புதியவை

ஜெர்மனிமீரா,எழுதும் தொடர் கதை "மலருமா வசந்தம்" அத்தியாயம் 9ஷோபி அக்காவின் வீடு நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் சுற்றாடலிலேயே அமைந்திருந்தது . சிறிய வீடாக இருந்தாலும் அன்பும் ஆனந்தமும் குடியிருக்கும் வீடு என்பதை அதன் அழகிய தோற்றமே எடுத்துக்காட்டியது. வீட்டின் வரவேற்பறையில் தமிழர் வீடுகளில் தவறாது காணப்படும் இரு குத்து விளக்குகள் பளபளக்க உள்ளே வருவோரை வரவேற்றது .
ஷோபி அக்காவும் ரகு அத்தானும் ரிதேஷை மிகவும் மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்கள் . ஆர்த்திக்கா " இவனுக்கெல்லாம் என்ன ராஜ மரியாதை வேண்டிக் கிடக்கிறது“ என்று தன்னுள்ளே பொருமினாள் . சுருதியும் ரிதேஷின் கையை பற்றியபடி உள்ளே இழுத்துக்கொண்டு சென்று வரவேற்பறையிலிருந்த சோபாவில் இருத்தி விட்டு தொலைக்காட்சியை இயக்கி விட்டாள் . அவளுக்கு பிடித்தமான பர்பி நிகழ்ச்சி ஒளிப்பரப்பாவதைக் கண்டவுடன் அவனருகிலேயே இருந்து நிகழ்ச்சியை ரசிக்க தொடங்கினாள்.
ரகு அத்தானும் ரிதேஷுக்கு அருகே இருந்த கதிரையில் அமர்ந்தவாறு இங்கிலாந்து அணிக்கும் ஜேர்மன் நாட்டுக்கும் அன்று நடைபெற இருக்கும் நட்பு ரீதியான உதைப்பந்தாட்ட போட்டி பற்றி இருவரும் சுவாரசியமாக உரையாடத் தொடங்கினர் . ஷோபி அக்கா சமையல் அறையை நாட ஆர்த்திக்காவும் அவரைப் பின் தொடர்ந்து சென்று ரிதேஷுக்கு விருந்து படைப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள் . சமையல் முடிந்து எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது .
ஆர்த்திக்கா, ஷோபி அக்கா கஷ்டப்பட்டு சமையல் செய்து பரிமாறினாலும் தினமும் விலை உயர்ந்த உணவு விடுதிகளில் சாப்பிட்டுப் பழகிய இந்த ரிதேஷுக்கு எமது வீட்டு உணவு எங்கே ருசிக்கப்போகிறது ? பாவம் ஷோபி அக்கா, என்று அவரிடம் மிகவும் பரிதாபம் கொண்டாள் . ஆனால் ரிதேஷ் விருந்தை உண்ணத் தொடங்கியதும் அவன் அதை மிகவும் ரசித்து உண்ணுவதை காண அவளுக்கு மீண்டும் ஆச்சரியம் ஏற்பட்டது. உண்மையைக் கூறுவதாயின் ரிதேஷுக்கும் அங்கு பரிமாறப்பட்ட உணவு தேவாமிர்தமாக இருந்தது . ஒரே மாமிச வகையறாக்களாக ஸ்டீக்யும் (Steak) நூடிலும் (Nudel) பீசா(Pizza) போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு பழகிய ரிதேஷ் அன்று சோறும் கத்தரிக்காய் குழம்பும் வெண்டைக்காய் வதக்கலும் என்று தமிழர் உணவை மிகவும் ஆசையுடன் உண்டு முடித்தான் .
அத்துடன் உணவிற்கு பிறகு பரிமாறப்பட்ட பாயாசத்தை இரு முறை கேட்டு வாங்கி உண்டான் . ஷோபி அக்காவுக்கு ஒரே சந்தோஷம் . ஒரு பெரிய நிறுவனத்தின் இளைய முகாமையாளர் தனது வீட்டில் உணவு அருந்துவது அவருக்கு ஏனோ ஒரு பெருமிதத்தைக் கொடுத்தது . ரிதேஷ், அக்கா அத்தான் மத்தியில் மிகவும் சாதாரனமாகவே பழகினான் . சுருதியுடன் கூட அவளுக்கு ஏற்ற வகையில் அவளது வினாக்களுக்கு முகம் சுளிக்காது பதில் உரைத்தான் .
ஆனால் ஆர்த்திக்காவை மட்டும் ஏறெடுத்தும் பார்ப்பதை தவிர்த்தான். உணவு முடிந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கதைக்க தொடங்குகையில் ரிதேஷ், ஷோபி அக்காவிடம் திரும்பி திருமதி ரகு அவர்களே, அடுத்த முறை நீங்கள் பாயாசம் செய்யும் பொழுது தவறாது எனக்கும் அழைப்பு அனுப்பி விடுங்கள் . உங்கள் பாயாசத்தின் ருசி தனி ருசி தான்! என்று மனமாரப் பாராட்டினான் .
அதற்கு ஷோபி அக்கா, பாயாசம் வேண்டும் என்றாள் நீங்கள் ஆர்த்திக்காவை தான் அழைத்துச் செல்ல வேண்டும் . ஏனென்றால் பாயாசம் ஆர்த்திக்காவின் கை வரிசை! என்று பதில் உரைக்க ஆர்த்திக்கா திடுக்கிட்டு ரிதேஷை நோக்க அவனும் இவளையே நோக்கிக் கொண்டிருந்தான் . ஒரு நிமிடம் இருவர் கண்ணும் சந்தித்து உலகம் சுற்றுவது அப்படியே நின்று போயிற்று இருவருக்கும் .
பின்னர் ஒருவாறு சமாளித்த ரிதேஷ் அவளை நோக்கி ஒரு மெல்லிய புன்னகை செய்தான் . எப்பொழுதும் கடு கடுத்த முகத்துடன் காணப்படும் ரிதேஷ் முகம் அந்த புன்னகையின் போது ஒரு அழகான மாற்றத்தைப் பெற்றது . ஒரு சிறு புன்னகை ஒருவரை எப்படி அடியோடு மாற்றம் பெற வைக்கிறது என்று ஆர்த்திக்கா தனக்குள்ளே வியந்தாள் . ஒரு நடிகனைப் போன்று மிகவும் கவர்ச்சிகரமாக அவன் தோற்றம் அளித்தான் . அப்படியே ரிதேஷின் உருவம் ஆர்த்திக்காவின் நெஞ்சில் ஆணித்தரமாகப் பதிந்தது.
ஆர்த்திக்காவுக்கு நெஞ்சில் ஒரே படபடப்பு. ஏன் என்று அவளுக்கு புரியாவிட்டாலும் அவளும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு தரையை நோக்கினாள் . ரிதேஷும் எல்லோரிடமும் நன்றி கூறி விட்டு விடைப்பெற்றுச் சென்றான் . ஆர்த்திகாவிடமும் தன் கண்களினால் விடை பெற்றான் .
தொடரும் ........
மீரா , ஜெர்மனி


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.