புதியவை

அனல் தந்த வலிகள் - க.கா.செய்யது இபுராகிம்

அன்பின் இலக்கணம்
அறுபட்டுப் போகின்ற,
அளவற்ற தலைக்கனம்
மேலோங்கி நிற்கிறது !

முட்டிக்களைத்த முதியவரும்
மூச்சுயர்ந்த மழலைகளும்
மெட்டியணிந்த பாவைகளும்
மெத்தனத்தால் மடிந்தனரே !

இன்றிரவே முதலிரவென
இசைந்திருந்த கன்னி
இதயங்களெலாம் வெடித்துச்
சிதறித் துடித்தனரே !

ஐயகோ !...

அனலினால் சுட்டபுண்
ஆறாமலின் றுமிருக்கிறதே,
அண்ணல் வள்ளுவன்
குறளே பொய்த்துவிட்டதே !

சுற்றித்திரிந்த விலங்குகளும்
சுதந்திரப் பறவைகளும்
சுகமான இயற்கையுடன்
மாண்டது பேரிழப்பே !

குறையொன்றும் செய்திலலென
குழுமியழுது கூக்குரலிட்டும்,
குறைமாதத்தில் கிழிந்தது
மழலையின் தொப்புள்கொடி !

மனிதாபிமானமே யற்றஇம்
மாக்களின் செயலால்
மண்டியஇருள் கிழியாது
இரணமாய் வலிக்கின்றதே !

ஏட்டை ஏந்தும் கைகளில்
ஓட்டை ஏந்தும் பிஞ்சுகள்,
கோட்டை வயிறு நிரம்பும்
பசி,பட்டினிச் சிக்கனம் !

காதல் என்பது கேள்வி
கருவறை அதன் பதில்,
கல்லறை காட்டுகிறது
கலைக்க சிக்கல் !

பாபருக்கும் பாலத்திற்கும் போட்டி
புண்பட்ட மனக் குமுறல்தான்,
பிரச்சினை என்ன வெனில்
பரிதவிப்பது பாவப்பட்ட குடிமக்களே !

ஏர் பிடிக்க ஏவி
எட்டிப் பார்க்க மறுப்பு,
எழுந்தது பட்டினி
ஏற்றத்தாழ்வு பிரச்சினை !

காவல் காக்க ஒன்று
கை ஒப்பம் இரண்டு,
கழன்று விழுந்தது
கயவர்களின் பிரச்சினை !

காது கேளாதோர் சங்கம்
கட்டுரை மறுப்புப் பேச்சு,
கை கொடுக்கத் தவிர்ப்பு
காவிரிப் பிரச்சினை !

தெரிந்தவர் தெரியாமல் வந்தால்
தேராதவர்க்குக் கிட்டும் வேலை,
தேங்கி நிற்கிறது நாட்டில்
வேலையில்லாத் திண்டாட்டம் !

நாணமற்ற வன்முறை
நாதியற்றுப் போகவே !
நீதியுற்ற சாளரமாய்
மக்கள்மனம் மாறவே !
இறைவனிடம் வேண்டுவோம்

அடியோடு ஒழிய
அனல் தந்த வலிகள் !......
-     க.கா.செய்யது இபுராகிம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.