புதியவை

ஜெர்மனிமீரா ,எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 12வஞ்சனை செய்யும் எண்ணத்திலிருந்த கத்ரினுக்கு, அதற்குரிய சந்தர்ப்பம் மிக விரைவிலேயே கிட்டியது . ரிதேஷ் ஒரு பணக்கார ஜேர்மன் நாட்டு வாடிக்கையாளருடன் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்காக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் .அதன் விபரம் மிகவும் இரகசியமானதும் பல இலச்சம் பெறுமதியானதுமாகும் .
ரிதேஷும் கத்ரினையும் தவிர வேறு ஒருவரும் இவ் ஒப்பந்தத்தை பற்றி அந் நிறுவனத்தில் அறிந்திருக்கவில்லை . அவற்றுக்கான பத்திரங்களை ரிதேஷ் எப்பொழுதும் தன் கையிருப்பிலே வைத்திருந்தான் . அவ் ஜேர்மன் நாட்டு வாடிக்கையாளர் முதலீட்டுக்கான முதல் தொகையை ஏற்கனவே ரிதேஷிடம் கொடுத்து வைத்திருந்ததனால் அப் பணமும் ரிதேஷின் பெட்டகத்திலேயே இருந்தது . அதன் சாவியை ரிதேஷ் மிகவும் கவனமாக தன்னுடனேயே வைத்திருந்தான் .
நாளை அந்த ஜேர்மன் நாட்டு வாடிக்கையாளருடன் ஒப்பந்தம் இடும் நாள் . இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாகக் கை கூடினால் அது ரிதேஷுக்கு மட்டும் இன்றி அந்த நிறுவனத்துக்கே கிடைத்த பெரும் வெற்றியாக அமையும் . பல நிதி நிறுவனங்களிடையே நிலவும் போட்டியில் ஒரு பெரிய வாடிக்கையாளரை வென்றெடுத்த பெருமை இவர்களையே சாரும். அதனால் நாளைய தினம் ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய முக்கிய நாளாகும் .
அதற்குரிய விசேட ஆயத்தங்களில் ரிதேஷ் தானே முன்னின்று ஈடுபட்டான் . அவ்வாறு வெளியே ரிதேஷ் சென்றவுடன் ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்து நின்ற கத்ரின் அத்தருணத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டாள். அவனது அறைக்குள் மெல்ல வந்த கத்ரின் அங்கே ஞாபக மறதியாக ரிதேஷ் மேசையில் பெட்டகத்துக்கான சாவியை விட்டு சென்றிருந்ததை அவள் கவனித்தாள் . உடனே நயவஞ்சகமாக அச் சாவியை கொண்டு பெட்டகத்தை திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வந்தவள் ஆர்த்திக்கா இல்லாத சமயமாக பார்த்து அவளது இலாச்சியிலேயே பணத்தை வைத்தும் விட்டாள்.
எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்து விட்டு திருப்தியுடன் திரும்பி வந்து தனது இருக்கையில் சாய்ந்தான் ரிதேஷ் . இவனைக் கண்டதும் ஒன்றும் அறியாதவள் போல உள்ளே வந்த கத்ரின், " என்ன ரிதேஷ் ஆயத்தம் எல்லாம் நிறைவாக முடிந்தததா ? நாளைய தினத்தை நினைக்கையில் ஒரே பரபரப்பாக இருக்கிறது எனக்கு. மீண்டும் ஒரு முறை முதலீடு பணத்தை எண்ணி பார்த்து சரியாக எவ்வளவு இருக்கிறது என்று எனக்கு கூறினாள் நான் அதற்கேற்றவாறு ஒப்பந்த பத்திரத்தை சரியாக தயார் படுத்த உதவியாக இருக்கும், ஆகவே மீண்டும் ஒரு முறை பணத்தை எண்ணிப்பார்த்து கூற முடியுமா ? “ என்று மெதுவாக அவனை உசுப்பியும் விட்டாள் .
சரி என்று எழும்பிய ரிதேஷ் தனது சாவிக்கொத்தை தேடினால் அது அவனிடம் இல்லை . எப்படி இருக்கும் ? கத்ரின் தான் அச் சாவியை ஆர்த்திக்காவின் மேசையின் கீழ் தந்திரோபயமாக போட்டு விட்டாளே . 
ரிதேஷ் மிகுந்த பதட்டத்துடன் தனது மேசை முழுவதும் தேடினான் . சாவி இல்லை . அவனது பீரோக்கள் என்று எல்லா இடமும் நன்கு தேடியும் கிடைக்காமல் கத்ரினை மீண்டும் கூப்பிட்டான் . கத்ரினோ தான் அச் சாவியை காணவே இல்லை என்று ஒரேயடியாக மறுத்து சாதித்தாள். அத்துடன் ஆர்த்திக்கா இவ் அறைக்கு அடிக்கடி வருவதினால் அவளிடமும் விசாரிக்கும் படியும் எடுத்தும் கூறினாள்.
ரிதேஷ் வேறு வழி இன்றி ஆர்த்திக்காவை கூப்பிட்டான் . ஆர்த்திக்கா வந்தவுடன் ரிதேஷ் அச் சாவியைப் பற்றிக் அவளிடம் கேட்டான் . ஆர்த்திக்காவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. தான் அப்படி ஒன்றையுமே காணவில்லை என்று எடுத்து உரைத்தாலும் கத்ரின் அவளை விடுவதாக இல்லை . ரிதேஷிடம் அவன் இல்லாத வேலையில் ஆர்த்திக்கா அந்த அறையை நாடுவது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அதனால் ஆர்த்திக்காவின் மேசை இருக்கைகளை நன்கு தேடிப் பார்த்தாள் தான் தெரியும் என்று விறு விறென்று அவளது இடத்திற்குச் சென்று தேடுவதாகப் பாசாங்கு செய்து கடைசியாக மேசையின் கீழிருந்த கூடையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் .
