புதியவை

மலருமா வசந்தம் நாவல் எழுதுபவர் ஜெர்மன் மீரா
ஆர்த்திக்கா கையில் கோப்பியுடன் மெல்ல நடந்து வந்து ஜன்னல் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள். கண்கள் தன்னிச்சையாகவே வெளியே நோக்கியது. இருள் இன்னும் அகலாமல் கார்மேகம் எங்கும் சூழ்திருந்தது . அவள் உடனே சுவரில் தொங்கிய கடிகாரத்தை நோக்கினாள். மணி 06.55.
„ அடடா அதிகாலை 07.00 மணி ஆகப்போகிறது . இன்னும் விடிஞ்ச மாதிரி இல்லை . சூரிய பகவானுக்கும் கார்த்திகை மாதத்திற்கு உரித்தான பனிக்கும் கடும் போர் நடுக்குது போல. சூரிய பகவான் மிகவும் கஷ்டப்பட்டே வெளியே வர வேண்டும் போல . இந்த ஐரோப்பிய நாட்டில் சூரியதேவனை தரிசிப்பதற்கு நாம் கடும் தவம் தான் இருக்க வேண்டும் .
இதே எமது ஊரிலே காலை 07.00 மணி என்றால் எப்பொழுதோ விடிந்து எல்லோரும் தமது கடமைகளை மிக சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பார்கள்“ .
ஆர்த்திக்கா தனக்குள்ளே புறுபுறுத்துக் கொண்டாள். அவளது எண்ணமும் தன்னியல்பாகவே தனது உயிர்த்தோழி ரம்யாவை நினைத்தது . ரம்யாவும் ஆர்த்திகாவும் காலை 07.00 மணியளவில் தான் தத்தமது துவிசக்கரவண்டிகளைத் தள்ளிக் கொண்டு அன்றைய பாடங்களையும் தமது தோழிகளைப் பற்றியும் சில நேரங்களில் ஊர் வம்புகளையும் பேசிக்கொண்டு பாடசாலை நோக்கி நடந்து போய்க்கொண்டு இருப்பார்கள் .
அதிலும் சில சந்திகளில் இவர்கள் வரவை எதிர்ப்பார்த்து நிற்கும் மன்மதர்களை கண்டாலோ இவர்கள் பாடசாலை சென்று அடையும் வரை தமக்குள்ளேயே கிளுகிளுத்துக்கொண்டே வருவார்கள் . எவ்வளவு இனிமையான காலம் அது .
ஆனால் இன்று…... ஆர்த்திக்கா ஒரு பெருமூச்சு ஒன்றை விடுத்தாள் . அவளை அறியாமலே அவளது கண்கள் பனித்திருந்தன. ரம்யா, ஓ! என் இனிய நண்பியே . நீ இல்லாது இங்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன் ....... நாம் என்றும் இணைபிரியாது இணைந்திருப்போம் என்று முடிவெடுத்த தீர்மானம் இன்றோ எல்லாம் தவிடு பொடியாகிப் போயிருந்தது .
ஆர்த்திகாவுக்கு எங்கோ தொலைவில் சுப்ரபாதம் ஒலிப்பது கேட்டது .
http://www.youtube.com/watch?v=LkzNn7AMkdg
அவள் தன் நினைவில் இருந்து மெல்ல மீண்டு வந்தாள் . " ஷோபி அக்கா எழும்பி விட்டா . அக்கா எழும்பியவுடன் சுப்ரபாதம் கேட்பது வழக்கம் . எத்தனையோ மைல்கள் தாண்டி வந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதை தன் மகள் சுருதிக்கும் கற்றுத் தருவதில் மிகவும் வல்லவர்.
ஆர்த்திகா தன்னை சுதாகரித்துக்கொண்டாள் . தான் கலங்கி நிற்பதை அக்கா கவனித்தால் மிகவும் கவலைப்படுவா . அக்கா தனக்கு செய்து வரும் உதவிகள் தான் எத்தனையோ எத்தனை . ஆர்த்திக்கா அம்மாவுடனும் தம்பியுடனும் நிர்க்கதியாக நிற்கையில் உதவிக் கரம் நீட்டிய ஒன்றை விட்ட அக்கா உறவான ஷோபி அக்காவும் அவர் கணவர் ரகு அண்ணாவும் சிறு தயக்கமும் இன்றி அவளை இங்கிலாந்து நாட்டிற்க்கு உடனே சுற்றுலா விசாவில் வரவழைத்தார்கள் .
