புதியவை

அம்மா... இரத்தினம் கவிமகன்


பசித்து வரும்
பிள்ளைகளுக்காய்
உணவாக்கி காத்திருந்து 
உணர்வூட்டி உணவூட்டி
உரிமைக்காய் குரல்
தந்தவளே...
இருள் விலகாத
ஈழத் திசையெங்கும்
நீங்காத கரு முகில்
திரைக்குள்ளே
எம்மை முகிழ்ந்தெடுத்தவளே
வெண்மதியின் ஒளியூட்டி
வானுயர இசையூட்டி
விழி மலர்ந்து நாம்
சிரிக்க அகம்மகிழ்ந்த
நிலாமகளே
எம்மை சூரிய ஒளிக்கு
எரிந்து போன புல்வெளியாக
பொசிங்கி போக வைத்து
நீ சென்று விட்டாய்
அழ விழியில் நீர்
இன்றி தவிக்கும் உன்
பிள்ளைகளை
திரும்பி பாரம்மா...
கருகிய நெஞ்சங்களில்
வீரியமற்று கறுப்பு இசை
ஒலிக்க விட்டு
உறங்கி நீ போய்விட்டாய்
செவிகளில் ரீங்காரமிடும்
சோகங்களை தொலைக்க
வழியின்றி தவிக்கிறோம்
பாரம்மா
நீ தூங்கி விட்டாய்
தூங்கா இரவுகளை நாங்கள்
கடந்து வந்து
உன் பாதச்சுவடுகளை
தேடுகிறோமே அம்மா...
வாய் பிரித்து காத்திருக்கும்
நெருப்பின் சூட்டிற்கு
உன்னை ஊணாக
கொடுக்க நாங்கள்
தயாராகி விட்டோம் அம்மா
தூக்கி சென்று
தேக்கி வைத்தை கண்ணீரை
உனக்காக உன் உடலெங்கும்
தெளித்து விட்டு
நாமே உன்னை பொசிக்கி
விட போகிறோம்
மொட்டை அடித்து
மீசை மழித்து முட்டியில்
நீர் நிறைத்து
சுற்றி மூன்று தடவை
விழி நீரோடு முட்டி நீர் தெளித்து
கட்டையில் மூட்டிய
கொள்ளியை
உன் காலடியில் வைத்து விட்டு
நாங்கள் மீண்டு வரும்
கொடிய மணித்துளி
இதோ வந்து விட்டது.
ஐயோகோ
உன் முகத்தை
உன் கரத்தை
உன் பாதத்தை
உன் சேலையின்
முந்தானையை
எங்கேயம்மா இனி நாம்
காண்போம்?
தம்பி என்றும் பிள்ளை என்றும்
நீ அழைக்காமல் போகும்
அந்த ஒன்றை வார்த்தையை
இனி எங்கம்மா
நாம் கேட்போம்?
கைகள் வலிக்குதம்மா
கால்கள் தட்டுத் தடுமாறி
எங்கே என்ற
இலக்கின்றி நடக்குதம்மா
உன்னனை
இறுதியாக பார்க்க போகும்
இந்த கண்களை பிய்த்தெறிய
கோவம் எழுகிறதம்மா
ஏனம்மா எம்மை
விட்டு சென்றாய்?
உயிரோடும் உதிரத்தோடும்
உணர்வுகளோடும்
உறங்கி போய் கிடக்கும்
உன்னை எரித்து சாம்பராக்கும்
மணித்துளி எங்காவது
போய் சேராதா அம்மா....
கடக்க முடியாத அந்த
நொடியை கடந்து செல்ல
முடியாது நடக்கிறோம்
அம்மாவே
அதற்கும் நீயே துணையிரு
உன் மகன்களை, மகளை
ஆற்றுகைப் படுத்த
உன் மடி தந்து செல்லம்மா...No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.