புதியவை

தேசத்தின் எதிரியா ?அல்லது சுதந்திர தேசத்தைப் பற்றி தெரியாதவனா ?வித்யாசாகர்
தேசத்தின் எதிரியா ?அல்லது சுதந்திர தேசத்தைப் பற்றி தெரியாதவனா ? அல்லது என் போராளிகள் பலர் உயிர்விட்டு மீட்ட விடுதலையை மதிக்காதவனா? அல்லது இச்சமயத்தில் எமது இராணுவ வீரர்களை நன்றியோடு நினைவில் கொள்ளாதவனா ?
பிறகேன் தற்போதெல்லாம் குடியரசு நாளோ அல்லது சுதந்திர தினமோ வந்தால் ஒரு கொண்டாட்டத்தை, இந்த தேசத்திற்கான மகிழ்வை எனைப்போன்ற எண்ணற்றோருக்கு  தருவதில்லையே ஏன்?
காரணம் இந்த எனது அருமை தேசத்தில் தான் எம் மீனவருக்கு ஆண்டாண்டு காலமாய் நீதி என்றவொன்று கிடைப்பதேயில்லை..
இந்த எனதருமை தேசத்தில் தான் என் தமிழ்மொழியும் பொதுவில் மதிக்கப்படுவதில்லை, எம் தமிழர் குறித்த வெற்றிகளும் கொண்டாடப் படுவதில்லை.. 
இந்த எனதருமை தேசத்தில் தான் எங்களது விவசாயிகளின் ஓலம் கூட அரசுக்கு எட்டவில்லை, அவர்கள் நிரவாணமாய் நின்றப்பின்னும் ஏனென்று எவனும் கேட்டிடவில்லை..
இந்த எனதருமை தேசத்தில் தான் பணக்காரர்களின் கோடானகோடி கடன்களை ரத்து செய்யும் வங்கிகள் சாமானியனின் ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்க்கும் வட்டிகளைக் குட்டிபோட்டு குட்டிபோட்டு கூட்டிவிட்டு கடைசியில் வீட்டையே ஜப்தி செய்கிறது..
இந்த எனதருமை தேசத்தில் தான் பத்தாண்டு காலமாக மத்திய அரசு நதிநீரை வழங்கச்சொல்லியும் மாநில அரசுகள் செவிடாகவே வளைய வருகிறது..
இந்த எனதருமை 120 கோடி மக்களுள்ள தேசத்தில் தான் ஜி.எஸ்.டி எனும் பெயரில் 28% சதவீதத்திற்கு எளியோரின் உழைப்பை வரிப்பணமாய் அரசால் வாங்கிடமுடிகிறது..
இந்த என் தேசத்தில்தான் எமது முதலமைச்சரையே இரண்டு மாதத்திற்கு கூட மிக ரகசியமாக மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு கடைசியில் இறந்துவிட்டதாக எளிதாக அறிவித்துவிட்டு கடந்திட முடிகிறது..
இந்த என் தேசத்தில்தான் ஓட்டு போட்டுவிட்டோம் என்பதால் அடுத்த ஐந்து வருடத்திற்கு வரை எமது முதலமைச்சர் நாற்காலியில் யார் அவர்கள் விரும்புகிறார்களோ சென்று அமர்ந்திடவும் முடிகிறது, அதிரடியாக பேருந்துக் கட்டணத்தை அடுக்கடுக்காய்   கூட்டிடவும் முடிகிறது..
இந்த என் தேசத்தில் தான் நித்தியா போன்ற போலிகளின் ஆபாச படத்தை மதத்தின் சாயம் பூசி வெட்டவெளியில் போட்டிடவும், வாய்க்கு வந்ததை ஆளுங்கட்சி என்பதால் எப்படிவேண்டுமோ அப்படியெல்லாம எவர் வேண்டுமோ பேசிடவும், பதஞ்சலி பச்சையெலி வெள்ளையெலி என்றெல்லாம் பெயர்சொல்லி யோகிகள் வியாபாரம் பெருக்கி ஒரு மெகா சீரியலையும் எடுத்திடவும் முடிகிறது அதற்கெல்லாம் அரசால் துணை நிற்கவும் முடிகிறது..
உண்மையிலேயே என்னால் இதற்குமேல் எழுதமுடியலில்லை, எம் தேசத்து நிலையை நினைத்தால் அழை வருகிறது. பயம் வருகிறது. எமது இளைஞர்கள் ஒட்டுமொத்தமாய் எழுந்துநின்றால் இவைகளை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாய் மாற்றிடமுடியும். அதற்குபிறகு இந்த நாட்களெல்லாம் மிகையாய் நமக்கு இனிக்கலாம் போல்..
என்றாலும் இந்நாளும் எந்நாளும் எம் மண்ணிற்காய் உழைத்த போராடிய இரத்தம் சிந்திய அனைவரையும் நன்றியோடு, நன்மதிப்போடிங்கே நினைவு கூறுகிறேன்.  வணங்கிக் கொள்கிறேன். வாழ்க பாரதம். ஓங்குக எம் தேசம். வளர்கயென் மணித்திரு நாடு..
வித்யாசாகர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.