புதியவை

-புது மாற்றம்"(கவிதை) கவிஞர்,"முனைவர் க.நேசன். எம். ஏ.,எம்.பில். பிஎச்.டி.,

இளைஞனே!
திக்கற்று நிற்பவனே!
திசையெங்கும் தவிப்பவனே!
தாங்க முடியாத வலியைத்
தாங்கி நடப்பவனே!
உலகுக்காக
உயிர் வாழ்பவனே!
சிறுபொழுதேனும்
சிந்தித்துப் பார்.
உன்
இதயம் வெடிக்கும்.
கொள்ளைப் போனது
நாடு.
எஞ்சி இருப்பது
மக்கள் வாழும் காடு.
நீ
மயங்காதே!
எதற்கும் தயங்காதே!
மனம் திறந்து பேசு!
நீ செல்லும்
பாதையெல்லாம்
போலிகள்.
நீ மட்டும்
இன்னும்
வெகுளியாக.
எங்கும்
ஒரே கூக்குரல்
வெட்கமாக இருக்கிறது
உன்னை விற்கிறாயென்று.
பேசுபவர்கள்
உலகெங்கும்
கூவி விற்கிறார்
இந்நாட்டை .
நீ
ஏற்காவிட்டாலும்
உனக்குள்ளே
சாதி இருக்கிறது
மொழி இருக்கிறது
மதம் இருக்கிறது
மனிதம் இருக்கிறது.
எதுவும் சாகவில்லை
வாழவுமில்லை.
உறவாட
அனைத்தும் பார்க்கும்
நீ
வாக்களிக்கும் போது
எதையும் பார்ப்பதில்லை
மனிதனென்கிறாய் .
நீ
இப்படியே வாழ்கிறாய்
எவனோ வருகிறான்
நம்மை வெல்கிறான்
நன்றாக வாழ்கிறான்.
நீ
எப்போதும் இப்படியே!
இனிமையாக பேசுகிறார்
உருமாறிய வேசர்கள்
உருப்படுமா நாடு.
நீ
கொடி பிடித்தே சாகிறாய்
திராவிடம் பேசி
நாட்டையே அழித்துவிட்டனர்.
உன்
உறவுகளைத் தூக்கி எரியும்
நீ
அழகான விறகுகளைத்
தூக்கிப் பிடிக்கிறாய்.
உன்னை
எரிக்கக் கூட பயன்படாது.
இதுவரை
மாற்றமென்றுச் சென்றாய்
ஏமாற்றத்தையே கண்டாய்
மாற்றமென்று.
வெள்ளையாக இருப்பதால்
நஞ்சு எப்படி பாலாகும்.
அழகாக இருப்பதால்
பிஞ்சு எப்படி பழமாகும்.
உனக்கு
உண்மை தெரியவில்லை.
தலைவனைக்
களத்திலிருந்து
தேர்வு செய்யாமல்
திரைப்படத்தில் இருந்து
தேர்வு செய்கிறாய்.
சுயமரியாதையென்று
வாய்க்கிழியப் பேசும்
நீ
சுயமரியாதையின்றி
வெட்கமில்லாமல்
கையேந்துகிறாய்.
புழுவிற்கு ஆசைப்பட்டுத்
தூண்டிலில்
சிக்கும் மீனாக
இலவசத்திற்கு ஆசைப்பட்டு
அரக்கரிடம்
சிக்கிச் சாகிறாய்.
எதற்கும் பணம்
இல்லையென்றால்
நடை பிணம்.
நாட்டின் உடலெங்கும்
இலஞ்சமென்ற புற்றுநோய்

இளைஞனே!
உன்னால் தான் முடியும்
அறுவை சிகிச்சை செய்ய
நிச்சயமாக தேவை
புதிய தலைவன்
புதிய சிந்தனை
புது மாற்றம்
கவிஞர்,"முனைவர் க.நேசன். எம். ஏ.,எம்.பில். பிஎச்.டி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.