இங்கே வந்தவுடன் தமக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் அதை பொருட்படுத்தாது அகதி ஸ்தானத்துக்கு விண்ணப்பிக்க வைத்து தமது இல்லத்திலேயே அடைக்கலம் கொடுத்து வசிக்கவும் வசதி செய்து தந்தார்கள் . அவர்களின் பெரும் மனது யாருக்கு வரும் ! எவ்வளவு நல்லவர்கள் . ஆர்த்திகாவின் ஊரான கிளிநொச்சியில் நடைபெற்ற கொடுமைகளைக் கண்ட பின்னர் மனித நேயம் செத்துவிட்டதாக எண்ணி இருந்த ஆர்த்திகாவிற்கு இவர்களது அன்பு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும் . அக்காவின் தயவில் தான் இன்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் . ஆர்த்திக்காவின் நெஞ்சில் நன்றி உணர்வு மேலோங்கியது .
“ என்ன ஆர்த்திக்கா , இன்னும் வெளிக்கிடவில்லையா ? இன்று வேலையின் முதல் நாள், நேரம் பிந்தாமல் போய் வெளிக்கிடுங்கோ “, கீழே வந்த அக்கா அவளை அவசரப்படுத்தினார். “இல்லை அக்கா , நான்..... வந்து.. வழக்கம் போல சுருதியை எழுப்பி விடுகிறன், அவவ எழுப்பிறது என்றால் சரியான கஷ்டம் . உங்களுக்கு தெரியும் தானே” ஆர்த்திக்கா கிளம்பினாள் .
“ஆர்த்திக்கா , அதை நான் பார்ப்பன் . நீ வேலைக்கு சேர்ந்திருக்கிறது ஒரு பெரிய நிறுவனம் . அதுவும் இது ஒரு தற்காலிகமான வேலை. அவர்களை இம்ப்ரெஸ் செய்வது உன்னோட கையில தான் இருக்கு . நான் அத்தானை எழுப்பி விடுறன்.
அவர் இன்றைக்கு உன்னை காரில கொண்டு போகட்டும் . நாளையிலுருந்து பஸ்ஸில போகலாம் என” அக்கா முடிக்கும் முன்னர் இடை மறித்த ஆர்த்திகா, “ஐய்யோ அக்கா வேண்டாம் . அத்தானுக்கு இன்றைக்கு விடுமுறை நாள். அவரைப் படுக்க விடுங்கோ . நான் பஸ்ஸிலையே போய்க்கொள்ளுவேன் . இதோ போய் வெளிக்கிடுகிறேன்”
ஆர்த்திகா விரைவாகச் சென்று உடை உடுத்தி அக்காவிடமும் விடைபெற்று பஸ் தரிப்பிடம் நோக்கி நடந்தாள்.
குளிர் சுல்லென்று அவளைத் தாக்கியது . வெதுவெதுப்பாக இருக்கும் என எண்ணி ஒரு நல்ல ஜாக்கெட் அணிந்திருந்தாலும் அவளால் அந்த குளிரைத் தாங்க முடியவில்லை . கழுத்தை சுற்றி இருந்த ஷாலை குளிர் படாது இழுத்து மூடிக்கொண்டாள் .
பஸ் தரிப்பிடத்தில் பலர் நின்றுக்கொண்டிருந்தனர் . அவளது பஸ் இலக்கம் வர இன்னும் 1௦ நிமிடங்கள் இருந்தன . சாலையிலும் ஒரே வாகன நெரிசலாக இருந்தது . காலை நேரத்திற்கே உரிய வாகன நெரிசல் . ஆர்த்திக்காவுக்கு வாகனங்களில் பயணம் செய்வோரை பார்க்க ஒரே பொறாமையாக இருந்தது . வசதி படைத்தவர்கள் போகிறார்கள் . நாம் தான் இந்த குளிரில் நடுநடுங்க பஸ்ஸுக்கு காத்து நிற்க வேண்டும். அவள் ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டாள் .
அந்த நேரம் போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் மிக மெதுவாகவே நகர வேண்டி இருந்தது . அப்பொழுது அவளைத் தாண்டி ஒரு அழகான சொகுசு காரான போர்ஷ வாகனம் ஒன்று கடந்து சென்றது . ஆஹா, எத்தனை அழகான வாகனம் இது . அதன் வடிவமைப்பும் ஒரு சிறிய விமானம் போன்று காணப்பட்டது . அதி விரைவாகப் பயணம் செய்யக்கூடிய வாகனம் என்று ஆர்த்திக்கா கேள்விப்பட்டிருகிறாள் . அதன் நிறமும் அவ் வாகனத்துக்கு பொருத்தமான சிவப்பு நிறம் . ஆர்த்திக்கா அந்த அழகிய காரை ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் அதனை ஓட்டிச் சென்ற நபர் தன்னை மிக ஏளனத்துடனும் நோக்குவதைக் கண்டு ஒருகணம் திகைத்துப்போனாள். அவனது பார்வையில் தன்னைத் துச்சமாக நோக்குவது தெரிந்தது .
தொடரும் .............
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.