புதியவை

ஜெர்மனிமீரா, எழுதும் தொடர் நாவல் " மலருமா வசந்தம்" அத்தியாயம் 5மறுநாள் விடிந்ததும் ஆர்த்திக்கா வேலைக்கு ஆயத்தமாகி, அக்காவிடமும் விடைப்பெற்றுக்கொண்டு பஸ் தரிப்பிடத்தை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் . முதல் நாள் கண்ட பல பரீச்சய முகங்களைக் கண்டு சிறு புன்னகை பூத்து விட்டு தனது பஸ்சுக்காக காத்திருக்கும் பொழுது, அதே சிவப்பு நிற போர்ஷ (Porsche) வாகனத்தை ரிதேஷ், அந்த வாகன நெரிசலூடாக மெதுவாக செலுத்திக்கொண்டு வந்தான் .
அவளைத் தாண்டும் பொழுது, முதல் நாள் பார்த்த அதே அலச்சியப்பார்வை. இறுமாப்புடன் வாகனத்தை செலுத்திச் சென்ற ரிதேஷைக் காண ஆர்த்திக்காவுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது . தனக்குள்ளேயே ரிதேஷ் என்ற பெயர் இருக்க அதை „ரிக்“ என்று மாற்றிக்கொண்டு, தான் ஏதோ ஒரு ஐரோப்பியர் என்ற எண்ணம் அவனுக்கு . „எப்படித்தான் அகங்காரம் காட்டினாலும், அவனது நிறம் எம்மைப் போன்று மண் நிறம் தானே. வெள்ளைக்காரன் ஆக விருப்பம் இருந்தால், தன் உருவை மாற்றி, வெள்ளைப் பூச்சுப் பூசி இருக்கலாமே. உடம்பு முழுக்க வெள்ளை பூச்சு அடித்து விட்டு பின்னர் தான் ஒரு ஐரோப்பியன் என்று எல்லோரிடமும் பறைசாற்றட்டும், என்று முணுமுணுத்தாள்“.
தனது பஸ் பிடித்து நிறுவனத்துக்கு வந்து சேர்ந்த பொழுது அங்கே தரிப்பிடத்தில் நின்ற அந்த சிவப்புக் காரைக் காண அவளுக்கு மேலும் எரிச்சலாக இருந்தது .
தனது அறைக்கு வந்தவள் அங்கே ஏற்கனவே கத்ரின் தனது வேலைகளை ஆரம்பித்திருந்ததை அவதானித்தாள் . „குட்மோர்னிங், காலை வணக்கம்“ என்று கூறி விட்டு அவள் தட்டச்சு செய்து முடித்திருந்தவைகளை வேறாகவும், அவற்றில் ரிதேஷிடம் கை எழுத்து வாங்குவதற்கானவற்றை வேறு ஒரு தட்டிலும் ஒழுங்காக அடுக்கி வைத்தாள். கத்ரினோ இவளை கணக்கில் எடுக்காது தனது கருமத்திலேயே கண்ணாய் இருந்தாள் .
ஏமாற்றமாக இருந்தாலும் ஆர்த்திக்கா, அவளுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வேலைகளை செவ்வனவே முடித்து விட்டு ரிதேஷுக்கு கோப்பியை கலந்து எடுத்துக்கொண்டு அவனது அறைக்குச் சென்றாள் .
உள்ளே சென்றவள் தயங்கியபடியே, „ மன்னிக்கவும் கோப்பி கொண்டு வந்திருக்கிறேன்“ என மெல்லிய குரலில் கூறினாலும் ரிதேஷ் அவளது பக்கமே திரும்பியும் பார்க்கவில்லை . கணனியிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்திக்கொண்டே „சரி, சரி“ என்று எதேர்சையாக பதிலுரைத்தான் . அதை பொருட்படுத்தாத ஆர்த்திக்கா திரும்பவும் வந்து மிகுதியாக இருந்த தனது வேலையில் ஆழ்ந்தாள் . மதிய உணவு நேரமும் வந்தது .
கத்ரின் இவளிடம் வந்து ஆர்த்திக்கா நான் மதிய உணவுக்காக வெளியே செல்கிறேன் . வரும் தொலைபேசி அழைப்புகளைக் கவனி“, என கட்டளை இட்டு விட்டு தன் கை பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றாள் . ஆர்த்திக்காவும் தனது உணவையும் மறந்து அதே அறையில் தனது மிகுதி வேலையைத் தொடர்ந்தாள் .
சிறிது நேரத்தின் பின் அறைக்கதவை திறந்துக்கொண்டு ரிதேஷ் அவசரமாக உள்ளே வந்தான் . " எங்கே கத்ரின் ? அவளை உடனே என் அறைக்கு வரச் சொல்லு“ என்று பதிலுக்கும் காத்திராமல் உள்ளே சென்று மறைந்தான் . இப்பொழுது என்ன செய்வது ? இந்த சிடுமூஞ்சியிடம் சென்று கத்ரின் வெளியே சென்று விட்டாள் என்று சொன்னால் அதற்கும் என்னிடம் சினந்து விழுவானோ? மிகுந்த தயக்கத்துடன் ரிதேஷின் அறையை மெதுவாக தட்டி, உள்ளே சென்றாள் ஆர்த்திக்கா .
தொடரும் ........
மீரா , ஜெர்மனிNo comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.