புதியவை

மலருமா வசந்தம் நாவல் எழுதுபவர் மீரா , ஜெர்மனி அத்தியாயம் 3
தாயை எண்ணி ஏங்கத் தொடங்கிய ஆர்த்திக்காவின் நினைவுகள் சற்றே பின்னோக்கி நகரத் தொடங்கியது . ஆர்த்திக்காவின் குடும்பம் ஒரு நடுத்தரவர்க்க குடும்பமாக இருந்தாலும் எல்லோராலும் போற்றப்படுகிற குடும்பத்தில் பிறந்தவள். அப்பா கிளிநொச்சியிலுள்ள ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியர் . அம்மா குடும்பத்தலைவி . ஒரு தம்பி. ஒரே பெண்ணாகப் பிறந்தததினால் அவளிடம் எல்லோருக்கும் பிரியம் அதிகம் .
அதிலும் கடவுள் அவளிடம் வஞ்சனை காட்டாது அறிவையும் பேரழகையும் அள்ளிக் கொடுத்திருந்தார் . அவளும் மென்மையான குணத்துடன் எல்லோருடனும் மிகவும் கனிவுடன் பழகியமையினால் ஊரில் உள்ளவர் எல்லோரும் அவளிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தனர். அவள் குடியிருந்த அதே தெருவில் தான் அவளது பள்ளித்தோழி ரம்யாவும் குடியிருந்தாள். ஓத்த வயதும் ஒரே வகுப்பிலும் படித்த இருவரும் இணைபிரியாத் தோழிகளாகி விட்டிருந்தனர் .
நாட்டு நிலவரம் சீர் இல்லாது இருந்தாலும் ஆர்த்திக்காவின் குடும்பம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. தோழிகள் இருவரும் தமக்குள்ளே ஒரு சிறிய உலகத்தை உருவாக்கி வெளிப் பிரச்சனைகளில் தம்மை ஈடுப்படுத்தாது சிரிப்பும் கும்மாளமுமாகவும் பாடசாலையும் வீடுமாகவும் இருக்கும் வேளையில் யார் கண் பட்டதோ தந்தைக்கு கட்டாய வேலை மாற்றமாக சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டார் . தந்தை மறுக்க இயலாது தன் குடும்பத்தை கிளிநொச்சியில் விட்டு விட்டு சாவகச்சேரியிலுள்ள பாடசாலையில் வேலைக்கு அமர்ந்தார் .
அவர் வேலை மாற்றம் பெற்றுச் சென்ற பின்னர் கிளிநொச்சியில் நிலவரம் மோசமடையத் தொடங்கியது . அரசாங்கத்துடனான போர் வலுக்க அதிலிருந்து தப்புவதற்காக ஆர்த்திக்கா, அவள் தாய் , தம்பியுடன் அடைக்கலம் தேடி வேறு பாதுகாப்பான இடத்தை நாடிச் சென்றனர் . இப் போரின் நிமித்தம் ஆர்த்திக்காவின் தந்தைக்கு இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு நாள் கிளிநொச்சி நகரமே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஆர்த்திக்கா உட்பட எல்லோருமே இறந்து விட்டதாக ஒரு வதந்தி தந்தையின் காதிற்கு எட்டியது . தந்தை தன் முழுக் குடும்பத்தையும் இழந்து விட்டதாக எண்ணி அதிர்ச்சிக்குள்ளானார் . இத் துயரம் அவரை வாட்ட ஒரு நாள் மாரடைப்பு வந்து அவரும் இறந்து விட்டார் .
இம் மரணச் செய்தி ஆர்த்திக்காவையும் தாயையும் வந்தடைய காலத்தாமதம் ஆகி விட்டது . தாங்கொண்ணாத் துயருடன் மூவரும் பெரிதும் கஷ்டப்பட்டு இறுதி கிரிகைகளுக்காக சாவகச்சேரியை வந்தடைந்தனர் . ரம்யாவும் ஆர்த்திக்காவுக்கு உறுதுணையாக அவளது துயரத்தில் பங்கு கொண்டாள் . ரம்யா அவளுக்கு ஆறுதல் தந்ததுடன் அவளை தேற்றி மனம் உடைந்து விடாது தைரியத்தையும் கொடுத்தாள் . ஆர்த்திக்காவுக்கு அந்த பெரும் துயரத்தின் போது ரம்யா தான் பெருமருந்தாக இருந்தாள் . கணவனை இழந்த ஆர்த்திக்காவின் தாய் சாவகச்சேரியிலேயே தொடர்ந்தும் தங்கி விட முடிவெடுத்துக் கொண்டார் .
இதனால் தோழி ரம்யா கிளிநொச்சிக்கு தனியாக திரும்ப வேண்டியிருந்தது . நண்பி ஆர்த்திக்காவை பிரிந்து திரும்பிய வேளையில் அங்கே போர் மிகவும் தீவிரம் அடைய தொடங்கிவிட்டது. ஷெல்லடிக்கும், பொம்ப் தாக்குதலுக்கும் அஞ்சி மக்கள் ஒவ்வொரு இடங்களாக இடம் பெயரத்தொடங்கி இருந்தனர் . பெரும் மக்கள் அழிவு அங்கே நடந்தேறிக் கொண்டிருந்தது. இதன்போது ரம்யாவும் ஷெல்லடியில் தாக்குண்டு தன் இன்னுயிரை நீத்தாள் .
ஆர்த்திக்காவுக்கோ அடிக்கு மேல் அடி விழுந்தது போல் ஆகிவிட்டது. மிக குறுகிய கால இடைவெளியில் தன் தந்தையையும் தன் இணை பிரியா தோழியையும் ஒரே சமயத்தில் இழந்தாள் . அது மட்டுமின்றி பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வேறு ஒரு புதிய சூழ் நிலைக்கும் தள்ளப்பட்டாள் . இவை எல்லாம் சேர்ந்து அவளை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது . இவர்கள் சந்தித்த கொடுர சம்பவங்களை அறிந்த ஆர்த்திக்காவின் ஒன்று விட்ட சகோதரியான ஷோபி அக்கா அவளை இங்கிலாந்து நாட்டிற்கு உடனே விருந்தினர் விசாவில் வரவழைத்து தனது வீட்டிலேயே தஞ்சமும் கொடுத்தார் .
ஒரு நல்ல மாற்றத்தை ஆர்த்திக்கா வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்க ஷோபி அக்கா பெரும்பாடு பட்டார் . இந்த நேரத்திலே தான் ஆர்த்திக்காவுக்கு பொழுது போவது போலவும் இருக்கும் அதே நேரத்தில் தாயகத்தில் இருக்கும் அவள் தாயையும் தம்பியையும் பணத்தை அனுப்பி கவனிக்கவும் முடியும் என்பதனால் ரகு அத்தானின் நண்பனின் மனைவி விடுப்பில் செல்வதை கேள்வியுற்றவுடன் அவ்வேலையை ஆர்த்திக்காவுக்கு கிடைக்கும் படி சிபாரிசு செய்தும் விட்டார் .
யாரோ தனது தோளில் ஆதரவாக தட்டுவதை உணர்ந்த ஆர்த்திக்கா திடுக்கிட்டு தனது நினைவுகளிலிருந்து மெல்ல மீண்டு வந்தாள் .
தொடரும் 


மீரா , ஜெர்மனி

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.