புதியவை

அலமந்து அழுகின்றார் ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா )


 
         வீசுகின்ற காற்றுக்கு விலைபேச முனைகின்றார்
         வெளிச்சந்தரும் வெயிலதனை விற்றுவிட எண்ணுகிறார்
         வான்பொழியும் மழையதனை மறைத்துவிட முயலுகிறார்
         மனிதர்செயும் இச்செயலால் மாநிலமே அழுகிறதே !

         ஆர்ப்பரிக்கும் கடலைக்கும் அவருரிமை கேட்கின்றார்
         அளவற்ற நீர்கொண்ட கடலினையும் பிடுங்குகிறார்
          ஆண்டவனின் கொடையான ஆறுகளைத் தடுக்கின்றார்
          அளவற்ற ஆணவத்துள் அமிழ்ந்துவிட்டார் அனைவருமே ! 

          ஓடிவரும் ஆறுகளை ஒடுக்கிவிட முயலுகிறார்
          தேடித்தேடி அணையெடுத்து திருப்புகிறார் தமக்கெனவே 
           நாடுவளம் தனையெண்ணி ஓடிவரும் ஆறுகளை
           கேடுகெட்ட எண்ணமுடன் கெடுக்கின்றார் பலருமிங்கே ! 

          ஆறுகளை ஆண்டவனாய் எண்ணிப் பூஜைசெய்கின்றார் 
          ஆறுகளைத் தொழுவதற்கு அநேகம்பேர் செல்லுகிறார் 
          புனிதமாய் நினைத்துநிற்கும் புவியிலுள்ள ஆறுகளை
          தனியுடமை ஆக்குதற்கு தான்பலபேர் முயலுகிறார் ! 

           ஆறுகளை அரசியலாய் ஆக்கிவிட்ட காரணத்தால்
           அறம்வளர்ந்த நாட்டினிலே மறமோங்கி நிற்கிறது 
           ஆண்டாண்டாய் பூஜைசெய்து ஆறுகளைப் போற்றிநின்றார்
           ஆணவத்தின் எழுச்சிகண்டு அலமந்து அழுகின்றார் ! 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.