புதியவை

கண்ணனாக வேடமிட்டு மேடையில் நடித்த மருதூர்க் கொத்தன் எனும் வாப்பு மரைக்கார் இஸ்மாயில் -நினைவுகளைப் பதிந்து வைப்போம் அவை நம் சந்ததிக்கு உதவும்-மௌனகுரு


மருதூர்க்கொத்தன் என புனை பெயர் கொண்ட வாப்பு மரைக்கார் இஸ்மாயில் கல்முனைப் பிரதேசத்திலுள்ள மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்
.வீ. எம் . மாஸ்டர் என ஆசிரிய சமூகத்தால் அழைக்கப்பட்டவர்
சிருகதை,கவிதை,நாடகம்,கட்டுரை எனப் பல துறைகளிலும் எழுதியவர்.
மருதமுனைக்கு அருகில் இருக்கும் தமிழ்க்கிராமம்தான் நீலாவணை.
அங்கு வாழ்ந்த நீலாவணனுடன் நெருக்கமான பரிச்சயமுடையவர்
நீலாவணன் தயாரித்த
மழைக்கை
எனும் பா நாடகத்தில் 1963 களில் கண்ணன் வேடம் தங்கி கண்ணனுக்கு ஒப்பனைபோட்டு நடித்தவர்
.
அதில் கர்ணனுக்கு நீலாவணனும்,
குந்திக்கு கவிஞர் சடாச்சரனும்,
கிழவன் வேடத்தில்ல் வேதியனாக வரும் இந்திரனுக்கு நுஹ்மானும்
வேடம் தாங்கி நடித்தனர்
என அறிகிறோம்
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு என்பனவற்றில் ஈடுபாடும் புலமையும் மிக்கவர் மருதூர்க்கொத்தன்
பாட்சாலைக் கல்வியில் சகல பாடங்களையும் கற்பிக்கும் வல்லமை கொண்டிருந்தார்
.முக்கியமாக தமிழ் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் ,சமூகக் கல்வி கற்பிப்பதில் மிகுந்த கெட்டிக்காரராயிருந்தார்.
மருதூர்க் கொத்தன் கதைகள் எனும் நூலில் அவரது மாணவன் ஒருவன் தனது அனுபவங்களைக் கீழ் வருமாறு பகிர்ந்துள்ளான்
“1978-1985 காலப்பகுதியில் க.பொ.த.(சாதாரண) வகுப்புகளுக்குத் தமிழ் மொழிப்பாடத்திட்டத்தில் “அ” பாடத்திட்டம் “ஆ” பாடத்திட்டம் என இரு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன
“ அ” பாடத்திட்டத்தில் கம்பராமாயணம், பாரதச் சருக்கம் எனும் பாட நூல்களும்,
“ஆ” பாடத்திட்டத்தில் சீறாப்புராணம்,புது குசாம் எனும் பாட நூல்களும்
பாட விதான அபிவிருத்திக் குழுவினால் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.
பெரும்பாலும் முஸ்லிம் மஹாவித்தியாலயங்களில் பயின்றுகொண்டிருந்த முஸ்லிம் மாணவ சமூகத்திற்கு தமிழ் கற்பித்ட முஸ்லிம் ஆசான்கள் “ஆ” பாட்த்திட்டத்திற்கேற்ப கற்பித்தல் வழிகாட்டலை வழங்கிக்கொண்டிருந்த அதே வேளை
அக்காலப்பகுதியில் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த என் போன்ற க.பொ.த. (சாதாரண) மாணவர்களுக்கு தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் விரும்பித் தெரிவு செய்யும் “அ” பாடத்திட்டத்தை வீ.எம்.ஆசான் (மருதூர்க்கொத்தன்) எமது தெரிவுக்கு விட்டபோது அத்ற்கான காரணத்தை வகுப்பு மாணவர் சார்பாக நான் வினவினேன்
அதற்கு அவர் அளித்த பதில் எம்மை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.
“ எம்மோடு இணைந்து வாழும் தமிழ் சமூகத்தின் கல்வி,கலாசார,விழுமியங்களை முஸிம்களாகிய நாம் அறிந்திருப்பதோடு எம்மை நாம் தனிப்படுத்தி வாழக்கூடாது”
ஆசானின் இந்தப்பதில் அவர் ஓர் விசால மனோபவமுடைய மானிடத்தை நேசிக்கும் ஆதர்ச ஆசான் என்பதை 24 வருடங்களுக்கு முன் எங்கள் பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணிபோல பதிய வைத்தது.
இது அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட மானிடவியல் வழி காட்டல் என்பதை அவரது மாணவனாகிய நான் பெருமையோடு நினைவுகூருகிறேன்"
இது ஓர் முக்கிய குறிப்பு என நான் கருதுகிறேன்
தமிழ் முஸ்லீம் மாணவர்களை இலக்கிய ரீதியாக கல்வி அமச்சின் கீழியங்கும் பாட விதானம் பிரித்தபோது
அதற்கு எதிர் வழியிற் சென்றவராக மருதூர்கொத்தன் எனக்குத் தெரிகிறார்
தமிழ் மாணவர்கள் இஸ்லாமிய இலக்கியங்களைக் கற்க வேண்டும் இஸ்லாமிய மாணவர்கள் தமிழ் இலக்கீயங்களைக் கற்கவேண்டும் என விரும்புவோர் நம்மிடையே மிக அருந்தலாகவே காணப்படுகிறார்கள்
தமிழ் மாணவர்களும் இஸ்லாமிய பண்பாட்டையும்,இலக்கியங்களையும் அறிய வேண்டும்
நான்
"இஸ்லாமும் தமிழும்"
என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்
“தமிழ் மாணவன் ஒருவன், சீறாப்புராணம் எமது இலக்கியம் என்றும் முஸ்லிம் மாணவன் ஒருவன் கம்பராமாயணம் எமது இலக்கியமென்றும் கூறும் சூழல் கல்வியுலகிலாவது உருவாக்கப்படவேண்டும்”
இன்றோ நிலைமகள் நாம் எதிர்பாராத அளவு மிக வேகமாக மாறி விட்டன.
இரு பிரிவினரையும் இரு துருவ நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டன
ஆனால் இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன்னர் மருதூர்க்கொத்தன் அதனைத் தனது
பாடசாலையில்நடைமுறைப்படுத்திக்காட்டியுள்ளார்
இதனாலேயே அவர் நீலாவணனுடன் இணைந்து மஹாபாரதத்தின் ஒரு பகுதியான கர்ணன் கடைசி நாட்கள் நாடகத்தில் நடித்துள்ளார்
அவர் தாங்கிய வேடம் மஹாபாரதத்தின் மிக முக்கிய சூத்திரதாரி பாத்திரமான
கண்ணன் வேடம்
இம்மருதூர்க்கொத்தன் எழுதிய நாடகங்கள் சில அவரது கையெழுத்தில் எனக்குக் கிடைத்தன
.இவற்றை எனக்குத் தந்தவர் அவரது மகனாவர்
அவர் பெயர் ஆரிப் இஸ்மாயில்
.அவுஸ்திரேலியாவில் எஞ்சினியராகப் பணிபுரியும் இவர் நேற்று என்னைத் தேடி வந்து மருதூர்க்கொத்தன் எழுதிய மேடை நாடகங்கள்,வானொலி நாடகங்கள் என பத்து நாடகங்களைத் தந்து சென்றார்
"எனக்குக் கிடைத்த புது வருடப் பரிசு மிகப்பெரிய பரிசு"
என நன்றியுடன் கூறி அவற்றை வாங்கிக்கொண்டேன்
அவை பின்வருமாறு
மேடை நாடகங்கள்
----------------------------------------------------
1. போடிமகன் போடி
2. தந்திக்கலம்பகம்
3. அழகிய முன்மாதிரி
4. களைகள்
5. வலை
6.பாவம் நரிகள் ( நாட்டிய நாடகம்)
7. ஆபிரகாம் லிங்கன்
வானொலி நாடகங்கள்
----------------------------------------------------
8. இடியோடு கூடிய மழை
9. இழுமென் துயராய்
10.வாழையடி வாழையாய் வந்த உறவு
இப்போது நான் அந்நாடகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்
மருதமுனை மண்வாசனை மணக்கும் நாடகங்கள் சில
மருதமுனையில் அவர்காலத்தில் வாழ்ந்த பாத்திரங்கள் எப்படிப் பேசினார்கள் அவர்களின் உறவு முறைகள் எவ்வாறு இருந்தன என்பவற்றை அறிய சில நாடகங்கள் உதவுகின்றன

