந்தேனே 
 உன்பேச்சைக் கேட்டவுடன்
      உளம்நிறைவு பெற்றேனே 
உன்சிரிப்பு என்னாளும் 
     உயர்மருந்து ஆனதடி 
 என்தவிப்பை உன்மனது
    ஏனின்னும் உணரலையோ ! 

  எப்படிநீ இருந்தாலும்
      என்னிதயம் உன்வசமே
   தப்புநீ செய்தாலும்
        தாங்குவது என்னியல்பே 
   எப்பவுமே என்மகளே
        இடரின்றி நீயிருக்க 
   இறைவனிடம் என்னாளும்
        இறைஞ்சுகிறேன் என்னுயிரே ! 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.