புதியவை

அழகான வாழ்வு ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் ..அவுஸ்திரேலியா )
             கனவினிலும் பெரியோரைக் காணவேண்டும்
                  நினைவினிலும் பெரியோரை நிறுத்தவேண்டும்
             உணர்வெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்
                    உள்ளமதில் கள்ளமதை ஒழிக்கவேண்டும்
             தனிமையிலே இன்பமதைக் காணவேண்டும்
                      தறிகெட்டு ஓடுவதை நிறுத்தவேண்டும்
              புவிமீது உள்ளார்கள் இவற்றைச்செய்யின்
                     புனிதமுடை வாழ்வெமக்குக் கிடைக்குமன்றோ !

              சமையதைத்  துணையாக கொள்ளவேண்டும்
                      சன்மார்க்க வழியினிலே நடக்கவேண்டும்
              சினமென்னும்  நெருப்பதனை அணைக்கவேண்டும்
                        தீங்குசெய்யும்  மக்கள்தமை  ஒதுக்கவேண்டும்
               ஆண்டவனை தினமும்மனம் நாடவேண்டும்
                          ஆசையெனும் தீயினைநாம் அகற்றவேண்டும்
               வேண்டிடுவார்க் குதவிதனைச் செய்தல்வேண்டும்
                        விருப்புடனே யாவரையும் பார்த்தல்நன்றே !


              மற்றவரைக் குறைசொல்லல் தவிர்த்தல்வேண்டும்
                    வம்புபேசி நிற்பதையும் நிறுத்தல்வேண்டும்
             எப்பவுமே எதிர்வாதம் குறைத்தல்வேண்டும்
                    ஏளனமாய் நோக்குவதை விலக்கல்வேண்டும்
              தப்புச்செய்வார் மனந்திருந்த நடத்தல்வேண்டும்
                      தாராளம் எம்மனத்தில் இருத்தல்வேண்டும்
              முப்பொழுதும் முகமலர்ச்சி கொள்ளல்வேண்டும்
                       முழுமையுடன் வாழ்வதற்கு முயல்தல்நன்றே ! 

               மூத்தோரின் வார்த்தையினை மதித்தல்வேண்டும் 
                         மூர்க்கருடன் பழகுவதைத் தவிர்த்தல்வேண்டும்
                சாத்தானாய்  வருவோரை ஒதுக்கல்வேண்டும்
                        சாந்தியினை மனமெங்கும் நிறைத்தல்வேண்டும் 
                வார்த்தையினை அளந்தளந்து பேசல்வேண்டும் 
                          வருவாயை மனமிருத்தி வாழ்தல்வேண்டும் 
                ஆர்ப்பரிக்கும் குணமதனை அகற்றிநின்றால்
                           அழகான வாழ்வெமக்கு அமையுமன்றோ !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.