புதியவை

ஜெர்மனிமீரா,எழுதும் "மலருமா வசந்தம்" அத்தியாயம் 14அவனது நிறுவனத்தை போய் சேர்ந்ததும் அவனது கண்கள் ஆர்த்திக்காவை தேடியது . ஆனால் அவள் இருக்கையில் இல்லை . தனது அறைக்கு சென்று வழமை போன்று தனது வேலையில் ஆழ்ந்தான் . காலை கோப்பி நேரம் வர யாரோ கதவை தட்டுவதை கேட்டதும் ஆவலுடன் உள்ளே வர அனுமதித்து விட்டு ஆர்த்திக்காவை எதிர்பார்த்து காத்திருந்தான் . ஆனால் கத்ரின் உள்ளே வந்து அவனது கோப்பியை கலந்து கொடுக்க ரிதேஷுக்கு ஒரே ஏமாற்றமாக போய் விட்டது . கத்ரினிடம் ஆர்த்திக்காவைப் பற்றிக் கேட்க அவனுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது . கத்ரினும் அம்முக்கிய ஒப்பந்தத்தை பற்றியும் அதன் ஏற்பாட்டை பற்றியும் சாதாரணமாக உரையாட அவனும் வாடிக்கையாளரை வரவேற்கத் தயாரானான் .
ஒப்பந்தமும் கூடி எல்லாம் நல்லபடியாக வெற்றிகரமாக முடிந்தது . அவ் வெற்றியை கொண்டாட எல்லாரும் ஒன்று கூடினர் .
அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஒருவர் மாறி ஒருவர் ரிதேஷைப் பாராட்டிக் கை குலுக்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். ஆனால் ரிதேஷுக்கு ஏனோ சந்தோஷப்படமுடியாது போய்விட்டது . அவன் மனம் ஆர்த்திக்காவை எண்ணி ஏங்கத் தொடங்கியது .
இவ்வாறே அடுத்தடுத்த நாட்களும் கடந்து சென்றன . ஆர்த்திக்காவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருந்த ரிதேஷுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது . அவளைப் பற்றி மற்றவரிடம் கேட்பதற்கு ஏனோ அவனது அகங்காரம் ஈடு கொடுக்கவில்லை . ஒவ்வொரு நாளும் ஆர்த்திக்காவின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினான் . அவனது எண்ணங்கள் ஆர்த்திக்காவையே சுற்றி சுற்றி வந்தன .
வழமையாக கோப்பி நேரம் என்றால் எவ்வளவு அமைதியாக உள்ளே வந்து தனது கடமைகளைச் செய்வாள் ஆர்த்திக்கா . முக்கிய கடிதங்களைக் கூட பிழை இன்றி செவ்வனே தட்டச்சு செய்து தருவது தொடக்கம் எல்லாக் காரியங்களையும் அவள் திறம் படச் செய்வதை நினைவு கூர்ந்து அவளது திறமைகளை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினான் ரிதேஷ் . இப்படி அவளுக்கு காத்திருந்து ஒரு வாரமாக அவள் வேலைக்கு வராததினால் ஆற்றாமையுடன் கத்ரினிடம் ஆர்த்திக்காவை பற்றி இறுதியாக விசாரித்தான் . கத்ரினும் மிகவும் அலட்ச்சியமாக ஆர்த்திக்காவின் இராஜானமா கடித்தைதைப் பற்றி குறிப்பிட, ரிதேஷ் ஒரு பெரிய இழப்பை சந்தித்ததைப் போன்று அப்படியே மனம் தளர்ந்து விட்டான் .
இந்த அதிர்ச்சித் தகவலைக் கேட்ட ரிதேஷுக்கு உடனே ஆர்த்திக்காவை சந்திக்க வேண்டும் போல இருந்தது . தனது காரை எடுத்துகொண்டு ஒரு கணமும் தாமதியாமல் அவளது அதாவது ஷோபி அக்காவின் வீட்டிற்கு விரைந்து சென்றான் . கதவின் மணியை அடித்து விட்டு மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்க ஷோபி அக்கா வந்து வாசல் கதவை திறந்தார் . ஷோபி அக்காவிடம் ரிதேஷ் தயக்கத்துடன் " வந்து ... ஆர்த்திக்கா கடந்த ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை . அதன் காரணத்தை தெரிந்துக் கொள்ளவே வந்திருக்கிறேன் . அவளுடன் கொஞ்சம் பேச முடியுமா“ என்று மிக தன்மையாக வினவ ஷோபி அக்காவுக்கு அவனிடம் சினம் தான் வந்தது . கோபத்துடன் „ஏன் நீங்கள் ஆர்த்திக்காவை அவமதித்தது போதாது என்று இங்கேயும் வந்திருக்கிறீர்களா ? என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள் .
