புதியவை

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய கட்டுரை நூலுக்கு சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு


           வந்தவாசி. மே.21. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, 
கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ 
கிடைத்துள்ளது.

           கடந்த 46 ஆண்டுகளாக சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 
15 ஆண்டுகளாக  தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் 
பரிசுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. 

           2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையிலுள்ள
சர் பிட்டி தியாகராயர் அரங்கில் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. 

           இவ்விழாவிற்கு, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையேற்றார். 
சி.வி.சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார். 

             2017-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூல்களுக்கான
பிரிவில் சிறந்த நூலாக கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் 
நூல் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.5000/- பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும்
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கினார்.

             சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசினைப் பெற்ற கவிஞர் மு.முருகேஷ், 
வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட  கோட்டைத்  தமிழ்ச்  
சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் 
பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,
கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக
25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
      இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 
மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில் 
உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் 
அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின் இலக்கிய அமைப்பான 
சாகித்திய அகாடெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், கர்நாடகாவிலுள்ள மைசூரு, 
ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான இலக்கிய 
நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.
       இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 
2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் 
பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் 
பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் 
இடம் பெற்றுள்ளன. 
       சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள் 
உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் 
சிறுகதைகள்’ எனும் நூல்,  தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி, 
தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

            விழாவில், மாண்பமை நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன், முனைவர் சிலம்பொலி செல்லப்பன்,
பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் எவர்வின்
பி.புருஷோத்தமன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

              நிறைவாக, வானதி ராமநாதன் நன்றி கூறினார்.


இணைப்பு: படமும் குறிப்பும்.

     கவிதை உறவு அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், 2017-ஆம் ஆண்டு
வெளியான நூல்களில் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசை கவிஞர் மு.முருகேஷூக்கு
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கியபோது எடுத்த படம்
அருகில், மாண்பமை நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், 
கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் எவர்வின் பி.புருஷோத்தமன் ஆகியோர் உள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.