புதியவை

மலருமா வசந்தம் நாவல் எழுதுபவர் மீரா , ஜெர்மனி


Chapter 2
ஆர்த்திக்காவுக்கு ஒன்றுமே புரியவில்லை . யார் இவர் ? நான் இந்நபரை முன் ஒரு போதும் கண்டதில்லையே . முன்பின் தெரியாத என்னை ஏன் இப்படி ஏளனமாகப் பார்க்க வேண்டும் ? அவள் சுற்றும் முற்றும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள் .
தன்னை பஸ் தரிப்பிடத்தில் நிற்பவர்கள் எவரும் வித்தியாசமாக நோக்குகிறார்களா என்றும் கவனித்தாள் . ஆனால் எல்லோரும் தமது பஸ்சின் வரவை நோக்கியே காத்துக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது . ஏன் என்னை அப்படி ஒரு முன் பின் தெரியாத நபர் அவ்வாறு பார்க்க வேண்டும் ? அச்சமயம் பார்த்து அவளது பஸ்ஸும் வரவே அதில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் .
ஆர்த்திக்காவுக்கு ஒரே ஆத்திரமாகவும் வந்தது . அவள் அந்நபரை முன்னொரு போதும் கண்டதில்லை என்பது நிச்சயம் . அப்படி இருக்கையில் எவ்வாறு முன் ஒருபோதும் காணாத இன்னொரு மனிதரை கண்டவுடன் இப்படி ஏளனமாக பார்க்க முடியும் ? ஒரு வேளை தான் விலை உயர்ந்த சொகுசு காரில் செல்வதால் பாதசாரிகள் எல்லோரும் தனது அந்தஸ்துக்கு கீழ் என்று கருதுகிறாரோ . அப்படி தான் இருக்க வேண்டும். ஆர்த்திக்காவின் மனது கோபத்தில் கொதித்தது .
அவள் தன்னை ஆசுவாசப்படுத்த கைப்பையிலிருந்த ஐபோட்டை எடுத்து காதில் மாட்டினாள் . இனிமையான பாடல்கள் மனதை எப்பொழுதும் அமைதிப்படுத்தும் . ஐபோட்டில் சுருதியின் விருப்பப்பாடலான "நாட்டி போய்சின் லலா லல லல" பாட்டு இசைத்தது .
http://www.myvideo.de/watch/9131307/Naughty_Boy_La_La_La
பாடலை ரசித்த ஆர்த்திக்கா புன்னகை ஒன்றை பூத்தாள் . சுருதிக்கு இந்த பாட்டு என்றால் கொள்ளை விருப்பம் . பாட்டை இசைக்க விட்டு அதற்கேற்றவாறு அவள் நடனம் ஆடும் பொழுது கொள்ளை அழகு. ஆர்த்திக்கா ஓடிப் போய் சுருதியை ஆசையுடன் கட்டி அணைப்பாள் . சுருதியும் "ஆர்த்தி அக்கா, ஆர்த்தி அக்கா" என்று எப்பொழுதும் அவளைச் சுற்றியே வருவாள்.
ஆர்த்திக்காவின் துயரம் சுருதியுடன் விளையாடும் பொழுது பெருமளவு குறைந்து விடும். சுருதியை பற்றி எண்ணிக் கொண்டிருக்கையிலே அவளது இறங்கும் தரிப்பிடம் வந்தது . மெல்ல இறங்கி தான் வேலைக்கு இணைந்திருக்கும் அந்த நிறுவனத்தை நோக்கி நடையைக் கட்டினாள். அது ஒரு பெரிய தனியார் வங்கி நிறுவனம் . அந்த விசாலமான கட்டிடமே அதை பறை சாற்றியது .
