புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு டிசம்பர்மாதம் 2017 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். கட்டார்.


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி டிசம்பர்மாதம் 2017
போட்டி -96 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-02
தலைப்பு-"பெண்ணுக்குரிமை.
பெண்ணே ! உன்னை அறிந்திடுவோம் !
பெண்ணை பெருமை படுத்திடுவோம் !
படைப்பில் உலகமதில் ஆண்-பெண் இருபாலருக்கும்
படைத்தவன் சமமாக உரிமைகளை வழங்கியுள்ளான்.
பெண்கள் தாய்மை அடைந்திட சிறப்புச்செய்தான்
பெண்கள் ஆண்களுக்கு ஆடையாக ஆக்கியுள்ளான்.
உண்பதில் திண்பதில் பெண்ணுக்கு சமஉரிமையும்
உறங்குவதில் உடுத்துவதில் பெண்ணுக்கு சமஉரிமையும்;
சம்பாதிப்பதில் கல்விகற்பதில் அவளுக்கு சமஉரிமையும்
சம்சாரமாய் சேர்ந்துவாழ உரிமையும் தந்துள்ளான்.
தங்கமணிய பெண்ணக்கு ஆகும் என்றாக்கினான்
தங்கம் ஆணுக்கோ ஹராமாக ஆக்கிவிட்டான்.
பளபளக்கும் பட்டாடை பெண்களுடுத்த ஹலாலாகும்
பாரெல்லாம் வலம்வரும் ஆணுக்கது ஹராமாகும்.
விருப்பமான கணவரை தெறிவுசெய்ய பெண்ணுக்குரிமை
விவாகம் நடைபெற்று வாழ்ந்திடும் காலங்களில்;
பிணக்குகள் ஏற்படவே பிடிக்காத அக்கணவனிடம்
பிரிந்துவாழ விவாகரத்து குலாபெற பெண்ணுக்குரிமை.
திருமணம் நிகழ்ந்திட மணமகள் மணமகனிடம்
திருமணக்கொடை கட்டாயம் பெற்றிட அவளுக்குரிமை.
குடும்பம் குழந்தைக்காக பொருளாதாரம் திரட்டுவது
குடும்பத்தின் தலைவனான ஆணுக்கது கடமையாகும்.
ஆண்தான் சம்பாதித்து பெண்ணுக்கு கொடுக்கனும்
ஆனால் பெண்ணானவளோ குடும்பத்தை காக்கனும்.
இறுதிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்குடையது
இப்படியொரு பெரும்கடமை பெண்களுக்கு கிடையாது.
இறைநம்பிக்கை கொண்டுள்ள பெண்கள் சிறந்தவராவர்
இறைவன் பெண்மணிகள் இருவரை சுட்டிக்காட்டுகிறான்.
இறைமறை குர்ஆனில் முஃமீன்னுக்கு முன்மாதிரியானவர்
இவர்கள்தான் ஆஸியா-மர்யம் என்றயிரு அம்மையார்கள்.
பாலைமணலில் குழந்தை தாகமெடுத்து தவிதவிக்க
பக்காவெனும் மக்காவில் ஸபா-மர்வா குன்றுக்கிடையே;
அன்னைஹாஜரா தண்ணீர் எடுக்க அலைந்தோடியதை
அல்லாஹ் ஹஜ்-உம்ராவில் ஓடிட கட்டளையாக்கினான்.
உலகமுஸ்லிம் அனைவரும் ஒன்றுகூடும் மக்காநகரில்
உன்னதமான ஹாஜரா அம்மையார் செய்தவற்றை;
நினைவுகூறும் விதமாக பெண்களை சிறப்பாக்கினான்
நீங்காத பெரும்புகழை பெண்ணினம் பெறச்செய்தான்.
பெண்ணே உன்னருமை பெருமைகள் அதிகமாகும்
பெண்களே குடும்பத்தின் ஔிவிளக்கு வெளிச்சமாகும்.
கணவன் குழந்தைகள் காப்பதுமக்கு கடமையாகும்
காலமெல்லாம் நெறியோடு வாழ்வதிங்கு சிறப்பாகும்.
--- கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். கட்டார்.
.===========================================================================.........
  
ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சப்னா செய்னுல் ஆப்தீன் 
இறக்குவானை


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி
டிசம்பர்மாதம் 2017
போட்டி -96 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-09
தலைப்பு-நன்றிக்கடன்
நிலாக்கள் உறங்கும் பகலிது..
கிளைகளின் பரப்பில் ஒளிந்த இலைகள் ரகசியமாக எதையோ பேசிக் கொண்டிருக்கிறது...
எதை பற்றி இவ்வளவு சத்தமாக பேசுகிறது அந்தத் தென்றல்... விஷத்தை கக்கும் பாம்புகளின் சூழ்ச்சியை முறியடிக்கும் திட்டமோ??
இருக்கும்...
இல்லை
இருக்கவே இருக்காது!!!
சொட்டிடும் மழைத்துளிகளை குடிக்க அவை தயாரில்லை... பின்னெதற்கு இலைகள் விரிந்து தொங்குகிறது..
உறங்க வேண்டிய நேரத்தில் எதற்கிந்த முகமூடிப் போராட்டம்...
ஒளித்தொகுப்பை நடத்த
இது பொருத்தமான நேரமல்லவே
வீணாயெதற்கிந்த இமை மூடா திரைகள்....
தாழிட்டு விடுங்கள் உங்கள் பச்சையவுருமணிகளை
இது கட்டவிழ்க்கும் நேரமல்ல
அமைதியாய் சுவாசியுங்கள்
அதன் ஈரம் உங்கள் நரம்புகளை நனைக்கட்டும்....
காழ்கலன்கள் உயிர்பெறட்டும்
உரியத்தின் பிணைப்புக்கள் இணையட்டும்.....
வேர்கள் இரத்தத்தை குடிக்கட்டும்
அது பசிதீர்க்கட்டும் !!
சப்னா செய்னுல் ஆப்தீன்
இறக்குவானை
==============================================================================

மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்புதுவைப்பிரபா-புதுச்சேரி – 605 008.உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி
டிசம்பர்மாதம் 2017
போட்டி -96 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-24
தலைப்பு -வாழ்க்கை வீதியில்


அழகானது உன் பிறப்பு
அதை நீயே ஏன்
அலங்கோலப்படுத்திக்கொள்கிறாய் ?
எதற்காக வாழ்கிறாய் என்று
தெரியாமலே வாழாதே!
இலக்கோடு வாழ்ந்து
உன் பிறப்பை அர்த்தமுள்ளதாக்குஎந்தச் சாதிக்குப் பிறந்தாய்
என்பதை விடு
“என்ன சாதிக்கப் பிறந்தாய் ?”
என்று சிந்தி
உன் குறிக்கோள்களை நோக்கி
காரியமாற்று
எடுத்த காரியத்தில்
இடையூறுகள் வருவது இயல்புதான்
துவண்டு விழாதே.
நீ துவளும்போதெல்லாம்
துக்கம்
உன் தோளில் ஏறி அமர்ந்துகொள்ளும்
நிமிர்ந்து நின்று பார்
அதே துக்கம்
உன் காலில் விழுந்துக் கதறும்
தோல்விகளைக் கண்டு அஞ்சாதே
தெருநாய்கள் போலத்தான் அவை
நீ ஓடினால் அது துரத்தும்
நீ துரத்து -
அது ஓடும்
தோல்விகள் உன்னிடம் தோற்கும் வரை
முயற்சி செய்துகொண்டே இரு.
மூச்சிருக்கும் வரை
முயற்சியும் இருக்கட்டும்
அஞ்சி அஞ்சி வாழ்தல்
அவமானம் என்று நினை
மிச்சம் வைக்காமல் அச்சம் போக்கு
பிறகு பார் –
மாறும் உன் வாழ்க்கைப் போக்கு
ஆறில்லா ஊருக்கு
அழகு பாழ்
தன்னம்பிக்கை இல்லா எவருக்கும்
வாழ்வு பாழ்
தன்னம்பிக்கையோடு பயணி...
வெகுவிரைவில் நீயும் வரலாம்
வாழ்க்கை வீதியில்
வெற்றி பவனி
புதுவைப்பிரபா-புதுச்சேரி – 605 008.
=========================================================================

ம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்"முஹம்மது அஸ்லம் சம்மாந்துறை


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி
டிசம்பர்மாதம் 2017
போட்டி -96 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-05
தலைப்பு-"கூலி வயக்காரன் எம்புருசன்
ஆக்க அரிசிமில்ல
அடுத்த ஊட்டுல கேக்க மனசுமில்ல
புரிசனுக்கு வேற ஒழப்புமில்ல
புரிஞ்சவங்க தாற உதவியுமில்ல
கொத்தின போடியார்ர வயலில
நெல்லு மணி
முத்திவரும் வரைக்கும்
எங்கள இந்த முசுவத்து
சுத்திச் சுத்தி வருங்காபுள்ள
குறுணல் அரிசெடுத்து
அரிச்சி உலையில போட்டு
கறிக்கி வழியென்னவென
கறுத்திருந்த வானத்த
கவலையோடு பாக்ககொள்ள
சிறுத்த புலி மாதிரி
சிரித்துப் பாக்குதுகா
சின்ன முருங்க இலை
கண்ணில பட்டதுகா
கறிக்கி வழி கெடச்சதுகா
பொட்டியான் கருவாடு போட்டு
தீச்சிக் கறியாக்கி
பொட்டலம் கட்டியெடுத்து
நடயக் கட்டினங்கா
வளத்தாப்புட்டி வயலுக்குள்ள
கூலி வயல்
செய்யும் மச்சான் - வயிற்றுத்
தோல் சுருங்கிப் பசியால
வாடி வதங்கி
ஆற்றோரப் பச்சமர நிழலில்
ஆற அமரப் படுத்திருக்
பரிமாறப் போனங்கா
பட்டணிப் பசி தீர
அந்த மனுசன்
என்ன செய்வான்
நொந்து நூலாகி
வெயிலில் வெந்து ஒழைக்கிறாருகா
வயலில வந்து பாத்தாதான் வெளங்கும்கா
மீன் வல போல
அவர்ர பெனியன்
ஓட்டையும் ஒழுக்குமாக்கெடக்கு
ஒழுங்கா ஒரு உடுப்பில்லகா
ஒரு நாளும் அவரு
கவலப்பட்டது இல்லகா
ஓடாத் தேஞ்சி ஒழச்சாலும்
பஞ்சாப் பறந்து ஒழச்சாலும்
கடன்தனிசிக்கி மட்டும்
பஞ்சமில்லகா என் ஓலக் குடிசையில
எந் நெஞ்சமெல்லாம்
அந்தப் பாரந்தாங்கா நெறஞ்சிருக்கி
முஹம்மது அஸ்லம் சம்மாந்துறை


விதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளை விடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்சிக்காகவும் 
கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும் செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை 

எமது நிபந்தனைகளை மீறிய 11கவிதைகளை 
நாம் போட்டியில் இணைத்துக்கொள்ள முடியாமைக்கு  வருந்துகின்றோம்

'கவினுறு கலைகள் வளர்ப்போம்'

நன்றி
அன்புடன்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.