புதியவை

ஜெர்மனிமீரா, எழுதும் மலருமா" "வசந்தம்அத்தியாயம், 10அன்று முழுவதும் ஷோபி அக்காவும் ரகு அத்தானும் ஒரே ரிதேஷ் புராணம் தான் . ஒரேயடியாக புகழ்ந்து தள்ளினார்கள் . வழமையாக எரிச்சல் படும் ஆர்த்திக்கா அன்று மட்டும் ரிதேஷிடம் கோபம் கொள்ளவில்லை மாறாக ஏதோ ஒரு உற்சாகம் அவளை தொற்றிக் கொண்டது .ஏன் இந்த உற்சாகம் தன்னிடம் ஒட்டிக்கொண்டுள்ளது என்பது தெரியாமல் அவள் குழம்பினாலும் புத்தாண்டின் வருகை புது பொழிவை தந்துதுள்ளது என்று தன்னையே சமாதானம் செய்துக்கொண்டாள்.
மறு நாள் விடுமுறை முடிந்து வேலை மீண்டும் தொடங்கும் நாள் . வழமைக்கு மாறாக ஆர்த்திக்கா தனது உடையில் கவனம் செலுத்தினாள் . பஸ் தரிப்பிடத்தில் நிற்கும் பொழுதும் கண்கள் மட்டும் அந்த சிவப்பு நிற போர்ஷ வாகனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது . அவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக அன்று அந்த சிவப்பு போர்ஷ வாகனம் மட்டும் அவளை தான்டி செல்லவில்லை . ஆர்த்திக்காவுக்கு ஏமாற்றம் தொற்றிக் கொண்டது .
ஆனாலும் அவளுக்கு தனது உணர்ச்சிகளை உணர்ந்துக் கொள்ளமுடியாமல் மனதளவில் தத்தளித்தாள் . ஒருவாறு நிறுவனத்தை அடைந்த பொழுது அங்கே அந்த வாகனம் ததனக்கான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்தாள். ஒரு துள்ளலுடன் உள்ளே சென்ற ஆர்த்திக்காவுக்கு தனது கண்களை நம்பவே முடியவில்லை . அவளது மேசையில் ஒரு அழகிய பூங்கொத்து ஒன்று காத்திருந்தது . நிச்சயமாக இதை ரிதேஷ் தான் வைத்திருக்க வேண்டும் .
பூடகமாக நன்றி தெரிவிக்கிறானோ என ஆவலுடன் பூங்கொத்துடன் இணைக்கப்பட்டிருந்த சிறு குறிப்பை எடுத்துப் பார்த்தாள் . ஆனால் அதிலோ மைக்கின் பெயர் காணப்பட்டது . ஆர்த்திக்காவுக்கு ஒன்றுமே புரியவில்லை . கத்ரின் தனது கதிரையிலிருந்த படியே „ஆர்த்திக்கா நீ பெரிய கெட்டிகாரி , எமது நிறுவனத்தின் பிரபலமான ஒருவரை வந்த கையோடு பிடித்துக்கொண்டாய்“ என மிக நக்கலாக உரைத்தது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது . பதில் ஒன்றும் கூறாது ஆர்த்திக்கா தனது கடமைகளை செய்வதில் கண்ணாக இருந்தாள் .
ரிதேஷுக்கு கோப்பி கொண்டு போகையில் ஒரு எதிர்பார்ப்புடன் அவனை நோக்கினாள் . அவனோ இவள் உள்ளே வந்ததை கவனியாது தன் கணனியில் வழமை போன்றே ஆழ்ந்திருந்தான் . ஆர்த்திக்காவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. „வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டது போலும் . நேற்று அவன் எவ்வளவு சகஜமாக எல்லோருடனும் பழகினான் . இன்றோ அதே கடுகடுப்பு முகம் . அதே அலச்சியம். என்ன மனிதன் அப்பா இவன்!“ தன்னுள்ளே அவனை வைதுக்கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேற முற்படுகையில் ரிதேஷின் குரல் தடுத்தது.
அதாவது உரத்த குரலுடன் அவளை நோக்கி கோபமாக „ ஹேய் ஆர்த்திக்கா, மலர் பூங்கொத்து மைக் தந்துவிட்டான் என்று வேலை நேரத்தில் அவனுடன் கூத்தடிக்காமல் வேலையில் கவனத்தை செலுத்தவும் . உங்கள் உல்லாசத்துக்ககாக இந்த நிறுவனம் இல்லை. எத்தனையோ வாடிக்கையாளர்கள் எம்மை நம்பி இருக்கிறார்கள் . அவர்களுக்குச் சேவை செய்வதற்கு உனது முழு கவனமும் வேலையில் இருக்கவேண்டும் . என்ன நான் சொல்வது காதில் ஏறியதா“ என்று உறுமி விட்டு மீண்டும் தனது வேலையில் ஆழ்ந்தான் .
ஆர்த்திக்காவுக்கு கண்ணை அரித்துக்கொண்டு கண்ணீர் வந்தது . கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் . ரிதேஷின் கத்தலை கேட்ட கத்ரினோ சந்தோஷப்பட்டாள் . மாலை நேரமானவுடன் மைக் ஆர்த்திக்காவின் முன்னர் ஆவலுடன் பிரசன்னம் ஆனான். ஆர்த்திக்காவும் மரியாதை நிமித்தம் அவனது பூங்கொத்துக்கு நன்றி கூறினாள் . சாராவும் அவளை அழைத்துச் செல்ல அந்நேரம் அங்கு வருகை தர மூவருமாக ஒன்றாக வீடு திரும்பக் கிளம்பினர் .
மைக், „தான் ஆர்த்திக்கா என்ற அழகிய பெயருக்கு ஏற்றவாறு மலர்கள் வாங்க எவ்வாறு பல கடைகளில் தேடியதாகவும் ஆனால் தான் தேடிய குறிப்பிட்ட பூக்கள் கிடைக்காது கடைசியில் இவைகளை தான் தன்னால் அர்ப்பணிக்க முடிந்ததாகவும் புழுகித் தள்ள ஆர்த்திக்கா ஆற்றாமையினால் குலுங்க குலுங்கச் சிரித்தாள் . அவளது சிரிப்பு சத்தம் கேட்டு வெளியே வந்த ரிதேஷ் அவளை கண் இமைக்காது பார்ப்பதை கத்ரினும் கண்டு கொண்டாள் .
ஆர்த்திக்கா, சாரா , மைக் மூவரும் ஒன்றாகச் செல்வதை ரிதேஷ் யோசனையோடு பார்த்து விட்டு தனது இருக்கையில் அமர்ந்தவன் மீண்டும் அவனால் அவனது வேலையில் கவனத்தை செலுத்த முடியவில்லை . கண்களை இடுக்கிக் கொண்டு சஞ்சலத்துடன் தவிப்பதை காண சில நேரங்களுக்கு முன்னர் சந்தோஷம் அடைந்த கத்ரின் நெஞ்சில் இப்பொழுது பொறாமை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது . ஆர்த்திக்கா ரிதேஷை எப்படியோ பாதித்து விட்டாள் என்பதை மட்டும் அவள் நன்றாகவே விளங்கிக்கொண்டாள் . இதனை இப்படியே வளர விட்டால் நான் இவ்வளவு நாளும் கட்டின ஆசை கோட்டை சிதைந்து விழவேண்டியது தான் . இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்ட வேண்டும் தன்னுள்ளே கங்கணம் கட்டிக் கொண்டாள் .
தொடரும்
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.