புதியவை

ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை['மலருமா வசந்தம்" அத்தியாயம் 8


யாரும் அறியாது மௌனப்போர் நடந்தாலும் அங்கு வெற்றி தோல்விக்கு இடம் தராமல் இருவருமே வீரியம் காட்டினார்கள் .
திரும்பி வந்து ஆர்த்திக்கா அங்கே காணப்பட்ட பத்திரங்களை கவனமாக கோர்வை இடும் பொழுது " ஹலோ அழகி , உனக்கு வேலை அதிகம் என்றால், உதவிக்கு நான் வரட்டுமா“ என்று நகைச்சுவையாக மைக்கின் குரல் கேட்கப் புன்னகையுடன் திரும்பினாள் . " இல்லை மைக், வேலை அதிகம் இல்லை. இங்கே இருப்பவையை கோர்வை இடுகிறேன் , அவ்வளவு தான். நீங்கள் என்ன இங்கே செய்கிறீர்கள்?“ என்று பதிலுக்கு உரைத்து விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்தாள் .
மைக் சிரிப்புடன் " உன்னை பார்க்கத் தான் ஓடோடி வந்தேன் பெண்ணே “, என்று சினிமா வசன நடையில் கூறிக்கொண்டு இருக்கையில் ரிதேஷ் தனது அறையில் இருந்து வெளியே வந்தான் . இவர்கள் உரையாடலை கேட்டதும் நேரே இருவரினதும் அருகே வந்து கோபத்துடன் "உங்களது சிரிப்பையும் குலாவலையும், வேலை நேரம் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளுங்கள்“.
„மைக் உனக்கு ஆர்த்திக்காவுடன் நேரம் செலவிட வேண்டும் என்றால் இன்று பின்னேரம் அதாவது வேலை நேரம் முடிந்த பின்னர் ஆர்த்திக்காவை சந்தித்து பேசு. இப்பொழுது இங்கே வந்து தொந்தரவு செய்ய வேண்டாம், என்ன இருவருக்கும் நான் கூறுவது நன்றாக விளங்கியதா? “ என்று கத்தினான். அதற்கோ மைக் "கூல் ரிக், கூல் ,(Cool, Cool Rick) என்ன நடந்தது உனக்கு ? ஏன் இப்படி காட்டு கத்து கத்துகிறாய் ? அப்படியே உடனே ஆர்த்திக்காவிடமும் திரும்பி என்ன ஆர்த்தி இன்று பின்னேரம் சந்திக்கலாமா“? என்று நமட்டு சிரிப்புடன் கேட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் .
ரிதேஷின் முகத்தில் எள்ளும் கொள்ளும் ஒரேயடியாக வெடித்தது . ஆர்த்திக்காவை நோக்கி „அதற்குள் அவனுக்கு நீ ஆர்த்தியாகி விட்டாய் . இனிமேல் வேலை நேரத்தில் இந்த சேஷ்டைகளைத் தவிர்த்து விடுவது உனக்கு நல்லது“ என்று எச்சரித்து விட்டு மீண்டும் விறு விறு என்று தனது அறைக்குள் சென்றான் .
ஆர்த்திக்கா சோகத்தில் ஆழ்ந்தாள். „என்ன தவறை நான் இப்பொழுது செய்து விட்டேன்?. ஏன் இந்த ரிதேஷ் இப்படி என்னிடம் ஒரே பிழை காண்கிறான்“. அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது .
ஆனாலும் அன்று ரிதேஷ் அவளுக்கு கத்ரின் மூலமாக வேண்டும் என்றே பல வேலைகளைக் கொடுத்தான் . சாரா வீடு செல்ல வந்த பொழுது ஆர்த்திக்காவினால் அவளுடன் சேர்ந்து செல்ல முடியவில்லை . ஒருவாறு வேலையை முடித்துக்கொண்டு கிளம்பும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது. பயந்த படியே அவள் பஸ் தரிப்பிடம் நோக்கிச் செல்லும் பொழுது அவளைத் தாண்டி அந்த சிவப்பு நிற போர்ஷ் வாகனம் சீறிப் பாய்ந்து சென்றது . நெஞ்சுக்குள் அவள் ரிதேஷைத் தாறு மாறாகத் திட்டியபடியே ஒருவாறு வீடு வந்து சேர்ந்தாள் ஆர்த்திக்கா .
