புதியவை

”கர்பலா”(கவிதை) காப்பியக்கோ ஜின்னாஹ்கர்பலா
காரிருள் சூழ்ந்த
கறைகொண்ட வரலாறு. 
முஹர்ரம் பத்தாம்நாள்
முஸ்லிம்கள் வரலாற்றில்
மறக்கவொண்ணா மாசுடைநாள்.
பெருமானார் பேரர்.
பாத்திம்மா பெற்றமகன்.
கூரிய அம்புகொண்டு
கொன்றொழிக்கப் பட்டதெனும்
தீராப் பழிசுமந்த
சேதியினைத் தாங்கிடுநாள்.
முஆவியா பெற்றமகன்.
மன்னராட்சிப் பொறுப்பேற்ற
யஸீதொடே இபுனுஸியாத்
என்னும்மகா பாதகனும்
சேர்ந்தொன்றிச் செய்திட்ட,
கொடுமைக்குச் சான்றளிக்கும்
தீச்செயலின் கருவறைதான்
கர்பலா என்னுகின்ற
கறைகொண்ட நிலமாகும்.
அன்னை ஜைனப்.
ஆபிதீன் இருவரன்றி
அஹ்லுல் பைத்துக்கள்
அனைவரையுங் கொன்றொழித்த
பெரும்பாவச் செயல்புரியப்
பாத்தியதை யானபுவி.
கருணை நபியின்
கண்மணியாம் ஹ_ஸைன் மகனார்
குருதியுண்டு புனிதமுற்ற
கானவெளி யாகிடிலும்,
பாவப் பெருந்தீயின்
பாற்பட்ட களங்கமுமப்
பூமிக்குச் சொந்தமெனில்
பொய்யில்லை சத்தியமே.
“ஸிம்ர்” என்னுங் கொடும்பாவி
கருணையின்றி நபிபேரர்
கண்டத்தைக் குறிவைத்துக்
கணைதொடுத்தான்.
குருதிவெள்ளம்,
விண்ணோக்கி விண்டெழுந்து
வடிந்துடலைக் குளிப்பாட்டி
மண்ணுண்ட செயல்புரிய
வித்தானான் வழிகேடோன்.
சத்தியத்தைக் காக்கவெனத்
தயைகூர்ந்து வருகவெனத்
தாழ்ந்திரந்த கூபாவின்
தருக்கர்கள் பின் ஹ_ஸைனை
கைவிட்டார்.
பெருமானார் குலக்கொழுந்தைக்
கத்திமுனையில்
காவுகொள்ளக் காலானார்.
யுத்தத்தைத் தவிர்க்க
இரந்தார்கள் நபிபேரர்.
சித்தத்தில் அதைஏற்காச்
சண்டாளர் போர்தெடுத்தார்.
தாகத்தால் நாவரண்டு
தவித்திட்ட மழலையர்க்கும்
தண்ணீரொரு சொட்டேனுந்
தாரத காதகர்கள்
சென்னீர்மெய் சிந்தித்
துடித்தழுது உயிர்பிரியக்
கொன்றொழித்தார்.
கொலைக்கஞ்சார்.
கலிமாவை முன்மொழிந்தோர்
கூறிரண்டாய்ப் பிழவுண்டு
வலிந்து தொடுத்தழித்த
வரலாற்றுச் செயற்பாடு.
சுவர்க்கத்து இளைஞர்தம்
தலைவர்ஹ_ஸைன் தலைதன்னை
துண்டித்தார் சண்டாளர்.
தட்டமொன்று தலைதாங்க
ஸியாதின் அவைக்கதனைச்
சேர்ப்பித்தரர்.
அவ்வெறியன்
ஊசிமுனைகொண்டு
உத்தமனார் முத்தமிட்ட
அதரங்கள் தம்மில்
ஆக்கினைகள் செய்தவனாய்
எள்ளி நகையாடி
இன்புற்றான் இதயமிலான்.
எண்ணிடில் இந்நிகழ்வை
இதயங்கள் புண்ணாகி
கண்ணீரால் உடல்நனையும்
கவலையினால் உடல்சோரும்.
எழுபத்தோ ரிண்டேபேர்
எல்லையறு பெரும்படையை
வீரத்தோ டெதிர்த்து
வீரசொர்க்கம் கண்டார்கள்.
இன்னா லில்லாஹி
வயின்னாயிலைஹி ராஜிஊன்
ஜின்னாஹ்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.