புதியவை

மலருமா வசந்தம்தொடர் நாவல் எழுதுபவர் மீரா , ஜெர்மனி -அத்தியாயம் 3“இதே நபர் தான் இன்று காலை அந்த சிவப்பு ஆடம்பர சொகுசு காரில் தன்னை மிகவும் அலட்ச்சியமாகப் பார்த்து விட்டு போனவன். இவன் எப்படி இங்கு? அப்படி என்றால் இவன் தான் இளைய முகாமையாளரா ? இவனுக்குக் கீழா நான் வேலை செய்ய வேண்டும்” ! அவளது முகத்தில் கோபம் கொந்தளித்தது .
அதைப் பொருட்படுத்தாத அந்த ரிக்கும் இவளை நோக்கி “யார் நீ? இங்கு என்ன செய்கிறாய் ? யார் உன்னை உள்ளே விட்டது ?” என்று கோபத்துடன் கேள்வி மேல் கேள்வி கேட்டு முறைத்தான் அவன் . ஒரு கணம் சமாளித்த ஆர்த்திக்கா „ திரு ரிக் அவர்களே, இன்று தான் நான் கத்ரினிடம் உதவியாக வேலைக்கு சேர்ந்துள்ளேன் . எனது நியமனக் கடிதம் அவளிடம் இருக்கிறது. வேண்டுமென்றால் அவளை அழைத்துக் கேளுங்கள். கத்ரினின் கட்டளையின் பேரில் தான் நான் உங்களுக்கு கோப்பி கொண்டு வந்துள்ளேன் . இதை இங்கே வைக்கவா? என்று தரையை நோக்கியவாறு கேட்டாள் .
அவனும் அவளை ஒரு கணம் உற்று நோக்கி விட்டு “சரி சரி , வைத்து விட்டு எனது வேலைக்கு இடையூறு செய்யாமல் விரைந்து போகலாம்” என்று அலட்ச்சியமாக கூறி விட்டுத் திரும்ப தனது வேலையை தொடர்ந்தான் . ஆர்த்திக்கா கொண்டு வந்த தட்டை மேசையில் வைக்கும் பொழுது அங்கே அவனது பெயர் பலகை இருப்பதை கண்ணுற்றாள். அதில் ரிதேஷ் என்று பொறிக்கப்பட்டிருந்தது . திரும்பி கதவருகில் சென்ற பொழுது " கோப்பியை யார் கலப்பது ? நானா ? எனும் அதட்டும் குரல் கேட்டது.
ஆர்த்திக்கா திரும்பி வந்து கோப்பியை கலக்க முற்படுகையில் ரிதேஷ் ஆகிய ரிக் " என்ன உனக்கு கோப்பியை சரியான முறையில் கலக்க தெரியுமா ? நீ எல்லாம் எங்கோ இலங்கையின் கிராம புறங்களிலிருந்து வந்தவர்கள் தானே . உங்களுக்கெல்லாம் நாகரீகம் எங்கே தெரியப்போகிறது " என்று தேவை இல்லாமல் அவமதித்தான்.
ஆர்த்திக்காவுக்கு வந்த கோபத்தில் முகம் கடும் சிவப்பு நிறமாகச் சிவந்தது . ஆனாலும் ஒரு பதிலும் கூறாது விறுவிறு என்று கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தாள் . தனது இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . இவன் யார் என்று தன்னை எண்ணுகிறான் ? இவனை பார்த்தாலும் எமது ஊரவன் போலத்தான் தெரிகிறது . அப்படி இருக்கையில் தான் பணக்கார வர்க்கத்தை சேர்ந்த ஒரே காரணத்தால் என்னை எப்படி இப்படி அவமதிக்க முடியும் ? இந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு உடனே சென்று விடலாமா என்று கூட ஒரு கணம் யோசித்தாள் . ஆனால் மறு கணமே தன் அம்மாவையும் தம்பியையும் எண்ணி தன் கோபத்தை சிறிது அடக்கினாள் ஆர்த்திக்கா .
அந்த நேரம் பார்த்து ஆர்த்திக்காவின் தொலைபேசி மணி அழைத்தது . மெதுவாக எடுத்து காதில் வைக்கும் முன்னரே மறுமுனையில் ரிதேஷ் „குடித்து முடித்த கப்களை அகற்றும் எண்ணம் கூட இல்லையா, நான் தான் அதைச் செய்ய வேண்டுமோ ?” என்று கர்ஜிப்பது காதில் கேட்டது . ஆர்த்திக்கா மிகுந்த படபடப்புடன் மீண்டும் சென்று தட்டை எடுக்கையில் போதாகுறைக்கு கை தவறி மீதியாக இருந்த பால் அங்கே இருந்த ஒரு கடிதத்தில் கொட்டி விட்டது . ரிதேஷ் கண்கள் சிவக்க கதிரையை விட்டு ஆவேசமாக எழும்பியே விட்டான் .
அளவுக்குக்கு மீறிய ஆத்திரத்துடன் உனக்கு அறிவில்லையா ? பழக்க வழக்கம் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் வேலை செய்ய பெரிய நிறுவனங்களாகத் தேடி வருகிறீர்கள் ? அங்கே உங்கள் ஊர்களிலேயே இருந்திருக்கலாம் தானே . வெளிநாடுகளில் பணம் சேர்க்கலாம் என்று ஆசையில் வந்திறங்கி பெரிய நிறுவனங்களாக வேலையில் சேர்வது . பின்னர் எமது உயிர்களை வாங்குவது . பணம் சம்பாதிக்கும் முன்னர் அதற்குரிய தகுதிகளை பெறவேண்டும்“ என்று ஒரேயடியாக கத்தினான் . ஆர்த்திக்காவுக்கு அழுகையே வந்து விட்டது .
