புதியவை

ஜெர்மனிமீரா, எழுதும் தொடர் கதை மலருமா வசந்தம் அத்தியாயம் 6
தயங்கியபடியே ரிதேஷ்யிடம் சென்ற ஆர்த்திக்கா கத்ரின் மதிய உணவுக்காக வெளியே சென்றதை மெல்லிய குரலில் உரைத்தாள் . உடனே ரிதேஷ் " எனக்கு மிக அவசரமாக ஒரு கடிதம் எழுத வேண்டும். யாரையாவது உ டனே அனுப்பி வை . எனக்கு தாமதிக்க நேரம் இல்லை " என்று அவசரப்படுத்தினான் .
ஆர்த்திக்காவும் " உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நானே எழுதுகிறேன் . இதோ எனது பென்னை எடுத்து வருகிறேன் " என்று ஒரு நிமிடமும் தாமதியாமல் பென்னும் பேப்பருமாக வந்து அவன் முன் அமர்ந்தாள் . அவளை ஒரு விநோதமாக பார்த்து விட்டு " அவசரத்துக்கு பரவாயில்லை " என்று கூறி விட்டு தான் எழுத வேண்டிய கடிதத்தை பற்றி விளக்கினான் ,
ஆர்த்திக்காவும் குனிந்த தலையுடன் அவன் கூறக் கூற குறிப்புகளை எடுத்தாள் . ஒரு முறையேனும் அவனிடம் குறுக்கிடவில்லை . அவனும் தான் சொல்ல வேண்டியவைகளை மிக விபரமாக சொல்லிக் கொண்டே போகும் பொழுது சிறிது நேரம் மௌனமானான் . அங்கே நிசப்தம் நிலவுவதை உணர்ந்த ஆர்த்திக்கா தலையை உயர்த்தி பார்த்த பொழுது ரிதேஷின் பார்வை இவளிடம் ஆழ்ந்து பதிந்திருந்தது . இருவரின் கண்ணும் சந்தித்துக் கொண்டன . ஒரு கணம் தான் ஆர்த்திக்கா உடனே கண்ணை மீண்டும் தாழ்த்திக் கொண்டாள் .
ரிதேஷும் உடனே தன்னை சுதாகரித்துக்கொண்டு தொடர்ந்தான் . அவன் கூறி முடித்த பின்னர் ஆர்த்திக்கா அவற்றை சீராகக் கணனியில் எழுதி விட்டு அதன் பிரதியையும் எடுத்துச் சென்று அவனிடம் கொடுத்தாள் . அதைச் சரியாக இருக்கிறதா என்று பார்த்த ரிதேஷ் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்காட்டாது „தேங்க்ஸ்“ என்று மட்டும் கூறி விட்டுத் தனது வேலையில் மீண்டும் ஆழ்ந்தான் .
திரும்பி வந்த கத்ரின், ஆர்த்திக்கா ரிதேஷ்க்கு உதவி புரிந்ததை கேள்வியுற்றவுடன் ஆற்றாமையுடன் " என்ன, ரிக் கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் நானே முடித்துத் தந்திருப்பேன் . அவளுக்கு இதை எல்லாம் சிறப்பாக செய்ய தெரிந்திருக்காது. எத்தனை பிழைகள் விட்டாளோ . வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு கடிதம் எப்படி அனுப்புவது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் " என்று கொஞ்சலுடன் அவனிடம் நெருங்கிக் குலாவினாள் .
அன்றும் வேலை முடிந்தவுடன் ஆர்த்திக்கா சாராவுடனே வீடு திரும்பினாள். சில நாட் சந்திப்பு என்றாலும் இருவரும் நல்ல நண்பிகளாகி விட்டனர் . சாரா தன்னை பற்றியும் தனது நண்பரை பற்றியும் சுவையாக கூறிக்கொண்டே வரும் பொழுதே ஆர்த்திக்காவின் தரிப்பிடமும் வந்தது .
இவ்வாறே இரு கிழமைகள் ஓடோடிச் சென்று விட்டன . ஆர்த்திக்கா பெரும்பாலும் ரிதேஷை நேரே சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டாள் . கோப்பி கொண்டு சென்றாலும் சத்தம் ஏதும் இன்றி வைப்பதும், அவனே அறியாத மாதிரி குடித்து முடித்தவுடன் அதை அகற்றுவதுமாக அவள் தனது கடமைகளை செவ்வனவே செய்து கொண்டிருந்தாள் .
இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் சாரா இவளிடம் " ஆர்த்திக்கா எமது நத்தார் பார்டி வருகிற சனிக்கிழமை வருகிறது அல்லவா, என்ன உடை உடுப்பது என்று யோசித்து விட்டாயா ? நான் நாளைக்கு ஒரு புது உடை வாங்க கடைக்கு போகிறேன் . நீயும் என்னுடன் வருகிறாயா . அப்படியே உனக்கும் வாங்கலாம் " என்று கட்டாயப்படுத்தினாள் . ஆனால் ஆர்த்திக்கா பதிலுக்கு " இல்லை சாரா எனக்கு இவ் விழாக்களில் பங்கேற்றுப் பழக்கமில்லை , அதுவும் நான் இந்த நிறுவனத்தில் இணைந்து சில நாட்களே ஆகின்றது . எல்லோரையும் அவ்வளவாக எனக்கு பழக்கமில்லை. ஆகவே என்னை விட்டு விடு" என்று ஒருவாறு சமாதானப்படுத்தினாள் . ஆனால் வீடு திரும்பிய பொழுது ஷோபி அக்கா அதே நாள் ரகு அத்தானின் நிறுவனத்திலும் நத்தார் பார்டிக்கு இவளை அழைத்த பொழுது அவர்களுடன் தானும் சென்று தொந்தரவு செய்வதை தவிர்ப்பதற்காக " இல்லை அக்கா , எமது நிறுவனத்திலும் அதே நாள் பார்டி . ஆகவே நீங்களும் சுருதியும் ரகு அத்தானுடன் போங்கள் , நான் எமது நிறுவன பார்டியில் கலந்துகொள்கிறேன் என்று பதில் கூறினாள் .
அந்த நாளும் வந்தது . ஆர்த்திக்கா அவளிடம் இருந்த மிக அழகிய சுடிதார் உடையை அணிந்துகொண்டு அதற்கு பொருத்தமான காதணிகயுடன் நெக்லஸ்யும் காப்புகளையும் அணிந்துக் கொண்டாள். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அவளுக்கு விருப்பமான சுடிதார் அணிவது அவளுக்கு சந்தோஷத்தை அளித்தது . தன்னையே ஒரு தரம் கண்ணாடியில் பார்த்து கொண்டாள் . கண்ணாடியில் அவள் பிம்பம் மிகவும் அழகாக காட்சி தந்தது. ஒருவகை திருப்தியுடன் அவள் பார்டிக்கு கிளம்பிச் சென்றாள் .
பார்டி நடக்கும் இடம் ஒரு பிரபல உணவு விடுதி . பிரத்தியேகமாக இவர்களுக்கு மட்டுமே ஒதுக்கி இருந்ததால் அங்கே அந்த நிருவனத்தின் ஊழியர் மட்டுமே வந்திருந்தனர் . ஆர்த்திக்கா ஒரு அழகு தேவதை போன்று அந்த உணவு விடுதிக்குள் பிரவேசித்த பொழுது அங்கே வந்திருந்தவர்கள் இவளைக் கண்டதும் ஒரு கணம் இவள் அழகில் மலைத்தனர் . சாரா உடனே ஓடி வந்து கட்டிக் கொண்டு " ஆர்த்திக்கா யு லுக் கிரேட் , யு ர எ ரியல் பியுட்டி (Arthika you look great! You are a real beauty!) என்று ஆர்த்திக்காவின் அழகில் மயங்கியவளாய் பரவசப்பட்டாள் .
உள்ளே அழைத்துச் சென்று இதோ குடிக்க பழச்சாறு கொண்டு வருகிறேன் என்று மதுபானங்கள் கொடுக்கப்படும் இடத்தை நோக்கி சென்றாள் . சாராவை பின் தொடர திரும்பிய ஆர்த்திக்கா அவ் விடத்தில் ரிதேஷ் நிற்பதை கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள் . ரிதேஷ் இவளைக் கண்டவுடன் ஒரு ஆழப்பார்வை பார்த்து விட்டு பக்கத்தில் மிக மிக நவ நாகரீகமாக உடை அணிந்திருந்த கத்ரினிடம் தொடர்ந்து கதைத்துக்கொண்டு இருந்தான் .
அவனிடமிருந்து, ஒரு மரியாதையின் நிமித்தமாகவேனும் ஒரு சிறு தலை அசைவோ அல்லது புன் சிரிப்போ இல்லை. ஆர்த்திக்கா அதன் பிறகு ரிதேஷ் நிற்கும் பக்கமே செல்லாமல் சற்று தூரவே ஒதுங்கி நின்றாள் . ஒரே பாட்டும் நடனமுமாக எல்லோரும் களிப்புடன் காணப்பட்டனர் . அங்கே வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்த்திகாவை அடிக்கடி பார்ப்பதும் அவள் அழகை ரசிப்பதுடன் பல வேளைகளில் அவளிடமே வந்து தம்மை அறிமுகப்படுத்தி¬¬யும் கொண்டனர். ஆர்த்திக்காவும் சிறு ரசனையுடன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள் .
