புதியவை

ஜெர்மனிமீரா, எழுதும் தொடர் கதை மலருமா வசந்தம் அத்தியாயம் 07
அன்று ஆர்த்திக்காவின் இனிமையான குரலுக்கு இன்னோர் நபரும் மயங்கி இருந்ததை ஆர்த்திக்கா அப்பொழுது அறியவில்லை . அந்நிறுவனத்தின் கணக்கு பிரிவில் வேலை செய்யும் „மைக்“ இவள் உள்ளே வந்த பொழுதே அவளை சுவாரசியமாக கவனித்தாலும் ஆர்த்திக்கா பாடிய பாடலுக்கு பின்னர் அவளிடம் தன்னை எப்படியும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் தீர்மானித்துக் கொண்டான் .
அவ் விழாவின் பாடலும் ஆடலுடன் சேர்ந்த கேளிக்கைகளும் இனிதே ஓரளவுக்கு நிறைவுக்கு வந்தன . நன்கு நேரமாகிவிட்டதனால் ஆர்த்திக்காவும் சாராவும் கிளம்பத் தயாரானார்கள் . இரவு நேரம் ஒரு டக்ஸ்சியை வரவழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்து அவ் உணவு விடுதியின் வாசலுக்கு வந்த பொழுது அதே நேரம் ரிதேஷும் அவனுடன் சேர்ந்து கத்ரினும் வீடு செல்ல வெளியே வந்தார்கள் .
இவர்களைக் கண்டவுடன் ரிதேஷ் சாராவிடம் நெருங்கி " என்ன சாரா, இங்கே நிற்கிறீர்கள் ? உங்களை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் வந்திருக்கிறதா“ என்று வினாவினான் . பதிலுக்குச் சாராவும் "இல்லை ரிக் ஒரு டக்ஸ்சியை வரவழைக்கலாம்" என்று தொடங்க ரிதேஷ் உடனே இடைமறித்து " வாருங்கள் நானே கொண்டு சென்று வீட்டில் விட்டுவிடுகிறேன் , இதோ கத்ரினையும் வீட்டில் விடத் தான் கிளம்பி உள்ளேன். ஆகவே என்னோடு வாருங்கள்“ என்று முன்னே கிளம்பினான் .
அதற்குள் எங்கிருந்தோ பிரசன்னமான மைக் இவர்களிடையே குறுக்கிட்டு „ரிக் உங்களுக்கு ஏன் வீண் தொந்தரவு ?. இதோ இவர்கள் இருவரையும் கவனமாகக் கொண்டு சேர்ப்பது எனது வேலை . இந்த அழகிய தேவதை ஆர்த்திக்காவிற்கு இன்றிலிருந்து நான் ரசிகன் ஆகி விட்டேன் . அவளுக்கு சேவை செய்ய மிகவும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன், ஆகவே நீங்கள் புறப்படுங்கள்“ என்று மிக நகைச்சுவையாகக் கூறி முடித்தான் .
ரிதேஷ் பதில் ஒன்றும் கூற முடியாது கடைக்கண்ணால் ஆர்த்திக்காவை பார்க்க அவளோ கீழே தரையை நோக்கிக் கொண்டு இருந்தாள் . அதற்குள் கத்ரின் பொறுமையின்றி அவசரமாக, „வாங்கள் ரிக் போகலாம்“ என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சென்றாள் .
சாராவையும். ஆர்த்திக்காவையும் மைக் தனது காரிலேயே கொண்டு சென்றான் . மைக் தனது நகைச்சுவை மூலம் எதையாவது வயிறு குலுங்கச் கூறி சிரிக்க வைக்க, ஆர்த்திக்காவுக்கு மைக்கை மிகவும் பிடித்திருந்தது . " ரிதேஷ் மிகவும் கர்வம் பிடித்தவன். என்னை எவ்வளவு அலட்ச்சியப்படுத்துகிறான் . எல்லாம் பணத்திமிர் . இதோ இந்த மைக் எவ்வளவு எளிமையானவன். எவ்வளவு தன்மையுடன் எல்லோருடனும் பழகுகிறான்" என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள் .
அடுத்த நாள் வழமை போல ஆர்த்திக்கா வேலைத் தளத்தில் தனது கடமைகளைச் செய்தாள் . அவளிடம் அந் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோரும் மிகவும் நட்புடனும், மரியாதையாகவும் பழகத் தொடங்கினர் . அதனாலோ, என்னவோ கத்ரின் மட்டும் இவளிடம் கொஞ்சம் கூடவே கடுப்புக் காட்டினாள் . அதைக் கொஞ்சமேனும் பொருட்படுத்தாது ஆர்த்திக்கா தனக்கு இடப்பட்ட வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தினாள் .
ரிதேஷுக்கு கோப்பி கொண்டு சென்ற வேளையிலும் அவன் அவளை ஒரு தரம் ஆழ்ந்து நோக்கி விட்டு மௌனமாக இருந்தான் . ஆர்த்திக்காவும் அவனிடம் ஒன்றும் கூறாது வழமை போல கோப்பி கலந்து வைத்து விட்டு தாமதியாமல் உடனே தன் இருக்கைக்குத் திரும்பினாள் . இருவரும் ஒருவருடன் ஒருவர் மௌனமாகவே போர் தொடுத்துக் கொண்டிருந்தனர் .
தொடரும் 
மீரா , ஜெர்மனிNo comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.