புதியவை

வாழ்க்கை உருவகக் கதை- எஸ். முத்துமீரான்.அண்டம் அதன் மைய புள்ளியில் இருந்து சுழன்று கொண்டிருக்கின்றது . அதில் அணு அசைவதையும் ஆண்டவன் நோக்கிக் கொண்டிருக்கிறான் . இறைவனின் ஆளுமையின் முன்னே, தேவர்கள் பனிக் கட்டிகளாக, உருகிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது, உலகின் ஒரு மூலையில், நாடகமொன்று, ஈசனின் நெறியாள்கையில் மேடையேறிக் கொண்டிருக்கின்றது. பசியின் அகோர பிடியில் சிக்குண்டு, கிழவன் ஒருவன், வேதனையோடு குந்திக்கு கொண்டிருக்கின்றான். கிழவனின் குருதியைக் குடிக்க, நுளம்பு ஒன்று போராடிக் கொண்டிருக்கிறது. நுளம்பு கிழவனின் குருதியைக் குடிக்க முயற்சிக்கும் போதெல்லாம், கிழவன் அதைக் குடிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றான். போர்க் களம் உக்கிரமாகிறது, காலத்தில் தோல்வியுற்ற நுளம்பு, வேதனையோடு பறந்து போய் குடிசையின் ஒரு மூலையில் குந்திக் கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறான். எமன் எக்காளமிட்டு சிரிக்கிறான். போர்க் களத்தில் தோல்வி கண்ட நுளம்பு, சோகத்தோடு இறைவனிடம் பிரார்தித்தது. "இறைவா! என் பரிதாப நிலையைப் பார்த்தாயா? கருவில் இருக்கும் சீவனுக்கும் காலம் தவறாது உணவளிக்கும் நீ, ஏன் என்னைப் போட்டு சோதிக்கிறாய்? இந்தக் கிழவன், அவனிடம் நான் நெருங்கும் போதெல்லாம், என்னை அடித்துத் துரத்துகிறான். என்னால் பசியை தாங்க முடியாமல் இருக்கிறது. நானும் உன் படைப்புத் தானே.! நேரம் தவறாமல் எனக்கு உணவளிப்பது உன் கடமையல்லவா? எனக்குரிய உணவை தந்து விடு, இல்லா விட்டால் என் சீவனை எடுத்து விடு." என்று கூறி இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தது. வேத நாயகன் நுளம்பின் பிரார்தனையைப் பார்த்து சிரிக்கிறான். ஈசனின் நெறியாள்கையில் மேடையேறிக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பார்த்து எமன் லயித்துப் போய் நிற்கிறான். அப்பொழுது, மீண்டும் நுளம்பு உணவிற்காக வந்து, கிழவனோடு போராடிக் கொண்டிருக்கிறது.
போர்க்களத்தில், ஆண்டவனின் தத்துவங்கள் கருக்கட்டி, ஒளியாகித் தெறிப்பதை பார்த்து, தேவர்கள் வாய் மூடி மௌனிகளாகி நிற்கின்றனர்.
படைத்தவன் நுளம்பின் அறியாமையை எண்ணிச் சிரித்து, "கருவில் வளரும் கரு விற்கும், கல்லுக்குள் வாழும் தேரைக்கும் காலம் தவறாது உணவளிக்கும் நான்தான், அவைகளின் வாழ்வையும் வினாடியும் தவறாமல் கணித்துக் கொண்டிருப்பவன். என்னால் தீர்மானிக்கப் பட்ட ஒவ்வொரு சீவனின் உணவையும், அவைகளுக்கு குறைவின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது சத்தியம்." என்று கூறுகிறான்.
அண்டம் அமைதியாகச் சுழன்று கொண்டிருக்கிறது. பசி, சென்னியைத் தாண்ட, நுளம்பு மீண்டும் மீண்டும் கிழவனைத் தாக்கிக் கொண்டிருக்கிறது.
நுளம்பின் வாழ்க்கையின் இடைவெளியை, ஈசன் முழுமையாக்கி விட, எமன் சிரிக்கிறான். விரல் நொடிக்கும் நேரம், நுளம்பின் சீவனோடு, ஆண்டவனின் சன்னிதானத்தில் நிற்கிறான் எமன்.
போர்க்களத்தில் வெற்றி பெற்ற களிப்பில் கிழவன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.
எல்லாம் வல்ல இறைவன், அண்டத்தை அணு பிசகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். தேவர்கள் அவனைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்.
நாடகம் அரங்கேறி விட்டது.

 - எஸ். முத்துமீரான்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.