மருதமுனை பேச்சு வழக்கு மணக்கிறது

தமிழர் முஸ்லிம்களுக்கிடையே இருந்த அன்றைய உறவுகளை சில நாடகங்கள் பேசுகின்றன

காட்டில் உழைக்காமல் வாழ்ந்த ஒரு சிங்கத்திற்கெதிராக ஓற்றுமைப்பட்டுக் கிளம்பும் ஏனைய மிருகங்களைக் காட்டும் சிறுவர் நாடகம்( இது தாள லயத்தில் அமைந்திருக்கிறது.இதனை அவர் நாட்டிய நடகம் என நாமகரணம் சூட்டியுள்ளார்)
பா நாடகம் ( இதனைக் கொத்தன் கவிதை நாடகம் என அழைகின்றார்

நந்திக்கலம்பகம் எனும் நகச்சுவை நாடகம் ( இதில் முதல் மூன்று பக்கங்களையும் காணவில்லை)

ஆற அமர இருந்து வாசித்த பின் அந்நாடகங்கள் பற்றி எனது அபிப்பிராயங்களைப் பதியவுள்ளேன்

அத்தோடு அவர் எழுதிய 17 கட்டுரைகளும் கிடைத்துள்ளன
அவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுபவை
அரசியல்,
இலக்கியம்
இன ஒற்றுமை
,நாட்டரியல் 
கல்வி

