புதியவை

பிஞ்சு நிலா (உருவகக் கதை)எஸ். முத்துமீரான்பெருமைக்கும் புகழ்ச்சிக்குமுரிய பேரரசன் அண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அவனின் ஆளுமையில் கட்டுண்டு, அண்டம் அணு பிசகாமல் அசைந்து கொண்டிருக்கிறது. புன் சிரிப்போடு, பிஞ்சு நிலா வானத்தில் ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து, கருமுகில்கள் பொறாமை கொண்டு, அதைச்சிறைப் பிடிக்க வருவதைக் கண்டு, பயந்து நடுங்கி ஓட கருமுகில்கள் எக்காளமிட்டு சிரிக்கின்றன. பாவம்! கருமுகில்களின் சிறையில் அகப்பட்ட பிஞ்சு நிலா அழுகிறது. மகிழ்வோடு இருந்த மண், பிஞ்சு நிலாவுக்கு ஏற்பட்ட வேதனையைப் பார்த்து சோபை இழந்து இருளாக்கிக் கிடக்கிறது. ஒழித்திருந்த கூகையும், கோட்டான்களும் விழித்துக் கூக்குரலிடுகின்றன. பிஞ்சு நிலாவின் சோகத்தில் செருக்குற்று, கருமுகில்கள் அகங்காரம் கொண்டு எக்காளமிட்டு சிரிக்கும் போது, பெருமையின் அதிபதியான ஆண்டவன், அமைதியே உருவாகி இருக்கிறான். அழகிழந்து கருமையாகிப் போன பிஞ்சு நிலா, தன்னுடைய நிலையை இறைவனிடம் கூறிப் பிரார்த்தித்தது. "இறைவா! என் நிலையைப் பார்த்தாயா? என் அழகையும், இளமையையும் இந்த முகில்கள் அழித்து விட்டன.
என்னை இன்முகம் காட்டி நேசித்த மண், கவனிக்காமல் கிடக்கிறது. நான் பறிகொடுத்த அழகையும், இளமையையும் பெற்றுத்தந்து விடு". என்று கெஞ்சியது. முகில்கள் பிஞ்சு நிலவை மேலும் மேலும் சிறை பிடித்துக் கொண்டிருந்தன. வேதனையின் விளிம்பில் நின்று அழும் பிஞ்சு நிலா, தொடர்ந்து படைப்பின் அதிபதியைத் துதித்துக் கொண்டே இருந்தது. நிலவின் கண்ணீரில் கலங்கிய காலதேவன், நேத்திரங்களை விலக்கி அண்டத்தை நோக்கினான். அடங்காப் பெருமையில் வீழ்ந்த முகில்கள் மேலும், மேலும் பிஞ்சு நிலவை வெளிவரமுடியாமல் அடக்கிக் கொண்டிருந்தன. பிஞ்சு நிலா, இடைவிடாமல் இறைவனிடம் கெஞ்சி துதித்துக் கொண்டிருந்தது. மண்ணும் அழுதது. பிஞ்சு நிலவின் கண்ணீரில் கட்டுண்ட இறைவன் மண்ணை நோக்கினான். மறுகணம், குளிரில் அகப்பட்ட முகில்கள் வேதனையில் கசிந்து, மழையைப் பொழிந்து கொண்டிரு ப்பதால் மண் மகிழ்ச்சியடைந்து சிரித்தது. சிறைப்பட்டு வேதனையில் மறைந்திருந்த பிஞ்சு நிலா, மண்ணைப் பார்த்து புன்னகைக்க வானம் நிறைந்த வெள்ளிகள் பூரித்தன. எங்கும் பிஞ்சு நிலாவின் ஆட்சி. அகங்காரம் கொண்டு ஆணவம் பேசிய மேகங்கள், மழையாகப் போய் மதியனின் பாதங்களில் சங்கமமாகி விட்டதால், ஈசன் சிரிக்கிறான். பிஞ்சு நிலா, படைப்பின் தத்துவத்தில் உண்மையையறிந்து மீண்டும் ஆண்டவனைத் துதித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் தென்னோலைக் கீற்றினூடே படம் வரையும் பிஞ்சு நிலாவில் மகிழ்ந்து இளந்தென்றல் மண்ணை வருடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் ஆளுமையில் தத்துவங்கள் முகிழ்விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்க காலதேவன், கையிலுள்ள சுருக்கில் கண்ணாயிருக்கிறான்.

 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.