புதியவை

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்.. வித்யாசாகர்
மிக இனிமையான நாட்கள் அவை
காலையில் வரும் சூரியனைப்போல
அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..
ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின்
ஒருநாள் சிட்டுக்குருவியொன்று
கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை.,
காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி
அன்றைய தினத்தின் பரிசாக
இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு..
விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில்
நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர
நான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து
முகம் பார்த்து பார்த்து தலை சாய்த்து சாய்த்து
கத்துவதைக் கண்டதெல்லாம்
அழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்
அந்த கிரீச் கிரீச்சென கத்தும்
சிட்டுக்குருவிகளின் மொழிக்கான அர்த்தத்தை
மௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்
தங்கையின் இல்லாயிடம்
உயிருக்குள் அப்படி வலித்ததுண்டு
தங்கையைப்போல் சிட்டுக்குருவிகளும்
எனக்கு மறப்பதேயில்லை..
எங்கள் வீட்டு ஜூலி
வாசலிலமரும் சிட்டுக்குருவிகளுக்கு
இன்னொரு தோழி,
ஜூலி சிட்டுக்குருவிகளை விடுவதேயில்லை
ஓடியோடி அவைகளை துரத்தும்
சிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்
வவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்
விடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..
தூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்
பீறிட்டுவரும் சூரிய ஒளியோடு
ரக்கை படபடக்க வந்தமரும்
ஒரு சிட்டுக்குருவியின் முகத்தில்
ஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை
எத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது
எனக்கு சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்
என் வீட்டு கூரைமீதும் ஒன்றுதான்
யாருக்கு எப்படியோ;
எனக்கந்த என் காதலியின் வீட்டு சன்னலும்,
வீட்டுவாசலில் கருப்புசாமியாய் வளர்ந்திருந்த
வேப்ப மரத்தடியும்,
உடைந்தக் கண்ணாடிச்சில்லுகளில் தெரியும்
நினைவுகளாக
அந்நாட்களின் மொத்த வாழ்வுமே
அந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது.,
சிட்டுக்குருவியோடான நாட்கள்
உண்மையிலேயே எனக்கு
மிக இனிமையானவை..

வித்யாசாகர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.