„ஐ அம் வெறி சொறி , என்னை மன்னித்து விடுங்கள் , தவறுதலாக நடந்து விட்டது , இதோ இதை உடனே அகற்றி விடுகிறேன்” என்று உடனே அந்த மேசையை விரைவாக சுத்தம் செய்து விட்டு திரும்பியும் பார்க்காது அவசர அவசரமாக வெளியேறினாள் .
அதற்குள் ரிதேஷ் “இந்தா பெண்ணே இந்த கடிதத்தை திரும்பப் பிழை எதுவும் விடாமல் தட்டச்சு செய்து விட்டு அதை உடனே எமது தபால் பகுதியில் இன்றே சேர்த்து விடு . இது ஒரு முக்கிய கடிதம் . உனது கவனக்குறைவால் அதை வீண் அடித்து விட்டாய் . வாடிக்கையாளரிடம் இக்கடிதம் இன்றே தபாலில் அனுப்பப்படவேண்டும் . என்ன நன்றாக புரிந்ததா” என்று பலத்த குரலில் வினவினான் .
தலையை ஆட்டி ஆமோதித்து விட்டுத் திரும்பி வந்து தனது கதிரையில் அமர்ந்து விரைவாக அதைத் தட்டச்சு செய்ய முனைந்தாள் . அவசர அவசரமாக செய்து முடித்து விட்டு அக்கடிதத்தை எடுத்துக்கொண்டு அந்த நிறுவனத்தின் தபால் பகுதியைத் தேடிச் சென்றாள் ஆர்த்திக்கா . ஆனால் அவளுக்கு அந்த நிறுவனத்தின் தபால் பிரிவை இலகுவாக கண்டு பிடிக்க முடியவில்லை . பலரிடம் கேட்டு கடைசியாக ஒருவாறு கண்டு பிடித்து சென்ற பொழுது அவளது துரதிஷ்டவசமாக அவர்களோ அன்றைய கட்டு எடுத்து விட்டதாகவும் இனி நாளை தான் அந்த கடிதத்தை அனுப்பலாம் என்று முடிவாக கூறி விட்டார்கள் .
ஆர்த்திக்காவுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை . இன்றே இந்த கடிதத்தை தபாலில் சேர்க்கவேண்டும் என்று அந்த ரிதேஷ் முடிவாகச் சொல்லி விட்டான் . இப்பொழுது போய் அவனிடம் இன்று சேர்க்க முடியவில்லை, நாளை தான் என்று கூறினால், அவளை முதல் நாளே வீட்டை அனுப்பி விடுவான் . என்ன காரணமோ அவளை அவனுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை , இப்பொழுது என்ன செய்வது என்று ஆர்த்திக்கா குழம்பிய வேளையில் காலையில் தான் வந்திறங்கிய பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் ஒரு தபால் நிலயம் ஒன்றை கண்டதாக அவளது மூளையில் ஒரு பொறி தட்டியது .
சற்றும் தாமதிக்காமல் உடனே அவள் வெளியே அந்த தப்பால் நிலையத்தை நோக்கி விரைந்து சென்றாள் . அங்கு அத்தபால் நிலையத்தில் அக்கடிதத்தை அன்றைய பொதியில் சேர்த்த பின்னர் தான் அவளுக்கு மீண்டும் மூச்சு விடத் தோன்றியது . தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்தி விட்டு மீண்டும் நிறுவனத்துக்குள் உள்ளிடுகையில் ரிதேஷும் கத்ரினும் எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்கள் .
இவளைக் கண்டதும் ரிதேஷ் முறைப்புடன் அருகே வந்து „நான் உனக்கு வெளியே ஊர் சுற்றி விட்டு வருவதற்காக வேலைக்கு அமர்த்தவில்லை . வேலை நேரம் முடியும் வரை இந்த நிறுவனத்துள் மட்டும் இருக்க வேண்டும் . வந்த முதல் நாளே எவற்றையும் பொருட்படுத்தாது வெளியே கிளம்பி விட்டாய் . உனக்கு திமிர் அதிகம் தான்” என்று மீண்டும் அவளை அவமதித்தான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கத்ரினின் முகத்தில் மகிழ்ச்சி நிழலாடியது .
பின்னர் இருவரும் ஒன்றாக வெளியே கிளம்பிச் சென்று விட்டார்கள் . ஆர்த்திக்காவுக்கு கவலையும் ஏமாற்றமும் சேர்ந்து அவள் மனதைச் சோர்வடைய வைத்தது . கண்கள் கலங்க மெல்ல வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் . “ஏன் எனக்கு இப்படி? தன் துயர் குறைய இங்கே வந்தால் இங்கேயும் தொடர்கிறதே. இந்த ரிதேஷுக்கு ஏன் என்னில் இவ்வளவு அலட்ச்சியம் ? நான் ஒரு தவறும் இழைக்கவில்லையே ? அப்படி இருக்க ஏன் என்னிடம் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறான் . அப்பா அம்மா கூட என்னைப் பொதுவாகக் கடிந்து கொள்ளமாட்டார்கள் . அப்படி இருக்கையில் இவன் ... அம்மா அருகில் இருந்தாள் என்றாலும் ஆறுதலாக இருக்கும் . அம்மாவும் எத்தனை தொலை தூரத்தில் இருக்கிறா . யாரிடம் சென்று நான் ஆறுதல் பெற முடியும் இங்கு ? என்று அவள் தன் தாயை எண்ணி ஏங்கினாள் .
தொடரும்
மீரா , ஜெர்மனி
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.