புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  இந்தியாவைச் சேர்ந்த   இராச. கிருட்டினன்,

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டிபெப்ரவரி மாதம் 2018
போட்டி -99 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-07
தலைப்பு -தேர்தல்

மதியூ கம்மது சதிதான் என்பது
விதியாய் மாறியதோ?
அதிகா ரம்மது சதிகா ரர்வசம்
கதியாய் வீழ்ந்ததுவோ?
சுதிசேர்த் தேபலர் துதிபா டித்தொழ
பதியாய் மாறுவரோ?
எதிர்கா லம்மதில் புதியோர் தான்வர
வழிதான் ஏற்படுமோ?
மொழிபே ரிற்சிலர், இனத்தா லேசிலர்,
மதத்தால் பிரித்தாள்வார்!
பழிபா வம்மதை மதிக்கா மல்லவர்
பணத்தால் வீழ்த்திடுவார்!
குழிக்குள் ளேவிழும் மதயா னையென
விழுவார் பலபேர்கள்!
விழிகெட் டேபலர் மதிகெட்டோடியே
வழிதான் மாறிடுவார்!
உதட்டின் மேல்நகை உளத்துள் ளோபகை
பதவி தனிற்பிடிப்பு!
பதமாய்ச் சொல்லியே தனதே
மெய்யெனும்
விதத்தில் பெருநடிப்பு !
உதவா ஊடகம் விலையே போகுமே
பொதுவாய்க் கண்துடைப்பு!
எதனை நம்பிட எவற்றைத் தள்ளிட
முதலுக் கேமோசம் ?
பிடிப்பார் கால்களை; நடிப்பார்
பொய்மையாய்;
வடிப்பார் கண்ணீரை!
துடிப்பாய்ப் பேசுவார், துணிவாய்ச்
சுற்றுவார்;
நொடியிற் சாய்த்திடுவார்!
முடிப்பார் காரியம்; முனைப்பாய்ப்
பற்பல
முறையில் லாவகையில்!
அடியாள் சூழவே அகந்தை கொண்டவர்
அதன்பின் ஆடிடுவார் !
கரங்கள் பற்பல உறவா டிப்புதுத்
திறமே காட்டிடவே,
அரசாங் கம்மதில் அறவோர் சேரவே
வரவேண் டும்முயற்சி!
நரகம் தானது சொர்க்கம் மாகியே
தரவேண் டும்மகிழ்ச்சி !
வரவேண் டும்மொரு புதுமாற் றம்மது
சிறப்பாய் வாழந்திடவே!
(சந்தம் சிறக்கச் சில இடங்களில் ஒற்று
மிகும்படி அமைத்துள்ளேன்...மதியூ கம்மது என்பதில் ம் போல. )
இராச. கிருட்டினன்,ரண்டாவது  இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் சேர்ந்   இலங்கையைச்  சேர்ந்த 

 கீழ்கரவை .கி .குலசேகரன் உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டிபெப்ரவரி மாதம் 2018
போட்டி -99 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-03
தலைப்பு -தேர்தல்
நாடினிலே தேர்தல் ஒன்று நடக்கும் என அறிவித்தல்
நமை வந்து சேர்ந்துவிட்டால் போதும், இங்கு
போட்டி போட்டு வெற்றி பெறும் நினைப்புடனே பலபேர்கள்
புறப்படுவார் புற்றீசல் போலும் ,”நாம் வாழும் இந்த,
நாட்டின் உயர்வுக்காய் நாம் உழைப்போம்” என்றுரைப்பார்!
“நமக்குங்கள் வாக்குகளை வழங்கிடவே வேண்டும்” என்பார் !
வீட்டுக்கு வீடு வந்து வாக்குகளை வேண்டி ,”எங்கள்
வெற்றிக்கு வித்தாக விளங்குபவர் நீவிர்!” என்பார் !

வந்தனங்கள் சொல்லி எமை வாழ்த்திடவே வந்திடுவார் !
“வளமான வாழ்வுக்கு வழி சமைப்போம்” என்றிடுவார் !
சொந்தங்கள் போல்வந்தெம் சுகங்களையும் கேட்டறிவார் !
“சொல்வதனைச் செயல்களிலே காட்டுபவர் நாம்”என்பார் !
“சந்ததமும் உங்களுக்காய் நாம் உழைப்போம் “என்று சொல்வார் !
“சமத்துவமாய் யாவரையும் நடத்துபவர் நாம்” என்பார் !
“இந்த நிலை தொடரவெனில் இத் தேர்தல்தனில் எங்கள்
இனியவரே! எமைத் தெரிவு செய்திடுவீர்” என்றிடுவார் !

வண்ணவண்ணக் கொடிகளுடன் வாக்குகளை வேண்டியுமே
வாகனங்களில் பவனி வந்திடுவார் !தங்களது
எண்ணம்போல் பரிசுகளை, குடிவகைகளை வழங்கி
எப்படியும் மக்களைத் தம் வசப்படுத்த நினைத்திடுவார் !
உண்பதற்கு உலருணவுப் பொட்டலங்களும் வழங்கி
ஊரூராய் சென்று பிரசாரங்கள் செய்திடுவார் !
கண்கட்டி வித்தைகளைச் செய்பவர்கள்போல் தமது
காரியங்கள் ஆற்றுவதில் வெற்றிகளும் பெற்றிடுவார் !!