அங்கு வேலை செய்வது தமக்கு பெருமிதம் என்று அந்த நிறுவன உத்தியோகத்தவர்கள் கருதுவதாக ரகு அத்தான் சொல்ல கேட்டிருக்கிறாள் ஆர்த்திக்கா. இந்த தற்காலிக வேலையும் ரகு அத்தானின் நண்பனின் மனைவி பிள்ளைப்பேறு விடுமுறையில் சென்றதனால் கிடைத்தது. உள்ளே சென்ற ஆர்த்திக்கா ஆடம்பரம்பாக இருந்த அந்த வரவேற்பறையை ஒரு தரம் நோக்கம் விட்டாள் .
மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அழகுப்படுத்தப்பட்டு இருந்தது . ரசனையுடன் ரசித்து விட்டு அங்கே அமர்ந்திருந்த வரவேற்பு பெண்ணிடம் சென்று தன் நியமனக்கடிதத்தை நீட்டினாள் . ஆர்த்திக்காவை ஏற இறங்க பார்த்து விட்டு மலர்ந்த முகத்துடன் இருந்த அப்பெண் கடிதத்தை பிரித்துப் படித்தாள். படித்த பின் புன்சிரிப்புடன் ஹலோ, நான் சாரா , உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி மிஸ். ஆர்த்திக்கா, என்று கையைக் குலுக்கினாள் .
மிக இனிமையான குரல் அவளுக்கு . முக மலர்ச்சியுடன் அழகாகவும் காணப்பட்ட அவ் வரவேற்பு பெண்ணை ஆர்த்திக்காவுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது .
சாராவும் ஆர்த்திக்காவை அவள் வேலை செய்ய வேண்டிய பகுதியிற்கு அழைத்துச் சென்றாள் . ஆர்த்திக்கா சுற்றும் முற்றும் ஆர்வத்துடன் நோக்கினாள் . ஆர்த்திக்கா கடந்து சென்ற அறைகள் எல்லாம் மிக நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும் மிக அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தன .
இடப்பக்கத்தில் கடைசியாக காணப்பட்ட ஒரு கண்ணாடி அறைக்கு சென்ற சாரா அங்கு கதிரையில் அமர்ந்திருந்த ஒரு வெள்ளை இனப் பெண்ணிடம் ஆர்த்திக்காவின் நியமனக் கடிதத்தைக் கொடுத்து அவளையும் அறிமுகப்படுத்தி விட்டு விடைப்பெற்றுச் சென்றாள் . கத்ரின் என்ற அந்த பெண் ஆர்த்திக்காவை ஒரு முறை நன்கு கூர்ந்து நோக்கி விட்டு “ஹலோ ஆர்த்திக்கா, இன்று முதல் நீ எனக்கு உதவியாள் . அதாவது நான் இந்த நிறுவனத்தின் முகாமையாளரின் காரியதரிசி .
எல்லாப் பொறுப்புகளையும் நான் தான் கவனிக்கிறேன். ஆகவே எனக்கு வேலை பளு மிக அதிகம் . ஆகவே இன்றுமுதல் நீ எனக்கு காரியதரிசியாக வேலை செய்ய வேண்டும்“ என சிறு கர்வத்துடன் கூறினாள் . ஆர்த்திக்காவுக்கு கத்ரினை பார்த்தவுடன் ஏனோ அவ்வளவாக பிடிக்கவில்லை . மிகவும் கர்வம் கொண்ட பெண் போல தெரிகிறதே , என்றாலும் தனக்குத் தரும் வேலையை தான் ஒழுங்காக செய்து விட்டால் ஒரு பிரச்சனையும் இருக்கப் போவதில்லை எனத் தன்னுள்ளே தீர்மானித்துக் கொண்டாள் .
