புதியவை

ஜெர்மனிமீரா எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 13" பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்“ என்ற பழமொழி ஆர்த்திக்காவின் வாழ்வில் பெரும் உண்மையாக போயிருந்தது. மிகுந்த சோகத்துடன் வீடு வந்த அவளுக்கு ஷோபி அக்கா ஒரு அதிர்ச்சி தரும் செய்தியுடன் காத்திருந்தார் . அதாவது ஆர்த்திக்காவின் அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பம் பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டு அவளை ஒரு வாரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிப்புடன் கடிதம் ஒன்று காத்திருந்தது .
கடிதத்தைதை வாசித்த ஷோபி அக்கா இடி விழுந்தது போல அதிர்ச்சியுடன் ஆர்த்திக்காவின் வருகையை எதிர்பார்த்திருந்தார் . தனக்கு ஒரு சொந்த தங்கை இல்லாத குறையை ஆர்த்திக்காவின் பாசம் நிவர்த்தி செய்திருந்தது . சமையல் அறை என்றால் என்ன, சுருதியை அக்கறையுடன் கவனிப்பது என்றால் என்ன, என்று ஒவ்வொரு செயலிலும் ஆர்த்திக்கா முன்னின்று துணை நின்றதனால் ஷோபி அக்கா ஆர்த்திக்காவில் மிகுந்த பாசம் கொண்டிருந்தார் . திடு திப்பென்று அவளைத் திருப்பி அனுப்புவதென்பதை அவரினால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை .
ஆர்த்திக்கா அன்றைய நிகழ்ச்சியினால் அவமானத்தால் கூனி குறுகி வீடு வந்த அவளுக்கு இந்த அதிர்ச்சி செய்தி மேலும் திக்கு முக்காட வைத்தது . இறைவா ஏன் என்னை இவ்வாறு சோதனை செய்கிறாய்? என்று கடவுளிடமே கேட்டு கண்ணீர் வடித்தாள் . அவளது மனத்திரையில் போன வாரம் தான் தம்பியிடம் பேசும் பொழுது ஒரு ஐபோட் வாங்கி அனுப்புவதாக வாக்குறுதி அளித்தது நினைவில் வந்தது . " அம்மாவும் எவ்வளவு மன நிறைவுடன் பேசினார் . தனது வேலையினால் தங்கள் வாழ்வு ஓரளவு மேம்படப் போகுது என்று சந்தோஷப்பட்டாரே “ . இப்பொழுது தான் மீண்டும் வெறுமனே திரும்பிப் போகப்போவதை எண்ணி அவளுக்கு மிகவும் துயரமாகப் போய்விட்டது .
அடுத்த நாள் வழமை போல அலாரம் அடிக்க எழுந்தவள் முன்னைய நாள் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வர மீண்டும் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள் . இனி ஒரு வாரத்துக்குள் ஆர்த்திக்கா நாடு திரும்ப வேண்டும் . அவளால் இனி வேலை இடம் சென்று ரிதேஷைக் காண்பது என்பதும் இயலாத காரியம் . சாராவுக்கும் மைக்குக்கும் இந்த செய்தியை தொலைபேசி மூலமாக தெரிவித்து விடலாம் .
வேலையை தான் இராஜனாமா செய்வதைக் கடிதம் மூலம் நிறுவனத்துக்கு தெரிவித்து விடுவது தான் ரிதேஷை இனி சந்திக்காது தவிர்ப்பதற்கு சிறந்த வழி எனவும் தீர்மானித்துக்கொண்டாள் . ஆனால் தான் ஒரு நிரபராதி என்பதை ஒருவருக்கும் குறிப்பாக ரிதேஷுக்கு நிரூபிக்க முடியாது போனதைப் பற்றி அவளுக்கு சிறிய வருத்தம் தான் என்றாலும் அவனின் செய்கைகள் ஆர்த்திக்காவை நடத்திய விதம் என்பன அவனிடம் அவளுக்கு வெறுப்பையே ஏற்படுத்தி இருந்தது .
ஆனால் அன்று காலை ரிதேஷ் தான் ஆர்த்திக்காவை அவமானப்படுத்தியதை எண்ணிப் பார்க்கும் பொழுது அவனுக்கு மனம் உறுத்தியது . ஒரு சிறு விடயத்திற்காக தான் அவளின் மேல் இப்படி ஏறி விழுந்தான் என்பதை அவனால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை . நீண்ட காலமாக அயராது உழைத்து அந்த ஜேர்மன் நாட்டு வாடிக்கையாளருடன் ஒப்பந்தம் கை கூடி வரும் வேளையில் ஒரு மிகப் பெரிய தொகையை தொலைப்பதனால் இழக்கப் போகிறோமோ என்ற பதட்டத்தில் ஆர்த்திக்காவிடம் கொஞ்சம் அதிகமாகவே கோபப்பட்டு விட்டேனோ என்று அவனது மனம் சஞ்சலப்பட்டது .
ஆர்த்திக்காவும் தான் நிரபராதி என்று மீண்டும் மீண்டும் கூற எத்தனித்த வேளையில் தான் அதை முற்றாக காதில் வாங்காது அவளையே குற்றம் சாட்டியது ஒரு வேளை பிழையாக இருக்குமோ? இன்று அவள் வேலைக்கு வந்தவுடன் சாதாரணமாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று தன்னுள் நினைத்துக்கொண்டான் . தான் ஆத்திரத்துடன் கத்தியதும் ஆர்த்திக்கா கண்களில் கண்ணீருடன் கலங்கி நின்ற அவள் உருவம் அவன் மனதில் ஆழமாக பதிந்திருந்தது .
கொஞ்சம் ஆர்வத்துடனே அவன் தனது காரை எடுத்துகொண்டு வேலைத் தளத்துக்குப் புறப்பட்டான் . ஆர்த்திக்கா காத்திருக்கும் பஸ் தரிப்பிடமும் வந்தது . ஆனால் அவளை அங்கு காணவில்லை . சுற்றும் முற்றும் பார்த்தான் . சிலவேளை தாமதமாக வருகிறாளோ என்று வேகத்தை குறைத்து மெதுவாகச் சென்றும் பார்த்தான் . ஆனால் கண்ணுக்கு எட்டிய அளவுக்கு அவள் உருவம் மட்டும் தென்படவில்லை . சரி வேலைத் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டான்.
தொடரும்
மீரா , ஜெர்மனி
 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.