தேர்தலிலே வெற்றி பெற்றாற் போதும், ,மறு தேர்தல்வரை
தேடியுமே வந்துவிடார் ! தெருவில் கண்டாற்கூட
யார் நீங்கள் ?என்றெம்மைக் கேளார் !எம் தேவைகள்
யாவையுமே மறந்து தம் நலன்கள் காப்பார் ! சிலர்,
நேர் வழியில் சென்றுவிடார்! நெறிமுறைகள் தவறியுமே ,
நிதம் இலஞ்சம் ,ஊழல்களில் கருத்தாய் நிற்பார் !
பாரில் உள்ளோர்க்கிவராலே பயன்கள் உண்டோ ? இந்தப்
பாவியர்கள் திருந்த வழி காண்பதெப்போ ?

கீழ்கரவை .கி .குலசேகரன்

மூன்றாவது  இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இலங்கையைச் சேர்ந்   கவிச்சுடர் சிவரமணி 
திருகோணமலை.


உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டிபெப்ரவரி மாதம் 2018
போட்டி -99 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-11
தலைப்பு -தேர்தல்

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !
மக்களை நம்பியே பலர் கனவு!
விடியலைத்தேடி மக்கள் மனங்கள் !
விடிந்தும் இருளுக்குள் அரசியல் தலைகள்.
அரியணை ஏற ஆயிரம் கதைகள் !
ஆலாபனை செய்யும் ஊர்த்தலைகள்!
கவர்ச்சிகர பேச்சு காரியம் நடக்க,
கைகட்டி வேடிக்கைபார்க்க மக்கள் கூட்டம்.
சேற்றில் உழலும் பன்றிக்கும்
தேவைக்கு வரும் அரசியல் த,லைமைக்கும்
வித்தியாசம் என்னவோ ?
வென்றபின் தெரியும் சேதி அல்லவோ ?
அடிவருடி அடிவருடி அலைவர் ,
ஆகாதானாலும் அவசரத்திற்கு காலைப்பிடிப்பார்.
உன்னுடன் உன்னுடன் என அலைவர் ,
உடனிருந்தே ஒற்றுமைக்கு கொள்ளியும் வைப்பர்.
சோறுகண்ட இடம் சொர்க்கமாம் ,
வேற்று மொழியானாலும் பரவாயில்லையாம்,
யாருகண்டா கொள்கைப்பரப்பை !
யாவரும் மாறுவதே அவரவர் நீதி.
பேருக்கும் புகழுக்கும் ஆசை.
பேரோடு பணமும் தேவை.
கல்வியோ கஷ்டமோ தேவையில்லை
செல்வாக்கு செல்லுபடியாகுமே தேர்தலுக்கு.
தேர்தல் என்பது மக்களின் எதிர்காலம்!
எதிர்பார்ப்புகளின் உச்ச வரம்பு !
வரம்பு எழுவதும் உடைவதும் அரசியல் வாதியால்.
நாட்டின் பெருமை நாளைய வாழ்வு நம்பிக்கையே தேர்தல்.

கவிச்சுடர் சிவரமணி  திருகோணமலை. 


இம்மாதத்தின்  (சிறந்த கவிஞராக)  சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு  -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்தஅ.வேளாங்கண்ணி, சோளிங்கர், வேலூர்உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை
போட்டிபெப்ரவரி மாதம் 2018
போட்டி -99 வது மாதம்
போட்டிக்கவிதை எண்-09
தலைப்பு -தேர்தல்

ஓட்டுப்போட‌ காசுவாங்கும் கெட்ட‌சனமும் நாம்தான்
அரசியல் ஒருவியாதியென்று சொல்லுவ‌தும் நாம்தான்
வேலைநடக்க காசுகொடுக்கும் தாழ்ந்த‌சனமும் நாம்தான்
லஞ்சம்ஊழல் அதிகமென்று புலம்புவதும் நாம்தான்
சனநாயக நாடென்ற பேரும் எடுத்தோம்
பணநாயகம் கோலோச்ச ஆசை விதைத்தோம்
இலவசத்தின் வசம்கிடந்து மோசம் போனோம்
விஷமெனவே தெரிந்தும் பலரை தேர்ந்தேயெடுத்தோம்
பிரச்சாரம் பிரியாணியால் கடந்து போகுது
பொதுக்கூட்டம் மதுக்குடிக்க ஏங்கி நிற்குது
கைத்தட்ட காசுவாங்கி வயிற்றை நிரப்புது
கொள்கை தேடும் கூட்டத்திடும் சரணடையுது
ஜெயிக்க பல கட்சித்தாவும் தலைவர்களுண்டு
புரியாத கட்சிகளுடன் கூட்டணி உண்டு
பதவி கிடைக்க எப்படியும் நடப்பதுவுண்டு
கிடைக்க மறுத்தால் கூட்டணிக்கு முழுக்குமுண்டு
உலகம் முழுதும் தேர்தலிங்கே நடப்பதுண்டுங்கோ
பள்ளி தொட்டு வாழ்க்கைவரை எங்குமுண்டுங்கோ
கலகம் பலவும் தேர்தல்நாளில் வழக்கம்தானே..
தவறாய் தேர்ந்தெடுத்து புலம்புவதெங்கள் பழக்கம்தானே.
.
அ.வேளாங்கண்ணி, சோளிங்கர், வேலூர்கவிதைகளை  தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு)   நடுவர்களுக்கு தடாகத்தின்  நன்றிகள் 
 வெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள் 

போட்டிகளில்வெற்றி பெற்று  நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி  போட்டியாளர்களுக்கு 
ஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின்  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.