புதியவை

நானும், என் மாமாவும், திகனயும்!... - இப்னு அஸூமத்-
எங்கள் ஊருக்குப் பக்கத்தில்தான்
தெல்தெனிய என்றொரு
ஊர் இருந்தது...
விக்டோரியா நீர்த் தேக்கம்
அந்த ஊரை மறைக்க
மக்கள் போய் குடியேறிய ஊரும்
அங்கிருந்த மக்கள்
படியேறிய ஊருமாக
திகன மாறியது...
பக்கத்து ஊர்தான் திகன
இப்படி
பற்றும் ஊர் என நான் எதிர்பார்க்கவில்லை!...
நடந்து செல்வோம்
பொடி நடையாய் அப்போது
குறுக்குப் பாதை இருந்தது
இப்போது அது
பெருத்துப் போனதால்தான்
இத்தனைப் பிரச்சினையும்!
அம்பாறையில்
முஸ்லிம் கடைக்கு
குடித்துவிட்டுப் போய்
மாட்டிறைச்சியுடன் கொத்துரொட்டி
கேட்கிறான்
சிங்கள பௌத்தன்!
திகனயில்
குடித்துவிட்டுப்போய்
அடித்துக் கொள்கிறான் முஸ்லிம்!
இந்த இருவருக்குமாகவா
இனங்கள் அடித்துக் கொள்ள வேண்டும்?...
அழகாயிருந்த
அமைதியாகவிருந்த
அம்பாறையையும் - திகனயையும்
அழித்து விடுகிறீர்களே?...
உங்களுக்கு
மலட்டு வில்லைகள் கொடுத்தால் என்ன
விதையோடு அறுத்தாலென்ன?...
மக்கள்
இவ்வளவு கேவலமாகிப் பேனார்களா?
எந்த ஆட்சியிடம் போய் கேட்பது?
'தூங்குகிறீர்களா மகனே'?
என
தூங்கிக் கொண்டிருக்கும் என்னை
அடிக்கடித் தட்டியெழுப்பிக் கேட்கும்
எனது மாமா
அண்மையில்தான் திகன மண்ணுக்குள்
நிம்மதியாகத் தூங்கப் போனார்!...
அவ்வளவு அமைதியாக இருந்த மண்!
விக்டோரியா ஆறு ஓடும்
விடியலில் உட்கார்ந்து
தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருப்போம்!...
வெய்யில் எரித்தாலும்
வீசும் குளிர்க் காற்று
வெறும் உடம்பில் அதை வாங்கி
வீதி வழியே
வளைந்து செல்வோம்....
'ஐயே!' என
என் மாமாவைக் கூப்பிடுhவர்
குமாரசிங்ஹ!
'மல்லி மெயா மகே பேனா'
என்பார்
என்னைக் காட்டி என் மாமா!
ஆனால் இன்று?
குமாரசிங்ஹவைக் கொன்றுவிட்டு
என்னால் அங்கு போக முடியுமா?
இல்லை
கொத்துரொட்டி சாப்பிட
குமாரசிங்ஹவின் தந்தையால்தான்
என்னுடன்
அம்பாறைக்கு வர முடியுமா?...
என் மாமாவைக் காணும் போதெல்லாம்
என்னிடம் கேட்பார்
'மகன் இன்றைக்கு என்ன
கவிதை எழுதினீங்க?' என..
நான் சொல்வேன்!
'எங்கட ஊரைப் பற்றியும் எழுதுங்களேன்'
என்பார்!....
இன்றவர் இல்லை
திகன மண்ணுக்குள் தூங்குகின்றார் !
என்றாலும் நான் சொல்ல வேண்டும் -
'மாமா!
திகனயைப் பற்றி எழுதினேன்
இன்று!
- இப்னு அஸூமத்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.