புதியவை

ஜெர்மன் மீரா எழுதிவரும் தொடர் நாவல் "மலருமா வசந்தம்" அத்தியாயம் 4


கடவுளே நான் கண்ணீர் சிந்தியதை அந்த ரிக் ஆகிய ரிதேஷ் கண்டுவிட்டானோ! என்று அச்சத்துடன் திரும்பியவள் சாரா புன்னகையுடன் நிற்பதை கண்டு ஆறுதல் கொண்டாள் ஆர்த்திக்கா .
„என்ன, ஆர்த்திக்கா உனது இருக்கையிலேஎ, அப்படியே இருந்து விட்டாய் . வீடு திரும்பும் எண்ணம் இல்லையோ? வா நாம் இருவரும் சேர்ந்தே போவோம்“ என அன்பாக அழைத்தாள் . ஆர்த்திக்காவும் தனது துயர நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால் நேரம் போனது கூட கவனிக்கவில்லை . உடனே எழுந்து தனது மேசை முதல் கத்ரினுடைய மேசையையும் ஒதுக்கி விட்டு தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு சாராவுடன் கிளம்பினாள் .
வீடு திரும்பிய ஆர்த்திக்காவின் முகம் சோர்ந்து இருப்பதை ஷோபி அக்கா கண்ணுற்றாள் . ஆர்த்திக்கா முகம் கழுவி வேறு உடை மாற்றி விட்டு ஷோபி அக்காவும் சுருதியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தாள். ஆர்த்திக்காவை கண்ட சுருதி துள்ளி எழுந்து அவள் மடியில் ஏறி அமர்ந்து, " ஆர்த்தி அக்கா எங்கே போயிருந்தீர்கள் ? இன்று உங்களை நான் நிறைய மிஸ் பண்ணினேன் தெரியுமா?“ என்று தன் கொஞ்சும் குரலில் ஆவலுடன் வினவினாள் . ஆர்த்திக்காவும் சுருதியை ஆசையுடன் கட்டி அணைத்துக் கொண்டே " வேலைக்கு போயிருந்தேன் சுருதி , என்ன இன்று பாடசாலையில் செய்தனீங்க ? " என்று பதிலுக்கு கேட்டாள்.
ஷோபி அக்கா இவர்களின் உரையை ரசித்தபடியே " ஆர்த்திக்கா உனது முதல் நாள் வேலை எப்படி இருந்தது ? உனக்கு வேலை பிடித்திருக்கா ? நீ வரும் பொழுது கவனித்தேன் முகம் வாடி இருந்தது என்ன காரணம் ?“ என்று பரிவோடு விசாரித்தார் .
ஆர்த்திக்கா அன்றைய சம்பவங்களை ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள் . ஒரு கணம் கோபமும் உடனே கவலையும் ஏற்பட "இல்லை அக்கா, எமது இளைய முகாமையாளருக்கு ஏனோ என்னை அவ்வளவாக பிடிக்கவில்லை போலத் தெரிகிறது . அத்துடன் அவர் மிகவும் கர்வம் பிடித்தவர் . அது தான்..“, என்று தொடங்கி அன்றைய நாள் நடந்த எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லி முடித்தாள் .
பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த ஷோபி அக்காவும் யோசனையுடன் ஆர்த்திக்காவை நோக்கி " ஓ அந்த ரிதேஷ் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன் . அவரும் இலங்கையர் தான் . ஆனால் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர். எமது கலாச்சாரம் பற்றி அவ்வளவாக அவருக்கு தெரியாது . அது மட்டுமின்றி அவர் சிறு வயதினனாக இருக்கும் பொழுதே தாயை இழந்து விட்டார் . ஆதலால் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆதலால் தான் என்னவோ எமது நாட்டவரை கண்டால் அவருக்கு ஒரு வகை இளப்பம் . நீ ஒன்றும் யோசியாதே ஆர்த்திக்கா , உனது வேலையை நீ ஒழுங்காக செய்யும் பொழுது அவர் ஏன் உன்னிடம் குற்றம் காணப்போகிறார்“ என அவளை சமாதானப்படுத்தினார் .
ஆர்த்திக்காவுக்கோ மனம் சமாதானப்பட மறுத்தாலும் அக்காவுக்காக அதை ஏற்றுக்கொண்டாள் . ரிதேஷின் ஏளனச் சிரிப்பும் அவனது அகங்காரத்துடன் கூடிய அவன் உருவமும் அவள் மனதை விட்டு அகல மறுத்தது .

தொடரும் 
மீரா , ஜெர்மனி
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.