ஆகியன பற்றிப் பேசுகின்றன

அவை அவரது கருத்துலகை அறிய நமக்கு உதவுகின்றன

மருதூர்க்கொத்தனை நான் முதன் முதலில் 1966 இல் சந்திக்கிறேன்
கல்முனை சாஹிராக்கல்லூரிக்கு ஆசிரியராக நியமனம் பெற்றுச் சென்ற வருடம் அது

அப்போதுதான் எனக்கு

நீலாவணன்,
சண்முகம்சிவலிங்கம்,
நுஹ்மான்,
சடாட்சரம்,
மருதூர்க்கொத்தன்
,மருதூர்க்கனி 
மருதமுனை நாடகக்காரரான சக்காப் மௌலானா, 
மருதூர் மஜீட்.
அன்புமுகைதீன்,
ஆனந்தன், 
பாண்டியூரான்

போன்ற கல்முனை,மருதமுனை சாய்ந்தமருது,பாண்டிருப்பு போன்ற கல்முனையையொட்டிய கிராமங்களில் வழ்ந்த பல எழுத்தாளர்கள் அறிமுகமாகின்றார்கள்

சிலகாலம் நான் பாண்டிருப்பிலும்,கல்முனையிலும் வதிகின்றேன்

அவர்கள் அனைவரோடும் நெருக்கமான உறவுகள் ஏற்படுகின்றன.

1960 களின் பிற்பகுதியில் ஈழத்தின் பிரபல நாவலசிரியரான சுபைர் இளங்கீரன் மருதமுனைக்குத் தனது குடும்பத்தோடு வந்து செட்டில் பண்ணுகிறார்

இவர்கள் உறவு குடும்ப உறவாக விரிந்தமை இன்னுமோர் அற்புதம்

ஒரு நாள்

மருதூர்க்கனி,
மருதூர்க் கொத்தன்
,இளங்கீரன் 
ஆகியோர் தத்தம் மனைவிமாருடனும் பிள்ளைகளுடனும்

எனது கிராமத்திலிருந்த வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்

.அப்போது எனக்குத் திருமணமாகியிருக்கவில்லை.

தாய் தந்தையர் சகோதரிகளுடன் வசித்தேன்

எமது வீடு வந்த் இக்குடும்பங்கள் ஒரு முழு நாள் எமது வீட்டில் தங்கினார்கள்

இளங்கீரனும்,
மருதூர்க்கனியும்
கொத்தனும்

அவர்களது மனைவிமாரும்

எனது அம்மா கொடுத்த வெற்றிலை வட்டாவில் இருந்த பாக்கு வெட்டியால் பாக்கு வெட்டி,அதிலிருந்த தளிர் வெற்றிலையை எடுதுச் சுண்ணம்பு பூசி கைப்பும் அதனோடு இணைத்து ரசித்து ரசித்துச் சாப்பிட்டது இப்போதும் மனதில் பதிந்து விட்ட ஓவியங்கள்

நான் திருமணமான பின் யாழ்ப்பாணம் சென்று விடுகிறேன்

மருதூர்க்கனிக்கு யாழ்ப்பாணத்தில் உறவுண்டு,அவர் அங்குவருகையில் மருதூர்க்கொத்தனும் யாழ் வருவார்

எம்மோடு தங்குவார்.

குசினிவரை வந்து குந்தியிருந்து உணவு சமைக்க என் மனைவியாருக்கு உதவுவார்

சித்திரலேகாவை அவர்

“புள்ள”

என்றுதான் அழைப்பார்

பிளையைப் புள்ள என அழைத்தல் மருதமுனை மரபும் கூட

அந்தப் புள்ளை என்ற அழைப்பில் காணப்படும் உரிமை,
நெருக்கம்,
வாத்சல்யம் 
என்பன எழுதி விளக்க முடியாதவை

மருதூர்க்கனியின் ஒரு சிறுகதைத் தொகுதிக்கு சித்திராவே முன்னுரை எழுத வேண்டும் என்பதில் கனி மிக உறுதியாக இருந்தார்

சித்திராவும் எழுதிக்கொடுத்தார்

மருதூர்க் கனி என அழைக்கப்படும் ஹனிபாவுடனும்

,கொத்தன் என அழக்கப்படும் இஸ்மாயிலுடனும்,

நுஹ்மானுடனும்

மற்றும் நீலாவணன் சண்முகம் சிவலிங்கம், சடாட்சரனுடனும் கல்முனைக்கடற்கரையில் நிலவொளியில் அமந்திருந்து உரையாடிய அக்காலப்பொழுதுகள் ( 1960 களின் நடுப்பகுதி) ஞாபகம் வருகின்றன

இவர்களுள் பலர் இப்போது உயிருடன் இல்லை

பழைய இனிய நினைவுகளைச் சுமந்து கொண்டு நம்மில் சிலரே எஞ்சியுள்ளோம்

நம்மோடு அந்நினைவுகளும் அழிந்து விடும்

நினைவுகளைப் பதிந்து வைப்போம்

அவை நம் சந்ததிக்கு உதவும்
மௌனகுரு
-------------------------------


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.