புதியவை

பாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை(கட்டுரை) : பேராசிரியர் கே. ராஜுஇந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பாம்புக் கடியினால் 50,000 உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியம் என்ற பெயரில் சில சிகிச்சை முறைகளில் நேரத்தை விரயம் செய்யாமல் கடிபட்டவருக்கு பயிற்சி பெற்ற டாக்டரின் உதவியுடன் உரிய அவசர சிகிச்சை அளித்தோமானால் பெரும்பாலான உயிரிழப்புகளைத் தவிர்த்துவிட முடியும். கடிபட்டவரின் உடல்நிலையைப் பரிசோதித்து சரியான சிகிச்சையளிக்கும் முறையை ஒரு டாக்டரால்தான் கண்டறிய முடியும். பெரும்பாலான நேரங்களில் பாம்புக்கடியினால் கடிபட்டவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்வதில்லை. பாம்புக்கடிகளில் 70 சதமானவை விஷப்பாம்புகளால் ஏற்பட்டவை அல்ல என்பதையும் விஷப்பாம்பினால் கடிபட்டவர்களிலும் 50 சதமானோர்தான் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு கடுமையான விஷம் ஏறி பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தில் உயிரை விடுபவர்களும் உண்டு. 

ஆபத்தை விளைவிக்காத பாம்புக்கடி எனில் கடிபட்ட இடத்தைக் கழுவிவிட்டு ஒரு டெட்டனஸ் தடுப்பூசியைப் போடுவதோடு டாக்டர் நிறுத்திக் கொள்வார். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடி எனில், விஷஎதிர்ப்பு மருந்து  (anti-venom serum) செலுத்த வேண்டிய தேவை உள்ளதா என்பதை அவர் முடிவு செய்வார். பாம்பு விஷத்தை விலங்குகளில், குறிப்பாக குதிரைகளில், செலுத்தி அவற்றின் எதிர்ப்புணர்வு அமைப்பிலிருந்து உருவாகும் எதிர்ப்பொருட்களைச் சேகரித்து விஷஎதிர்ப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் மிக மிக அவசியப்படும்போது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து கிராமப்புற மருத்துவ மனைகளிலும் இந்த விஷமுறிப்பு மருந்து இருப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். 

பாம்புக்கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்
உங்களையோ, வேறு யாரையோ பாம்பு கடித்துவிட்டால் மருத்துவரின் உதவி கிடைப்பதற்கு முன் செய்ய வேண்டிய முதலுதவிகள் :

#  கடிபட்டவரின் பதட்டத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதற்கு நீங்கள் முதலில் பதட்டப்படாமல் இருப்பது முக்கியம். பெரும்பாலான பாம்புகள் விஷப்பாம்புகள் அல்ல என்ற தகவலை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பயம், கடுமையான மன அழுத்தம், பரபரப்பு எல்லாம் இதயத் துடிப்பின் வேகத்தைக் கூட்டி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். விஷம் உடலில் வேகமாகப் பரவவே இது வழிவகுக்கும்.

#  பாம்பு கடித்த நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். பாம்பைப் பிடிப்பதற்கோ கொல்வதற்கோ ஓடி நேரத்தை வீணாக்காதீர்கள். முடிந்தால் அதை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் வந்தபிறகு எல்லோரும்தான் போட்டாகிராபராக மாறிவிட்டார்களே! போட்டோ எடுக்க நேரம் இல்லையெனில், பாம்பின் கலரையும் வடிவத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். டாக்டரிடம் சொல்ல இத்தகவல்கள் பயன்படும். (அதே சமயம் வேறு யாராவது பாம்பை அடித்திருந்தால் அதை ஒரு பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம்). 

#  பாம்பு கடித்தவரை அசையாமல் படுக்க வைக்க வேண்டும். நடக்கவிடக் கூடாது. படுத்த நிலையிலேயே அவரை வேனிலோ, ஆம்புலன்சிலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

#  கடிபட்ட இடத்தை தண்ணீரினால் கழுவக் கூடாது. இது விஷம் உடலில் வேகமாகப் பரவவே வழிவகுக்கும்.

#  கடிபட்டவர் இறுக்கமாக உடையணிந்திருந்தால் அதைத் தளர்த்திவிட வேண்டும். கடிபட்ட இடத்தில் காலணிகள், மோதிரம், கைக்கடிகாரம் அல்லது நகைகள் இருந்தால் அவற்றை கழற்றிவிடவும்.

#  கடிபட்ட உறுப்பு அசையாமல் இருக்க அதிக அழுத்தம் கொடுக்காமல் சிம்பையோ பாண்டேஜ் அல்லது துணியையோ வைத்துக் கட்டிவிடவும். ஆனால் கடிபட்ட இடத்தைச் சுற்றி கயிறு, பெல்ட் அல்லது துணியை வைத்து இறுக்கமாகக் கட்டுவது கூடாது. இது விஷம் பரவுவதை எந்தவிதத்திலும் தடுப்பதில்லை.

#  கடிபட்ட இடத்தில் ஐஸை வைத்து அழுத்த வேண்டாம். கடிபட்ட காயத்திலிருந்து விஷத்தை அகற்றும் நினைப்பில் கத்தியை வைத்து அறுப்பது, வாயை வைத்து உறிஞ்சுவது எல்லாம் கூடாது.

#  கடிபட்டவருக்கு தேநீர், காபி, ஆல்கஹால் போன்ற பானங்களைக் கொடுத்து குடிக்க வைக்க வேண்டாம்.

#  டாக்டரைக் கேட்காமல் நீங்களாக எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம்.

#  நேரத்தை விரயம் செய்யாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை விரைவில் அழைத்துச் செல்வதே சாலச் சிறந்தது.
                                                  

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.