புதியவை

ஈழத்தவருக்குக்கிடைத்த பெருங் கெளரவம்    எங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள்.
பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை
சைக்கிளிலும் போய்வருவோம்.
 யாழ் கல்விப் பணிமனையிலும், தீவகக் கல்விப் பணிமனையிலும் ஐயாவுடன்
ஒன்றாகவே வேலை செய்திருக்கிறோம்.அவர் அப்பொழுது ஆசிரிய ஆலோசக
ராயும் பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளராயும் இருந்திருக்கிறார்.
  அவருடன் சேர்ந்து பாடசாலைகளுக்கு மேற்பார்வை செய்யும் பொருட்டுச்
செல்லுவதென்பது மிகவும் கலகலப்பாக இருக்கும். எந்த வேளையும் ஏதாவது
ஒரு விஷயத்தைச் சுவாரசியமாகச் சொல்லி எங்களையெல்லாம் உற்சாகப்
படுத்தியபடியே இருப்பார். அவர் இருக்கும் இடங்களெல்லாம் சிரிப்புக்கும்
மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. அதேவேளை அறிவுபூர்வமான விஷயங்
களையும் எமக்கெல்லாம் அள்ளி வழங்குவார்.
  பாடசாலைகளின் தமிழ்த் தினப் போட்டிகளை ஒழுங்கு படுத்துவதில் அவர்
மிகவும் வல்லவர். வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டிகளை
நடத்துவதற்கு வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளாரால்
ஐயாவை நியமித்தது -  எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாகவும் சொல்ல
முடியாத ஆனந்தமாயும் இருந்தது. ஐயாவின் தமிழ் ஆற்றலை நாங்கள் பல
இடங்களில் வியந்து பார்த்திருக்கிறோம்.
  அவர் மேடைகளில் பேசினால் யாவரும் தம்மை மறந்து கேட்டுக் கொண்டே
இருப்பார்கள். சுவையாகாவும் ஹாஸ்யமாகவும் கருத்துக்களோடும் அவரின்
பேச்சு அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் எல்லா மேடைகளிலும் ஐயா அவர்
களின் பேச்சு இடம் பெற்ற படியேதான் இருக்கும்.
  பேச்சினில் மட்டுமல்ல. எழுத்திலும் ஐயா மிகவும் வல்லவர். கவிதை, கட்டுரை , விமர்சனம், நாடகம், சிறுகதை, என்றெல்லாம் அவரின் எழுத்தாற்றல் விரிவடைந்தே
இருந்தது.வில்லுப்பாட்டினையும் அவர் விட்டுவைக்கவில்லை. கருத்தோடு நல்ல
பாடல்களோடு நகைச்சுவையாக அவரின் வில்லுப்பாட்டுகள் இருக்கும். பாடசாலை
கலை விழாக்களில் நிச்சயமாக ஐயாவின் வில்லுப்பாட்டு அமைந்தே இருக்கும்.
    கவிபுனையும் ஆற்றலினால் அவரை நாங்கள் அனைவரும் சின்ன ' வீரமணி ஐயா '
என்றே அழைப்பதுண்டு. அவரின் கவியரங்கத்தை  மிகவும் சிறப்பாக நாங்கள் 
ரசிப்போம். அவரின் வாழ்த்துக் கவிதைகள் இன்றும் பலரின் வீடுகளில் யாழ்ப்பணத்தில் பத்திரமாய் இருக்கிறது.
   ஐயாவின் பல நண்பர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பகுதியில்
துறைத் தலைவர்களாகவும், பேராசிரியர்களாவும் இருக்கிறார்கள். அவரின் கல்வி
சார்ந்த நட்புவட்டம் விரிந்தது. கூடவே இருக்கும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட 
எல்லைக்கு அப்பால் சென்றதில்லை. ஆனால் ஐயாவோ அவற்றையெல்லாம்
கடந்து பெரியளவில் சிந்தித்து பெரியளவில் நட்புபினைத் தேடிக் கொள்ளுவார்.
    எந்தநேரமும் புத்தகமும் கையுமாகவே அவரை நாங்கள் கண்டிருக்கிறோம்.
பல நூல்களையும் தேடித்தேடி தனதுவீட்டில் ஒரு சிறிய நூலகத்தையே ஐயா
அவர்கள் வைத்திருந்தார்.எங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் ஐயாவீடு
சென்று தீர்க்கும் அளவுக்கு அவரின் அறிவுத்தேடல் இருந்தது என்பது முக்கியமாகும்.
     " வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்குகிறது " என்பதற்கு எங்கள் ஜெயராமசர்மா
ஐயா நல்லதொரு எடுத்துக்காட்டு என்பது எங்களின் எண்ணமாகும்.
        இலக்கியம் இலக்கணம் ஐயாவுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் . ஐயாவுக்கு
மொழியியல் என்றால் பெருவிருப்பம். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு
ஐயா எட்டு வருடங்கள் மொழியியலைக் கற்பித்திருக்கின்றார். இது தொடர்பான
பல கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார். இலக்கணத்தை இலகுவாகக் கற்பிப்பது
பற்றி மாணவர்களுக்கு நூலும் எழுதியிருக்கிறார். இவர் இலக்கணம், மொழியியல்
கற்பிப்பது - இலக்கியம் கற்பிப்பதுபோலச் சுவையாகவே இருக்கும். அவருடன் பாட
சாலைகளுக்கு மேற்பார்வைக்காகப் போகுப் பொழுது உயர்வகுப்பு மாணவருக்கு
அவர் கற்பிக்கும் பாங்கினைப் பார்த்து நாங்கள் வியந்ததோடு அதில் நாங்களும்
பலவற்றை எங்களுக்காகவும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
     ஐயாவின் ஆற்றலினை அறிந்த வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு
வடக்குகிழக்கு மாகாண தமிழ்த்தினப் போட்டியினை நடத்துதற்கு செயலாளராக
ஐயாவையே நியமித்தார்கள். இரண்டு மாகாணத்தின் பாடசாலைப் போட்டிகளை
ஐயா திறம்பட நடத்திய காரணத்தால் அப்போதைய செயலாளர் டிவகலால் பெருதும்
வியந்து பாராட்டி தனிப்பட்ட முறையில் நன்றியும் தெரிவித்தார். மாகாணக் கல்விப்
பணிப்பாள் சிவானந்தன் அவர்களும் ஐயாவின் செயல்திறனை வியந்து நின்றார்.
     போகும் பொழுதும் வரும் பொழுதும் தமிழ் பற்றியே பேசுவார். பல எழுத்தாளர்கள்
பற்றிச் சொல்லுவார். அவர்களின் படைப்புகள் பற்றி விமர்சிப்பார். நாங்கள் யாவரும்
சுவாரிசியமாகக் கேட்டுக்கொண்டு வருவோம். அவரின் பக்கத்தில் இருந்தால்
அலுப்பே தெரியாது. சிரித்து மகிழ்ந்த படியே இருக்கலாம்.
   பாடசாலைகளுக்கு மேற்பார்வைக்குச் செல்லும்பொழுது ஐயா இல்லாவிட்டால்
எங்களுக்கு செல்லவே பிடிக்காது.அவர் வந்தால் அந்த மேற்பார்வை ஆனந்தமாக
எங்களுக்கு அமைந்துவிடும்.
      ஐயா என்றால் கலகலப்பு. ஐயா என்றால் அகமகிழ்ச்சி . என்றுதான் நாங்கள்
நினைத்துக் கொண்டேயிருப்போம். 
   நாட்டின் சூழ்நிலை காரணமாக ஐயா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார் 
என்றுதான் கேள்விப்பட்டோம். நாங்கள் திசைக்கொருவராய் இருந்தபடியால்
என்ன நடக்கிறது என்பதை உடனேஅறியமுடியாதவர்களாகவே அப்போது இருந்தோம். பின்னர்தான் அறிந்தோம் ஐயா அவுஸ்திரேலியா சென்றுவிட்டார்
என்று. 
     கலகலப்பான எங்கள் ஐயா வெளிநாட்டில் என்பது எங்களுக்குக் கவலைதான்.
ஆனால் அவரின் சூழல் அவரை அன்னிய நாட்டுக்குச் செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது என்று நாங்கள் எங்களை தேற்றிக் கொண்டோம். சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் நல்லூர் முருகன் கோவில் வாசலில் ஐயாவையும்
அம்மாவையும் கண்டோம். அம்மா இருந்ததையும் பொருட்படுத்தாமல் ஐயாவைக் கட்டியணைத்தே விட்டோம். வீதியில் நின்றவர்கள் எங்களையே பார்த்தபடி இருந்தார்கள்.
     அவ்வளவு அளவில்லாத சந்தோஷம் எங்களுக்கு. நாங்கள் கனவுதான் காணுகிறோமா என்றுதான் எண்ணினோம் ! நிறையப் பேசினோம்.எங்கள்
ஐயாவைக் கண்டதும் பழையன யாவும் படமாக வந்தது. 
