புதியவை

ஜெர்மனிமீரா ,எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 15ரிதேஷ் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக மெல்ல நடந்து வந்து தனது வாகனத்தில் ஏறினான் . அவனது இதயம் படபடவெனத் துடிக்கத் தொடங்கியது . ஆர்த்திக்காவை தான் ஒரேயடியாக தொலைத்துவிட்டேனோ என்ற பயம் அவனை தொத்திக்கொள்ள சோர்வுடன் வாகன இருக்கையில் சாய்ந்தான். இப்பொழுது தான் அவனுக்கு ஏன் தான் ஆர்த்திக்காவிடம் அடிக்கடி கோபம் கொண்டதன் காரணம் மெல்லப் புலப்பட்டது . தேவையில்லாமல் அவளைச் சீண்டியதும் அவளின் பாராமுகம் கண்டதும் ஆத்திரப்பட்டு அவள் மனதை வேண்டுமென்றே துன்புறுத்தியதும் ஏன் என்று நன்றாக விளங்கிக் கொண்டான் . தான் பெரும் தவறு இழைத்து விட்டதையும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதையும் எண்ணிக்கொண்டு நிறுவனத்தை வந்தடைந்தான் . அவனது மனம் முற்றாகக் குழம்பி இருந்தது .
வாகனத்தில் இருந்து தொய்ந்த முகத்துடன் இறங்கிய ரிதேஷைக் கண்டதும் கத்ரின் அவசரமாக ஓடி வந்து " என்ன ரிக், எமது மதிய உணவு ஏற்பாட்டை மறந்து விட்டீர்களா ? எத்தனை முறை கைத்தொலைபேசிக்கு எடுத்துப் பார்த்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை . எங்கே சென்றீர்கள்? என்று ஆற்றாமையுடன் குறைப்பட்டாள்“ .
ரிதேஷ் தனது கைத் தொலைபேசியை எடுத்துப் பார்த்தான் . கத்ரினின் தொலைபேசி இலக்கம் தவறப்பட்ட இலக்கமாக மூன்று தரம் விழுந்திருந்தது. அவனால் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இல்லாமையினால் " ஓ , மன்னிக்கவும், கவனிக்கவில்லை " என்று தனக்குள்ளே முணுமுணுத்து விட்டு தனது அறைக்கு சென்று தொப்பென்று கதிரையில் விழுந்தான் . ஒருவரையும் சந்திக்க அவன் மனம் விரும்பவில்லை. ஆர்த்திக்காவை உடனே சென்று எப்படியும் பார்க்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு .
கத்ரினிடம் அவளைப் பற்றி இனி கேட்பதில் பலன் ஒன்றும் இல்லை. யாரிடம் விசாரித்தால் ஆர்த்திக்காவை பற்றி அறியலாம் என்று யோசனை செய்யும் பொழுது சாராவின் நினவு வரவே உடனடியாக அவளைத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது அறைக்கு வருமாறு அழைத்தான். சாராவும் உடனே ஓடி வந்து „என்ன ரிக் , ஏதாவது பணி செய்ய வேண்டுமா?“ என்று ஆர்வத்துடன் வினவினாள் . ரிதேஷ் தயக்கத்துடன் " வந்து... ஆர்த்திக்காவின் தொடர்பு இலக்கம் வேண்டும் . அதை தந்தால்“ என்று கூறி முடிக்கும் முன்னரே இடை மறித்த சாரா, "ஏன் நான் அதை உங்களிடம் தர வேண்டும் ? நீங்கள் தானே வீண் பழி சுமத்தி அவளை அவமானப்படுத்தினீர்கள் . ஆகவே அவளைப் பற்றிய விடயங்களை தருவதற்கு நான் தயாரில்லை!“ .
ஆனால் ஏன் அதிசயமாக அவளைப் பற்றி இப்பொழுது விசாரிக்கிறீர்கள் என்று தான் எனக்கு புரியவில்லை ? இருந்தாப் போல உங்களுக்கு ஆர்த்திக்காவிடம் அதீத ஈடுபாடு எதுவும் வந்து விட்டதா ? அப்படி மட்டும் வந்திருந்தால் தயவு செய்து இப்பவே அதனை மறந்து விடுங்கள் . உண்மையைக் கூறுவதாயின் நீங்கள் அவளுக்கு ஏற்றவர் இல்லை . அத்துடன் என்னைப் பொறுத்தவரையில் ஆர்த்திக்காவுக்கு ஏற்ற ஜோடி மைக் தான் . மைக் எவ்வளவு இனிமையானவன் ! எவ்வளவு கனிவு உள்ளம் கொண்டவன் . மைக் ஆர்த்திக்காவிடம் அளவுக்கு அதிகமான ஆசை வைத்திருக்கிறான் . ஆகவே மைக்கும் ஆர்த்திக்காவும் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னை மன்னித்து விடுங்கள் , வேறு வேலை எதுவும் இல்லை என்றால் நான் விடை பெறுகிறேன் என்று சாரா ஒரேயடியாக பொரிந்து தள்ளி விட்டு கிளம்பிச் சென்றாள் .
ரிதேஷுக்கு மைக்கின் மேல் ஒரே பொறாமையாக இருந்தது . அவனால் ஏனோ ஆர்த்திக்காவை மைக்கிடம் விட்டுக்கொடுக்க ஒரு கணமும் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
ஆதலால் தனது வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாது தவித்தான் ரிதேஷ் . உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு தீர்மானம் எதுவும் இன்றி கிளம்பினான் .
வீடு வந்து சேர்ந்த ரிதேஷ் எவ்வாறு ஆர்த்திக்காவை கண்டு பிடிப்பது என்று கடுமையாக யோசித்தான் . கணணியூடாக கூகுளில் தேடிப் பார்த்தும் அவனால் அவளைப் பற்றிய விடயங்களைக் கண்டறிய முடியவில்லை . எப்படி முடியும்? இலங்கையின் வட மாநிலத்தில் எத்தனை பேர் இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும், பலர் தமது வாழ்வாதாரத்துக்காக வேறு கிராமங்களிலும் வசித்து வருகையில் வெளி நாடு போன்று கூகிள் வரைபடம் கொண்டு இலகுவாக கண்டு பிடிக்கும் நிலைக்கு ஸ்ரீலங்காவின் வட மாநிலம் மட்டும் இன்னமும் வரவில்லையே! கோர யுத்தத்தின் வடு இன்னமும் ஆறாமல் உயிர் வாழப் போராடும் மக்களின் மத்தியில் இங்கிலாந்தில் இருந்து கொண்டு ரிதேஷினால் ஆர்த்திக்காவை எப்படிக் கண்டு பிடிப்பது . அவளது விபரங்கள் தெரிந்து வைத்திருப்பவர்களும் தர மறுக்கையில் ரிதேஷுக்கு என்ன செய்வது என்று தெரியாது யோசித்தான் . ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது . அதாவது தான் எப்படியும் ஆர்த்திக்காவை தேடிப் பிடித்து அவளிடம் மன்னிப்பு கேட்பது என்பதும் அவள் மன்னித்து மறக்கத் தயாரானால் அவளை எப்படியும் மணப்பது எனவும் அவன் முடிவாக தனக்குள் நிச்சயித்துக்கொண்டான் . 
தொடரும் 
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.