புதியவை

என் முதல் கனவு: பாவலர் கருமலைத்தமிழாழன்என்னையொரு பொறியாளன் ஆக்கு தற்கே
-----என்தந்தை கனவுகண்டார் எடுத்து ரைத்தார்
என்னையொரு மருத்துவராய் ஆக்கு தற்கே
-----என்தாய்தாம் கனவுகண்டார் எடுத்து ரைத்தார் !
என்னையொரு வழக்கறிஞர் ஆக்கு தற்கே
-----என்னண்ணன் கனவுகண்டார் எடுத்து ரைத்தார்
என்கனவு என்னவென்று குடும்பத் துள்ளோர்
-----என்னிடத்தே கேட்பதற்கும் நினைக்க வில்லை !
சிறுவயதில் தாமாக வேண்டு மென்று
-----சிந்தனையில் உதித்ததொரு கனவோ அன்று
வெறுமையாகி நிறைவேறா கார ணத்தால்
-----வெளிப்படையாய்த் திணித்திட்டார் என்றன் மீதே!
அறுசுவைதான் என்றபோதும் விருப்ப மின்றேல்
-----அச்சுவையே நாவிற்கு நஞ்சாய் மாறும்
நறும்புகழும் செல்வந்தான் தருமென் றாலும்
-----நான்கண்ட கனவுக்கே ஈடாய் ஆமோ !
தமிழ்படிக்க வேண்டுமெனும் கனவைச் சாய்க்கத்
----- தாக்குதல்தாம் எல்லோரும் தொடுத்த போதும்
குமிழுடைதல் போல்மனந்தான் உடைந்தி டாமல்
-----குறிக்கோளில் உறுதியாக இருந்த தாலே
நிமிர்ந்தின்று நிற்கின்றேன் தமிழா சானாய்
-----நீளுலகம் போற்றுகின்ற கவிஞ னாக
அமிழ்தென்றே என்நூலைப் பருகு கின்றார்
-----அழியாத புகழோடே வாழ்வேன் என்றும் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.