ஆர்த்திக்காவுக்கு ஒன்றுமே புரியவேவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றாள் . தான் என்றுமே கண்டிராத இந்தச் சாவி எவ்வாறு தனது கூடைக்குள் வந்தது ? அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை ! ரிதேஷிடம் திரும்பி தான் அதை எடுக்கவில்லை என்று கூற எத்தனிக்கும் பொழுதே ரிதேஷ் இவளைக் கடும் கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருந்தான் . அவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி இருந்தது . விறு விறுவென்று தனது அறைக்கு சென்று பணம் பத்திரமாக இருக்கிறதா என்று தனது பெட்டகத்தை திறந்துப் பார்த்தால் அவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது .
அவனால் அதற்கு மேல் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது " „ஆர்த்திக்கா இங்கே உடனே வா! மரியாதையாக இங்கிருந்து எடுத்த பணத்தை திரும்ப தந்து விடு அல்லாவிடில் உன் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கப் போகிறேன்!“ என்று கண் மண் தெரியாது கத்தி முடித்தான் . 
ஆர்த்திக்காவின் பாரா முகத்தினால் ஏற்கனவே பாதிக்கப் பட்டு இருந்த ரிதேஷ் அவளை நோக்கி „பட்டிக்காட்டு பெண்களை வேலையில் சேர்த்து மரியாதை கொடுத்தால் இது தான் பலன் . அத்துடன் பொய்யும் களவும் வேறு . தருணம் பார்த்து திருடும், இப்படி பட்டவர்களை இனி மேல் உள்ளே நுழைய முன்னரும் வெளியே செல்ல முன்னரும் நன்றாகப் பரிசோதித்து விட்டுத் தான் இனிமேல் நிறுவனத்துள் அநுமதிக்க வேண்டும் . எனக்கு தெரியாமல் என்னென்ன பொருட்களை களவாடி உள்ளாளோ என்று“ கண்மண் தெரியாது எல்லோர் முன்னிலையிலும் ஆர்த்திக்காவை நோக்கி கத்தினான்.
ஆர்த்திக்காவுக்கோ அவமானம் தாங்காது கூனிக் குறுகி நின்றாள் . கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க பெண்கள் அறையை நாடி ஓடோடிச் சென்று குலுங்கி குலுங்கி அழுது முடித்தாள் . தன்னை இந்த நிலம் கபீளகரம் செய்து விழுங்கி விடாதா என்று ஏங்கினாள் . இப்படி ஒரு பெருத்த அவமானத்தை அவள் வாழ்வில் என்றுமே சந்தித்ததில்லை. அதுவும் நேர்மைக்கு பெயர் போன குடும்பத்தில் பிறந்து பொய் களவு என்ற நாமமே அறியாத பேதை அவள் . அவளைப் போய் ரிதேஷ் இப்படி ....
எத்தனையோ மணித்தியாலங்கள் சென்ற பின்னர் மெதுவாக தயங்கிய படியே வெளியே வந்தாள் . தான் நிரபராதி என்று எவ்வாறு எல்லோரையும் நம்ப வைப்பது என்பதே அவளுக்கு புரியவில்லை . அதற்குள் இச் சம்பவத்தை கேள்வியுற்று மைக்கும் சாராவும் அவளிடம் விரைந்து வந்தனர் . மைக் ஆர்த்திக்காவிடம் ஆறுதலாக „ஆர்த்திக்கா உன்னை எனக்கு நன்றாகத் தெரியும் . நீ எவ்வளவு நேர்மையானவள் என்று எனக்கும் சாராவுக்கும் புரியும். ஆகவே கவலைப் படாதே . நாம் இருக்கிறோம்“ என்று தேற்ற முயற்சித்தான் . ஆனால் ஆர்த்திக்காவிற்கு அவள் விம்மலை அடக்கவே முடியவில்லை . சாராவும் அவளை முயன்றவரை தேற்றிக்கொண்டிருந்தாள் .
ஆர்த்திக்கா திரும்பி அறைக்கு வந்த நேரம் ரிதேஷ் மீண்டும் வெளியே சென்று விட்டிருந்தான் . கத்ரின் இறுமாப்புடன் மிக குரோதமாக தான் அப்பணத்தை ஆர்த்திக்காவின் இலாச்சியிலிருந்து கண்டெடுத்ததாகவும் அதை ரிதேஷ் பாதுக்காப்பாக வைப்பதற்கு சென்று விட்டதாகவும் உரைத்தாள். ஆர்த்திக்காவினால் ஒன்றையும் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஏன் அவளுக்கு மட்டும் இப்படி துன்பங்கள் சூழ்கின்றன. அதுவும் தவறு எதுவும் செய்யாமலே வீண் பழியைச் சுமக்க வேண்டி உள்ளதே !
ஒருவாறு மிகுதிப் பொழுதைப் போக்கி விட்டு ஆர்த்திக்கா குனிந்த தலையுடன் வீடு வந்து சேர்ந்தாள் . ஆனால் அந்த பேதைக்கு வீட்டிலும் ஒரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருப்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை .
தொடரும் 

மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.