அடுத்த நாட்கள் நத்தார் பண்டிகையுடன் சேர்ந்து வார விடுமுறை நாட்களும் வந்ததினால் அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது . „ரிதேஷின் கத்தலைக் கேட்க வேண்டியதில்லையே! அதனால் தான். வீட்டில் ஆர்த்திக்கா சுருதியுடன் விளையாடியதுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு மணித்தியாலக் கணக்கில் அம்மாவுடனும் தம்பியுடனும் வட்ஸ்அப்பில் சந்தோஷமாகவும் கதைத்தாள் .
இவளது வேலையைப் பற்றிக் கூறினாலும், அம்மா கவலைப் படுவா என ரிதேஷ் பற்றி மட்டும் கூறவில்லை . தம்பியிடமும் „உனக்கு நான் ஒரு ஐபோட் வாங்கி அனுப்புகிறேன்டா, ஆனால் நல்லாப் படிக்க வேண்டும்“ என அவனையும் உற்சாகப்படுத்தினாள் . ஷோபி அக்காவுக்கும் சமையல் அறையில் மிகவும் உறுதுணையாக இருந்தாள் . அடுத்த நாள் சாராவும் இவளைத் தேடி வர, இருவரும் சந்தோஷமாக நேரத்தை களித்தார்கள். சாரா ரம்யாவின் இடத்தை ஓரளவு நிரப்பினால் என்றே கூறலாம் .
நத்தார் குதூகலத்துடன் எல்லோருக்கும் வழி பிறப்பதற்காக புதுவருடமும் இனிதே பிறந்தது. புதுவருடம் பிறந்ததை வரவேற்பதற்காக ஷோபி அக்கா குடும்பமும் ஆர்த்திக்காவும் கோயிலுக்கு சென்றனர் . கோயிலுக்குச் செல்லும் வேளையில் ஒரு திருப்பத்தில், அதே சிவப்பு நிற போர்ஷ வாகனத்துடன் ரிதேஷ் நின்று கொண்டிருந்தான் . அவனது வாகனத்தைச் சுற்றி சிலர் தமக்குள் வாக்கு வாதப்பட்டுக் கொண்டிருந்தனர் . இதைக் கண்ட ரகு அத்தான் தனது காரை நிறுத்தி ரிதேஷிடம் , " என்ன ரிதேஷ் ஏதாவது பிரச்சனையா ? என்ன இங்கே நிற்கிறீர்கள் ? ஏதும் உதவி தேவையா“ என மரியாதையாக வினவினார் .
அதற்கு ரிதேஷும் „இல்லை ஒரு சின்ன விபத்து . ஒருவாறு சமாளித்து விட்டேன். ஆனால் வாகனத்தைத் தான் இப்பொழுது எடுக்க முடியாது . காப்புறுதி முறைகள் தெரியும் தானே . அது தான் ஒரு டக்ஸியைக் கூப்பிட எண்ணிக்கொண்டிருந்தேன்“ என்று பதிலுரைத்தான் .
உடனே ரகு அத்தான் „டக்ஸி எதற்கு வாருங்கள் எங்கள் காரிலேயே போகலாம், ஏறுங்கள்“ என்று கார் கதவை திறந்து விட்டார் . காரில் ஏறிய ரிதேஷ் ஷோபி அக்காவை நோக்கி ஹலோ! கூறி விட்டு சுருதியிடம் „ஹாப்பி நியு ஈயர் லிட்டில் கேர்ள், புத்தாண்டு வாழ்த்துக்கள் “ என்றும் வாழ்த்தினான் . ஆனால் ஆர்த்திக்காவை ஒரு பார்வை நோக்கியதுடன் சரி பிறகு திரும்பி ரகு அத்தானிடம் „எங்கே எல்லோரும் கிளம்பியுள்ளீர்கள் „? என்று வினவினான் .
ரகு அத்தானும், நாங்கள் கோவிலுக்கு போகிறோம் . இதோ பக்கத்தில் தான். உங்களுக்கு பரவாயில்லை என்றால் நீங்களும் எம்முடன் வாருங்களேன் . கடவுள் தரிசனம் முடிந்தவுடன் உங்களை வீடு கொண்டு சென்று இறக்குகிறேன் என்றதற்கு ரிதேஷ் சிறிது தயங்கி பின்னர் சம்மதித்தான் .
எல்லோரும் கோயிலை அடைந்தனர் . தாயகத்தில் உள்ள நீண்ட கோபுரங்கள் கூடிய கோயிலாக இல்லாவிட்டாலும் மூலஸ்தானம் பரிவார தெய்வங்கள் கூடிய முருகன் கோயிலாக அது அமைந்திருந்தது . புதுவருடம் என்பதால் பல அடியார்கள் கூடி இருந்தனர் . தமிழருக்கு துன்பம் வரின் அதைத் தெய்வம் ஒன்றிடமே முறையிட ஓடுவார்கள். அத்துடன் புதுவருடத்தில் கடவுளை துதித்தால் தமக்கு அவ்வருடம் முழுவதும் நன்மையே பயக்கும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டிருப்பர் .