உணவு வேளை முடிந்தவுடன் ஒருவர் முன்னே வந்து ஒலிவாங்கியை எடுத்து " எல்லோருடைய கவனத்துக்கு , நாம் இப்பொழுது ஒரு போட்டி வைக்கப் போகிறோம் . இங்கு வந்திருப்பவர்களது பெயர்களை நாம் குலுக்கி இரு பெயர்களை தெரிவு செய்வோம் . தெரிவு செய்த நபர்கள் இருவரும் சேர்ந்து எமக்குப் பாடியோ அல்லது நடனமாடியோ விருந்தளிக்க வேண்டும் . ஒருவரும் மறுக்கக் கூடாது. சரி நாம் இப்பொழுது இருவரைத் தெரிவு செய்வோம் " என்று அங்கிருந்த பெயர்கள் அடங்கிய பெட்டிக்குள் இருந்து இரு துண்டுகளை எடுத்து வாசித்தார்.
முதலில் „ரிதேஷ்“ என்று அழைத்து பிறகு எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக „ஆர்த்திக்கா“ என்று கூப்பிட்டார் . ஆர்திக்காவுக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது . „ஐயோ என்னால் இயலாது, அதுவும் இந்த ரிதேஷுடனா?“ என்று மறுக்க முற்படுகையில் அவளை முந்திக்கொண்டு ரிதேஷ் „இல்லை இல்லை, அந்த பெண்ணுக்கு பாடல் ஆடல் எல்லாம் சரி வராது . ஆகவே நான் விலகிக் கொள்கிறேன்“ என்று சத்தத்துடன் கூறினான் . ஆர்த்திக்காவுக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது .
„இவன் யார் எனக்கு பாடத் தெரியாது என்று கூறுவது. நான் சங்கீதம் முறைப்படி கற்றுக்கொண்டவள் . மேலையத்தவரை போல ஒரே காட்டுக் கத்து கத்துகிறவள் இல்லை“ என்று தன்னுள்ளேயே கூறிக்கொண்டு தொண்டையை கனைத்துக் கொண்டே முன்னே வந்து பாடத்தொடங்கினாள் .
அவளது இனிமையான குரலைகேட்டதும் அங்கு நின்ற எல்லோரும் நிசப்தமானார்கள் . ஆர்த்திக்காவை ஒதுக்கி விட்டு வெளியேறிய ரிதேஷின் கால்கள் நகர மறுத்து நின்றுவிட்டது . ஆர்த்திக்கா எதையும் பொருட்படுத்தாது எல்லோரையும் தன் இசையினால் கட்டிப் போட்டாள் . அவள் பாடி முடித்த பொழுது எல்லோரினதும் கரகோஷம் வானைப் பிளந்தது எனலாம் . ரிதேஷ் அவனை அறியாது ஆர்த்திக்காவை நோக்கி மெல்ல நடந்து வந்தான் . ஏதோ ஒரு ஈர்ப்பு அவனை அவளிடம் இழுப்பது போல உணர்ந்தான் .
நெருங்கிச் சென்ற வேளையில் சாரா ஓடோடி வந்து ஆர்த்திக்காவை கட்டி அணைத்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் " நீ எவ்வளவு அழகாகப் பாடுகிறாய் . உனது குரல் மிக மிக இனிமையானது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கத்ரின் ஆர்த்திக்காவையே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு நின்ற ரிதேஷிடம் இடை புகுந்து " என்ன ரிக் என்னைக் கவனிக்காமல் இங்கே நிற்கிறீர்கள் ? ஒரே தாகமாக இருக்கிறது . ஆகவே குடிப்பதற்கு ரெட் வயின் எடுத்து வாருங்கள்“ என்று உரிமையுடன் கேட்டாள் .
ஆர்த்திக்காவையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்த ரிதேஷ் ஒரு கணம் தயங்கி விட்டு பின்னர் மதுபானம் கொடுக்கும் பக்கமாக திரும்பிச் சென்றான் . ஆனால் அவனிடம் ஆர்த்திக்காவின் இனிமையான பாடல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை அவன் அப்பொழுது உணர வில்லை .

தொடரும்........
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.