புதியவை

மனத்தையே உலுக்குதே (கவிதை) எம்,ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா


                                                                 
                  
                    இந்திய எண்ணமோ இமயத்திற் பெரியது
                   இந்திய தேசமோ ரிஷிகளைப் பெற்றது
                    என்றுமே யாவரும் வியத்திடும் வேளையில்
                   வந்திடும் சேதிகள் மனத்தையே உலுக்குதே
                                               
                    சங்கரர் காலடி சன்மார்க்கம் தந்தது
                    எங்குமே கோவில்கள் இதயமாய் இருக்குது
                    சங்கடம் நாளுமே பெருகியே வருகுது
                    எங்குதான் இந்தியா போகுதோ தெரியலை
 
                   மண்ணினை தாயென மதித்த நற்தேசமே
                   புண்ணிய நதியெலாம் பெண்ணெனப் போற்றினை
                   கண்ணென மதித்தவுன் பெண்ணினை நாளுமே
                   மண்ணிலே மிதிப்பதை மனுக்குலம் பொறுக்குமா
 
             உண்ணுகின்ற உணவுக்கு அன்னமெனப் பெயரிட்டு
             உணவளிக்கும் போதெல்லாம் அன்னலக்‌‌ஷிமி எனவழைத்து
             காணுகின்ற போதெல்லாம் கண்ணியமாய் சொல்லிசொல்லி 
             காறியே உமிழ்கின்ற காட்டுத்தனம் ஏன்தானோ
                                  
              வாழுகின்ற மண்ணதனை தாயெனவே அழைத்திட்டு
              பேசுகின்ற மொழிதன்னை பெண்மையினால் பெயரிட்டு
              வாசமென திகழ்கின்ற மாண்புமிகு பெண்ணினத்தை
              நாசமுறச் செய்வதனால் நாடெல்லாம் கலங்குதிப்போ
 
              உதிரத்தை பாலாக்கி உயிரூட்டும் பெண்மைதனை
              உலகெங்கும் உயர்வாக மதிக்கின்ற வேளையிலே
              ஊர்நடுவே கூடிநின்று உருக்குலைக்கும் உலுத்தர்தமை 
              ஆருள்ளார் தடுப்பதற்கு அக்கூட்டம்  அழிவதற்கு 
 
                பாஞ்சாலி கதறியதும் பார்த்திபனே உதவிநின்றாய்
                பலபெண்கள் கதறுவதுன் காதினுக்கு கேட்கலையா
                நஞ்சுநிறை வஞ்சகரால் நாசமுறும் பெண்ணினத்தை
                 நாராயணா நீயும்  பாராதிருப்ப தென்ன
 
               நீகொடுத்த சேலையினால் நிமிர்ந்துநின்ற பெண்ணினத்தை
               நீசரின்று கெடுக்கின்றார் நீகண்ணா பார்க்கலையோ
              ஓலமிடும் பெண்ணினத்தை உன்கரத்தால் அணைப்பதற்கு
              ஓடிவந்து உதவிவிடு உலகளந்த உத்தமனே
 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.