ஆர்த்திக்கா தயக்கத்துடன் "கத்ரினை" நோக்கி எனது கடமைகள் இங்கே என்ன ? கணணி வேலை ஓரளவு தெரியும் , நிச்சயமாக உங்களுக்கு எல்லா வேலைகளிலும் நான் உறுதுணையாக இருப்பேன் எனக் கூறும் பொழுதே கத்ரின் அவளை இடை மறித்து பொறு பொறு , ரிக், மன்னிக்கவும் , அதாவது எமது இளைய முகாமையாளருக்கு என்னிடம் தான் நம்பிக்கை அதிகம் . வேறு யாரும் அவர் தேவைகளை செய்வது அவருக்கு திருப்தியைக் கொடுப்பது இல்லை . ஆகவே நீ நான் தட்டச்சு செய்து முடிப்பவைகளை நேர்த்தியாக கோர்வை செய்வதுடன் எனது அறை எமது முதலாளியின் அறையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்குமாறு பார்த்தல் உனது கடமையாகும் . அத்துடன் காலையும் மதியமும் “ ரிக்குக்கு” கோப்பி கலந்து கொண்டு சென்று வைக்க வேண்டும். அவரைத் தேடி வாடிக்கையாளர்கள் வரும் வேளையில் அவர்களையும் நாகரீகமாகக் கவனிக்க வேண்டும் . இவை தான் இப்பொழுதுக்கு உனது கடமைகள் . “என்ன ஆர்த்திக்கா நான் கூறியது எல்லாம் நன்றாக விளங்கியது தானே?” என்று முடித்தாள் .
ஆர்த்திக்காவுக்கு ஏதோ உள்ளே நெருடியது . எழுதுவினைனர் வேலை செய்ய வந்தவளுக்கு இவள் ஏதோ ஒரு எடுபிடியை நடத்துவது போல இருந்தது . என்றாலும் சரி என்று ஆமோதித்து விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் . அவள் மேசையில் இருந்த கடிதங்களை ஒரு பக்கமாக அடுக்கி வைத்து விட்டு அங்கே காணப்பட்ட அலுமாரியில் இருந்த கோர்வைகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் கத்ரின், ஆர்த்திக்கா என்று குரல் கொடுப்பது கேட்டது .
கோர்வைகளைத் திரும்பவும் அதே இடத்தில் வைத்து விட்டு “என்ன கத்ரின்?“ என்று கேட்டுக்கொண்டே அவளருகில் சென்றாள் . “ஆர்த்திக்கா ரிக் அங்கே அறையில் தனது கோப்பிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தாமதம் செய்யாமல் கொண்டு சென்று கொடுக்கவும்” என கட்டளையிட்டு விட்டுத் தன் கணணியினுள் மீண்டும் ஆழ்ந்தாள் கத்ரின் .
ஆர்த்திக்காவும் ஒரு தட்டில் கோப்பி கப், பால் , சீனி அத்துடன் அங்கே காணப்பட்ட பிஸ்கட்களையும் இன்னொரு சோசரிலும் அழகாக அடுக்கிக் கொண்டு இளைய முகாமையாளர் ரிக்கின் அறைக்கதவை மெல்லத் தட்டி விட்டு உள்ளே வரலாமா என்று மெல்லிய குரலில் கேட்டவாறே காத்து நின்றாள் . பதில் ஒன்றும் வராததினால் மீண்டும் தட்டி விட்டு கதவை திறந்து உள்ளே சென்றாள் .
அங்கே ரிக் தனது கணனியின் பின்னால் மும்முரமாக ஏதோ வேலையில் ஆழ்ந்திருந்தார் . ஆர்த்திக்கா மீண்டும் தொண்டையை கனைத்து விட்டு “திரு ரிக் அவர்களே உங்கள் கோப்பியை மேசையில் வைக்கலாமா என்று மிகுந்த தணிந்த குரலில் வினவினாள் ?”. இவளது குரலைக் கேட்டு கணனியிலிருந்து தலையைத் தூக்கிய „ரிக்” ஆர்த்திக்காவை கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டான் . ஆர்த்திக்காவும் அதிர்ச்சியில் அப்படியே ஆடிப் போனாள் .
தொடரும்
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.