ஒரு நல்ல குடும்பத்து பெண் ஆர்த்திக்கா . மிகவும் நேர்மையானவள். உண்மையைக் கண்டறியாது அவளிடம் குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். அவள் மனதை சரியாக துன்புறுத்தியுள்ளீர்கள் . இனி உங்களுக்குக் கவலை வேண்டாம் . ஆர்த்திக்கா தனது நாட்டிற்கே திரும்பச் சென்று விட்டாள் . பாவம் அவள், ஆற்றாக் கவலையுடன் யாழ்ப்பாணம் திரும்பிச் சென்று விட்டாள். உங்களுக்கு இப்பொழுது சந்தோஷம் தானே“ என்று ஷோபி அக்கா ரிதேஷிடம் மிகவும் கடிந்து கொண்டார் . இதைக் கேட்ட ரிதேஷ் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானான்.
„தான் கேட்பது சரியா என்று தன்னையே திரும்பக் கேட்டுக்கொண்டான்!“. இனி ஆர்த்திக்காவை சந்திக்கவே முடியாது போய்விடுமோ என்ற கவலை அவனைப் பெரிதும் வாட்டியது . ஷோபி அக்காவிடம் திரும்பி „என்னை மன்னித்து விடுங்கள் . நான் ஆர்த்திக்காவிடமும் மன்னிப்பு கேட்டு விடுகிறேன் . தயவு செய்து அவளது வீட்டு விலாசத்தையோ அல்லது தொலைபேசி இலக்கத்தையோ தாருங்கள்“ என்று கெஞ்சிக் கேட்டான் .
ஆனால் ஷோபி அக்காவோ ரிதேஷ், "ஆர்த்திக்கா மிகவும் திடமாகவும் முடிவாகவும் தனது விடயங்களை ஒருவரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறி உள்ளாள். ஆகவே மன்னிக்க வேண்டும் . அவளது அனுமதியின்றி என்னால் அவளைப் பற்றிய விடயங்களைத் தரமுடியாது“ என்று ஒரேயடியாக மறுத்து விட்டார் . மறுத்தது மட்டுமின்றி ரிதேஷ் இனி கிளம்பலாம் என்பது போல வீட்டுக்கதவை மூடுவதற்கு ஆயத்தமாக நின்றார் . ரிதேஷுக்கு ஷோபி அக்கா ஒரு வித தகவலும் தரப்போவதில்லை என்பதைப் புரிந்துக்கொண்டான் .
அவ்வேளை ஷோபி அக்கா வீட்டில் தொலைக்காட்சியில் திரைப்படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது . அந்நேரம் ஒலித்த " இமையே இமையே விழியின் இமையே „ என்ற அந்த திரைப்பட பாடல் காற்றில் கலந்து மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய ரிதேஷின் காதில் வந்து ஒலித்தது .
https://www.youtube.com/watch?v=-I3L994na7o
ரிதேஷ் அப்பாடலை கேட்டு ஒரு கணம் அப்படியே உறைந்து நின்று விட்டான் . அப்பாடலில் ஒளிந்திருந்த உண்மை அவனை உசுப்பி எடுத்தது. தான் ஆர்த்திக்காவிடம் வயப்பட்டிருந்த உண்மையை அப்பாடல் எடுத்துக் கூறுவது போல இருந்தது . தான் எவ்வளவு முட்டாள் என்று தன்னையே கடிந்துக் கொண்டான் . வெறும் வரட்டுக் கொளரவம் கொண்டு தமிழ் பண்பாட்டையும் தமிழர் கலாச்சாரத்தையும் கீழ்த் தரமாக நினைத்துக் கொண்டாலும் தன் அடி மனதில் உறங்கிக் கொண்டிருந்த அந்த மேன்மையான பண்பாடும் கலாச்சாரமும் தன்னை அறியாது தனக்குள்ளே அடங்கி இருந்ததை அன்று தான் அவன் உணர்ந்தான் . நான் தமிழன் . ஆதலாலேயே தமிழ் பெண்மைக்கே இலக்கணமாக இருந்த பேரழகி ஆர்த்திக்காவிடம் ரிதேஷ் காதல் கொண்டிருக்கிறான் என்ற மறுக்க முடியாத உண்மையை அவன் அன்று பரிபூரணமாக உணர்ந்தான் .
தொடரும் 
மீரா, ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.