ஆதலாலோ என்னவோ கோவில் நிறையக் கூட்டமாக இருந்தது . ரிதேஷுக்கு அக்கோயிலை பார்க்கையில் ஒரே புதுமையாக இருந்தது. பலர் முண்டியடித்துக் கொண்டு சுவாமி தரிசனத்துக்காக முன்னே செல்வதைப் பார்க்க அவனுக்கு ஒரு புறம் சிரிப்பாக வந்தாலும் ஏதோ அவனுள் ஒரு தெய்வீகமான நிம்மதி பரவுவதை உணர்ந்தான் . அவனது கண்கள் தன்னை அறியாது ஆர்த்திக்காவைத் தேடியது .
ஷோபி அக்கா, சுருதி, ஆர்த்திக்காவும் ஒவ்வொரு கடவுளுக்கும் முன்னர் மனமார வேண்டிக் கும்பிட்டனர் . கோயில் பிரகாரத்தை சுற்றி வருகையில் ஒரு ஓரமாக ரிதேஷ் நின்று இவளைக் கவனிப்பது அவள் கண்ணில் பட்டது. „இவனுக்கு எல்லாம் எங்கே கடவுள் பக்தி இருக்க போகிறது? ரகு அத்தான் கேட்டதுக்கு வந்திருக்கிறான், இல்லாவிட்டால் கத்ரினுடன் எங்கையாவது கூத்தடிக்க கிளம்பி இருப்பான் „ என தன்னுள்ளே குமுறிக் கொண்டு கடவுள் தரிசனத்தை முடித்துக்கொண்டாள் .
எல்லோரும் வீடு திரும்ப காரில் ஏறியவுடன் சுருதி ரிதேஷிடம் திரும்பி „அங்கிள் சாமியிடம் என்ன கேட்டீர்கள் ? நீங்கள் கேட்பதை எல்லாம் சாமி கட்டாயம் தருவார் , தெரியுமா ? நான் சாமியிடம் இந்த வருடம் எனது வகுப்பில் நான் தான் முதலாவதாக வர வேண்டும் என்று கும்பிட்டேன் . நீங்கள் என்ன கும்பிட்டீர்கள் என்று சொல்லுங்கள் அங்கிள் “ என்று மழலை பேச்சில் வற்புறுத்தினாள் .
ரிதேஷ் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று யோசித்து விட்டு „சுருதி இந்த கேள்வியை ஆர்த்திக்காவிடமே கேள் . அவள் தான் ஏதோ மிகவும் கெஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தாள்“ என்று ஆர்த்திக்காவை குறும்பு பார்வை பார்த்தான் . ஆர்த்திகா திடுக்கிட்டாள் . „இவன் எங்கே என்னை நோட்டம் விட்டிருக்கிறான்? இப்படி சொல்கிறானே! என எண்ணி விட்டு சுருதியிடம் திரும்பி „நானும் சுருதிக் குட்டி தான் முதலாவதாக வர வேண்டும் என்று கும்பிட்டேன்“ .
அதற்குள் குறுக்கிட்ட ரிதேஷ் „கோயிலுக்குச் சென்று விட்டு வரும் பொழுது பொய் சொல்லக்கூடாது என்று கேள்விப்பட்டிருகிறேன் என்று கூறி விட்டு நகைத்தான் . ஆர்த்திக்காவுக்கு ஒரே ஆத்திரம் . நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை என்று மிக மெலிதாக தனக்குள்ளே முணுமுணுத்தாள். இவனுக்கு என்ன நடந்தது இன்று ? ஒரேயடியாக அலட்ச்சியப்படுத்துகிறவன், ஏன் இன்று எனது காலை வாருகிறான்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .
அதற்குள் ஷோபி அக்கா ரிதேஷிடம் புதுவருடமும் அதுவுமாக வீடு சென்று என்ன செய்யப்போகிறீர்கள் ? வாருங்களேன் எமது வீட்டுக்கு . மிக ருசியான தமிழ் சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் பின்னர் உங்கள் வீடு செல்லலாம் என்று உபசரிப்புடன் அழைத்தார் . ரிதேஷ் ஒரு கணமும் தயங்காது சம்மதித்தது ஆர்த்திக்காவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
தொடரும் 

மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.