   " உணர்வுகள் " என்னும் கவிதை நூலினை யாழ் பல்கலைக்கழகத்தில் கைலாச
பதி அரங்கில் வெளியீடு செய்வதற்காகவே வந்ததாக ஐயா கூறினார்கள். அவுஸ்திரேலியா சென்றும் தமிழை விடாத எங்கள் ஐயாவை நாங்கள் நிமிர்ந்து
பார்த்தோம். 
  அதன்பின்னர் பலதடவை யாழ்ப்பாணம் வந்திருந்தார். மாநாடுகளில் கலந்து கொள்ளவந்திருந்தார். சென்றவருடம் மீண்டும் ஒரு நூலினை வெளியிட யாழ்
வந்திருந்தார். 
   " பன்முகம் " என்னும் நூல் யாழ் பல்கலைக்கழகத்தில் ஐயாவால் வெளியிடப்பட்டது.
    ஐயாவின் படிப்படியான வளர்ச்சி எங்களுக் கெல்லாம் மிகவும் ஆனந்தமாகவே
இருந்தது. 
     ஆனால் இம்முறை ஐயாவைப் பற்றி வந்த செய்தியினால் நாங்கள் அனைவருமே
அசந்தே விட்டோம் !
  எங்களுடன் ஒன்றாய் இருந்த ஐயா ! எங்களுடன் கைகோர்த்து நடந்த ஐயா !
இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டாரே எனும் பொழுது ஐயாவுடன் கூட இருந்திருக்
கிறோம் எனும் எண்ணம் எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றுதான் எங்கள்
மனம் சொல்லியது !
    எங்கள் ஜெயராமசர்மா ஐயாவை தமிழ்நாட்டு அரசாங்கம் கெளரவித்து 
" உலகத்தமிழ்ச்சங்க மொழியியல் " விருதினை வழங்கியிருக்கிறது என்பதை
எங்களாலேயே நினைத்துப் பார்க்கமுடியாமல் இருந்தது. விருது மட்டுமல்லாது
அவருக்கு ஒரு லட்சம் இந்திய ரூபாயும் அரசாங்கம் வழங்கிக் கெளரவப் படுத்தி
இருக்கிறது. உண்மையில் ஜெயராமசர்மா ஐயாவைக் கெளரவப் படுத்திய இந்த
நிகழ்வு எங்கள் எல்லோருக்கும் பெருங் கெளரவம் என்றுதான் நாங்கள் கருது
கின்றோம். ஐயாவுக்குக் கிடைத்த கெளரவம் ஈழத்துத் தமிழ் அறிஞருக்குக் கிடைத்த
பெருங் கெளரவமாகவே அமைகிறது அல்லவா ! 
     ஐயாவை நாங்கள் நண்பராகக் கொண்டிருந்தோம் என்பதை நினைக்கின்ற
பொழுது நாங்கள் அனைவரும் பேருவகையும் பெருமிதம் கொள்ளுகின்றோம்.
    யாழ் மண்ணைவிட்டு ஐயா அவர்கள் ஆங்கில நாட்டுக்குச் சென்றாலும் அன்னைத்
தமிழை மறக்காமல் அதன் வழி செல்லுவது தமிழர்கள் அனைவருக்கும் நல்ல ஒரு
முன்மாதிரி என்றுதான் நாங்கள் எண்ணுகிறோம்.
   ஐயாவின் இந்தக் கெளரவத்தை நாங்கள் மனமாரக் கொண்டாடிப் பெருமைப்
படுவதுபோல் ஐயாவாழும் இடத்திலுள்ள தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் 
ஐயாவைக் கனம் பண்ணுவது அவசியமாகும். ஐயாவைக் கனம் பண்ணினால்
அன்னைத் தமிழைக் கனம் பண்ணுவதற்கு ஒப்பாகும் என்று நாங்கள் கருதுகிறோம்.
     தமிழ்நாட்டின் மொழியியல் விருதினைப் பெற்றுக் கொண்ட ஐயாவை 
வாழ்த்தி வணங்குகின்றோம்.


    திரு  ச . சண்முகநாதன்
       முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர்
          தீவகக் கல்வி வலயம்

   திரு ம . குகதாசன் 
    முன்னாள்   பிரதிக் கல்விப்பணிப்பாளர்
         யாழ் கல்வி வலயம்


   திரு வி. தம்பையா
     முன்னாள்   உதவிக் கல்விப்பணிப்பாளர் 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.